Published:Updated:

பெங்களூரு: திருமணம் மீறிய உறவு; பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி- இளைஞர் கொலை வழக்கில் தம்பதி கைது

கைதானவர்கள்

திருமணம் மீறிய உறவிலிருந்த நபர், தன்னைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றதால், அவரைத் தன் கணவருடன் சேர்ந்து இளம்பெண் கொலைசெய்திருக்கிறார்.

பெங்களூரு: திருமணம் மீறிய உறவு; பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி- இளைஞர் கொலை வழக்கில் தம்பதி கைது

திருமணம் மீறிய உறவிலிருந்த நபர், தன்னைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றதால், அவரைத் தன் கணவருடன் சேர்ந்து இளம்பெண் கொலைசெய்திருக்கிறார்.

Published:Updated:
கைதானவர்கள்

கர்நாடக மாநிலம், பெங்களூரில், நைஸ் ரோடு பாலத்தின் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக, கடந்த 3-ம் தேதி, எலெக்ட்ரானிக் சிட்டி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சடலத்தை மீட்டு போலீஸார் விசாரித்ததில், இறந்தது பெங்களூரில் தங்கி கூலி வேலைசெய்யும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த நிபாஷிஷ் பால் (32) என்பது தெரியவந்தது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவந்த போலீஸார் நேற்று, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெயின்டர் கணேஷ் (32), அவர் மனைவி ரீனா (29), கணேஷின் நண்பர் பிஜாய் குமார் (28) ஆகியோரைக் கைதுசெய்தனர். கொலை குறித்து விசாரணை நடத்தியபோது, பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சடலத்தை எடுத்துச்செல்லும் சிசிடிவி காட்சி
சடலத்தை எடுத்துச்செல்லும் சிசிடிவி காட்சி

இது குறித்து எலெக்ட்ரானிக் சிட்டி போலீஸாரிடம் விசாரித்தோம். ‘‘கணேஷ்-ரீனா தம்பதி நான்கு குழந்தைகளுடன், பெங்களூரில் வசித்துவந்தனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான கணேஷ் அடிக்கடி வீட்டுக்கு வராமல் இருந்திருக்கிறார். இந்த நிலையில், ரீனாவுக்கு அதே பகுதியில் தங்கியிருக்கும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த நிபாஷிஷ் பாலுடன் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நிபாஷிஷ் பால் பணம் சம்பாதிப்பதற்காக, ரீனாவைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த பல முயற்சிகளை மேற்கொண்டதுடன், அவரைத் தாக்கியிருக்கிறார். இது குறித்து ரீனா தன் கணவரிடம் கூறிய நிலையில், கணேஷ் தன்னுடைய மனைவி ரீனாவுடன் இணைந்து, நிபாஷிஷ் பால் வீட்டுக்கு வந்தபோது, விஷ மருந்து கலந்த உணவை அவருக்குக் கொடுத்ததுடன், கழுத்தை நெரித்துக் கொலைசெய்திருக்கின்றனர்.

கைதான குற்றவாளிகள்
கைதான குற்றவாளிகள்

பின்னர், தன்னுடைய குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி, கணேஷ் தன் நண்பர் பிஜய் குமாரை வீட்டுக்கு வரவழைத்திருக்கிறார். சம்பவ இடத்துக்குவந்த பிஜய் குமார் நடந்ததையறிந்து, கணேஷுடன் இணைந்து, நிபாஷிஷ் பால் உடலைத் துணியால் சுற்றி, பைக்கில் எடுத்துக்கொண்டு, 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நைஸ் ரோட்டுக்குச் சென்றார். அங்கு ரோட்டோரம் உடலை வீசிவிட்டுச் சென்றிருக்கின்றனர். அதையடுத்து, கணேஷ், ரீனா தம்பதி வீட்டைக் காலிசெய்துவிட்டு, சரக்கு வாகனத்தில் பொருள்களை ஏற்றிக்கொண்டு பெங்களூருவிலிருந்து, 370 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவமோகா மாவட்டத்துக்குச் சென்றுவிட்டனர். முற்றிலுமாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும், சரக்கு வாகன டிரைவரின் தகவலின்படியும் அனைவரையும் கைதுசெய்திருக்கிறோம்" என்றனர்.