Published:Updated:

பெண்ணுக்காகப் போட்டா போட்டி; கொலையில் முடிந்த நண்பர்களின் `மோதல்' - கடலூரில் பயங்கரம்

கொலை ( சித்திரிப்புப் படம் )

பெண்ணுக்காக நடந்த போட்டா போட்டியில் இளைஞர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பெண்ணுக்காகப் போட்டா போட்டி; கொலையில் முடிந்த நண்பர்களின் `மோதல்' - கடலூரில் பயங்கரம்

பெண்ணுக்காக நடந்த போட்டா போட்டியில் இளைஞர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கொலை ( சித்திரிப்புப் படம் )

கடலூர், ஈச்சங்காடு மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. சிப்காட்டிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றிவந்த இவர், நேற்று அதிகாலை அவரது வீட்டில் வெட்டுக் காயங்களுடன் படுகொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். அதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனே அங்கு விரைந்த முதுநகர் போலீஸார், கிருஷ்ணமூர்த்தியின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொலைசெய்யப்படுவதற்கு முதல்நாள் இரவு அதே பகுதியைச் சேர்ந்த தன்னுடைய நண்பன் குமரேசனுடன் கிருஷ்ணமூர்த்தி மது அருந்தியது தெரியவந்தது.

கொலைசெய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி
கொலைசெய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி

அதனடிப்படையில் குமரேசனை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்த போலீஸார், அவரிடம் கிருஷ்ணமூர்த்தி கொலை குறித்து கேட்டனர். ஆனால் குமரேசன், ``அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. முதல்நாள் இரவு இருவரும் மது அருந்தியது உண்மைதான். ஆனால், அதன்பிறகு நான் வீட்டுக்குத் திரும்பிவிட்டேன்" என அப்பாவியாகத் தெரிவித்தார். ஆனால், அவரின் பேச்சை நம்பாத போலீஸார், தங்களின் வழக்கமான ஸ்டைலில் விசாரணையை முடுக்கிவிட்டனர். அதையடுத்து, கிருஷ்ணமூர்த்தியைக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்திருக்கிறார் குமரேசன். இது குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், “கொலைசெய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தியும், குமரேசனும் நெருங்கிய நண்பர்கள்.

கிருஷ்ணமூர்த்திக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆனால் குமரேசனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. கிருஷ்ணமூர்த்தியின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு குமரேசனும், குமரேசனின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு கிருஷ்ணமூர்த்தியும் செல்லும் அளவுக்கு இருவரும் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். அப்படிச் சென்றுவரும்போது கிருஷ்ணமூர்த்தியின் உறவுக்கார பெண் ஒருவருடன், குமரேசனுக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பழக்கம் திருமண உறவைத் தாண்டிய நட்பாக மாறியிருக்கிறது. அதன் காரணமாக குமரேசனும், அந்தப் பெண்ணும் அடிக்கடி தனிமையில் சந்தித்திருக்கின்றனர். இவர்களின் நட்பைத் தெரிந்துகொண்ட கிருஷ்ணமூர்த்தி, தானும் அந்தப் பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்று குமரேசனிடம் கூறியிருக்கிறார். ஆனால், அதற்கு குமரேசன் ஒப்புக்கொள்ளவில்லை.

கைதுசெய்யப்பட்ட குமரேசன்
கைதுசெய்யப்பட்ட குமரேசன்

அந்தப் பெண் தன்னுடை சொந்தக்காரப் பெண் எனவும், அதனால் தனக்குத்தான் அந்தப் பெண்ணிடம் அதிக உரிமை இருக்கிறது என்றும் குமரேசனிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. மேலும், `அந்தப் பெண்ணை என்னிடமும் அனுப்ப வேண்டும். அப்படி இல்லையென்றால் இந்த விவகாரத்தை உன்னுடைய மனைவியிடம் கூறிவிடுவேன்' என்று மிரட்டி வந்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. இந்த விவகாரத்தில் இருவருக்கும் அடிக்கடி உரசல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் கிருஷ்ணமூர்த்தி உயிருடன் இருந்தால் தன் மனைவியிடம் சொல்வதுடன், அந்தப் பெண்ணுடனும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்று நினைத்த குமரேசன், அவரைக் கொலைசெய்ய முடிவெடுத்திருக்கிறான்.

இந்த நிலையில்தான், நேற்று முன்தினம் இரவு, இருவரும் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் அமர்ந்து மது அருந்தியிருக்கிறார்கள். கொலைசெய்யும் திட்டத்துடன் சென்றிருந்த குமரேசன், மதுவை அதிகமாகக் குடிக்காமல் கிருஷ்ணமூர்த்திக்கு அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றிக் கொடுத்திருக்கிறார். மது போதை தலைக்கேறிய கிருஷ்ணமூர்த்தி அன்றும், ’எனக்கும் அவள் வேண்டும்’ என்று குமரேசனிடம் கேட்டிருக்கிறார். அப்போது, `உன்னைக் கொலைசெய்கிறேன் பார்' என்று குமரேசன் கூறியதும், `யார், யாரைக் கொலைசெய்கிறார்கள் என்று பார்ப்போம்' எனக் கூறி அரிவாளை எடுத்து வந்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

அப்போது அவரை அடித்து கீழே தள்ளியிருக்கிறார் குமரேசன். மது போதையிலிருந்த கிருஷ்ணமூர்த்தி எதிர்க்க முடியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்திருக்கிறார். அதன்பிறகு அவர் வைத்திருந்த அரிவாளாலேயே நிதானமாக அவரை துள்ளத்துடிக்க வெட்டிக் கொலைசெய்துவிட்டு, ஒன்றும் தெரியாததுபோல தன் வீட்டுக்குச் சென்றுவிட்டார் குமரேசன். அதன்பிறகு எங்கள் விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் தற்போது அவரைச் சிறையில் அடைத்துவிட்டோம்” என்றனர்.