சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண் ஒருவர் சில வாரங்களுக்கு முன்பு அறிமுகமாகியிருக்கிறார். பின்னர் அந்த இளம்பெண்ணுக்கு அவ்வப்போது இளைஞர் ஆபாச போட்டோஸ், மெசேஜ்களை அனுப்பியிருக்கிறார். அது குறித்து இளம்பெண் தன்னுடைய வீட்டில் தெரிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் இளம்பெண்ணை தனியாகச் சந்திக்க விரும்புவதாக அந்த இளைஞர் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இளம்பெண் அதையும் தன்னுடைய குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார்.

இதுதான் சரியான நேரம் எனக் கருதிய இளம்பெண்ணின் குடும்பத்தினர், இளைஞரை ஐஸ்ஹவுஸ் பகுதியில் குறிப்பிட்ட ஓர் இடத்துக்கு வரும்படி இளம்பெண் மூலமாகவே தகவல் தெரிவித்தனர். அதனால் ஆசை, ஆசையாக இளைஞர் அங்கு வந்தார். அப்போது அங்கு இளம்பெண் இல்லை. அவருக்கு பதிலாக இளம்பெண்ணின் குடும்பத்தினர் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இளைஞரிடம் விசாரித்தனர். அப்போது இளம்பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் இளைஞரைச் சரமாரியாகத் தாக்கினர். வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். அவர்கள் தாக்கியதில் இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தத் தகவல் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்துக்கு தெரியவந்ததும், உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இளைஞரிடமும் அவரைத் தாக்கியவர்களிடமும் போலீஸார் விசாரித்தபோதுதான் அங்கு நடந்த முழுச் சம்பவமும் தெரியவந்தது.

அதனால் இளைஞர்மீது இளம்பெண் தரப்பில் புகார் கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம் என போலீஸார் தெரிவித்தனர். ஆனால் இளம்பெண் தரப்பில் எந்தப் புகாரும் கொடுக்க முன்வரவில்லை. இதையடுத்து இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இளைஞரின் சமூக வலைதளப் பக்கங்களையும் போலீஸார் ஆய்வுசெய்து வருகின்றனர். இளைஞர்மீது சாதாரண பிரிவில் வழக்கு பதிவுசெய்த போலீஸார் ஜாமீனில் அவரை விடுவித்தனர்.