Published:Updated:

முன்னாள் போலீஸ் ஏட்டு கொலை; கைதான மகன்... விசாரணை வளையத்தில் மனைவி! - என்ன நடந்தது?

முன்னாள் ஏட்டு செந்தில்குமார்

முன்னாள் போலீஸ் ஏட்டு கொலை வழக்கில் அவரின் மகனை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

முன்னாள் போலீஸ் ஏட்டு கொலை; கைதான மகன்... விசாரணை வளையத்தில் மனைவி! - என்ன நடந்தது?

முன்னாள் போலீஸ் ஏட்டு கொலை வழக்கில் அவரின் மகனை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Published:Updated:
முன்னாள் ஏட்டு செந்தில்குமார்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா கல்லாவியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (48), முன்னாள் போலீஸ் ஏட்டு. இவருடைய மனைவி சித்ரா (43), இவர் சிங்காரப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ-யாகப் பணியாற்றி வருகிறார். இவர்களின் மகன் ஜெகதீஷ்குமார் (19). செந்தில்குமார் கடந்த 2009-ல், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த முரளி மீது முன்விரோதம் இருந்ததால், அவரின் ஜீப்பை தொப்பூர் காட்டிலிருக்கும் பள்ளத்தில் உருட்டி விட்டதுக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அதற்கு முன்பு செந்தில்குமார், கிருஷ்ணகிரியில் பணியாற்றியபோது, ஆயுதப்படை போலீஸ் வாகனத்தை பாரூர் ஏரியில் தள்ளிவிட்டிருக்கிறார். தொடர்ந்து அடாவடியாக பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு, போலீஸ் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வந்ததால், 2012-ல் நிரந்தரமாக போலீஸ் பணியிலிருந்து நீக்கப்பட்டார். ஊத்தங்கரை கவர்னர் தோப்பு பகுதியில் வசித்த செந்தில்குமார், செப்டம்பரில் மாயமானார். இது குறித்து செந்தில்குமாரின் தாய் பாக்கியம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், செந்தில்குமாரின் செல்போன் டவர் சிக்னலின் ஹிஸ்டரியை போலீஸார் ஆய்வு செய்தபோது, செந்தில்குமார், அவரின் மகன் ஜெகதீஸ்குமார் மற்றும் ஒரு மொபைல் எண் ஒரே பகுதியில் இருந்திருக்கின்றன. மேலும், அந்த எண்கள் மூன்றும் ஒன்றன் பின் ஒன்றாக ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்கின்றன.

மற்றொரு எண் யாருடையது என விசாரித்தபோது, அது பாவக்கல்லைச் சேர்ந்த கமல்ராஜ் (37) என்பதும், அந்தப் பகுதியில் ரௌடியாகச் சுற்றி வரும் அவர்மீது அதிக குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. அதையடுத்து, நேற்று முன்தினம், ஊத்தங்கரை போலீஸார் ஜெகதீஸ்குமார், கமல்ராஜை அழைத்து விசாரித்து அனுப்பினர்.

கமல்ராஜ்
கமல்ராஜ்

இந்த நிலையில், இருவரும் நேற்று மதியம், கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி ஸ்ரீவத்சவா முன்னிலையில் ஆஜராகி, ``செப்டம்பர் 16-ம் தேதி, செந்தில்குமாரை நாங்கள்தான் கொலைசெய்து, தென்பெண்ணை ஆற்றில் வீசிவிட்டோம்" என வாக்குமூலம் அளித்து, குற்றத்தை ஒப்புக்கொண்டனர். போலீஸார் இருவரையும் கைதுசெய்து, சேலம் சிறையில் அடைத்தனர். இந்த கொலைச் சம்பவம், போலீஸார் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து போலீஸாரிடம் பேசினோம். ‘‘செந்தில்குமாரின் மனைவி சித்ராவுக்கும், கமல்ராஜ்க்கும் திருமணம் மீறிய உறவு இருந்ததாக தகவல் கிடைத்திருக்கிறது. இதனால், எஸ்.எஸ்.ஐ சித்ராவை போலீஸ் ஸ்டேஷன் வரவழைத்து, இன்று காலை முதல் விசாரித்து வருகிறோம். கொலைசெய்ததற்கு, சித்ராவும் காரணமாக இருந்தது கண்டறியப்பட்டால் அவரையும் கைதுசெய்வோம்" என்றனர்.