Published:Updated:

திருத்தணி: `10-ம் வகுப்பு மாணவியிடம் திருமண ஆசை காட்டி அத்துமீறிய இளைஞர்!' - போக்சோவில் கைது

போக்சோவில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்
போக்சோவில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்

திருத்தணியில் 10-ம் வகுப்பு மாணவியிடம் ஆசைவார்த்தைகளைக் கூறி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட இளைஞரை, போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த வி.கே.என்.கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (24). கூலித் தொழிலாளியான வெங்கடேசனுக்கு 5 வயதில் குழந்தை ஒன்று உள்ள நிலையில், அவரின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக வெங்கடேசனைப் பிரிந்து, தன் தாய் வீட்டில் குழந்தையுடன் திருத்தணி டவுன் அருகே வசித்துவருகிறார். மனைவியைப் பிரிந்த நிலையில், கண்டிகை பகுதியில் தனியாக வசித்துவந்த வெங்கடேசன், அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் கடந்த சில மாதங்களாக நெருக்கமாகப் பழகிவந்துள்ளார். தனக்குத் திருமணம் ஆகிவிட்டதை மறைத்த வெங்கடேசன், பள்ளி மாணவியிடம் அவரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கைது
கைது

இந்தநிலையில், பள்ளி மாணவியின் பெற்றோர் தங்கள் மகளின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரியவே, அவர்மீது சந்தேகம் கொண்டு அவரை விசாரித்திருக்கின்றனர். அப்போது மாணவி அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனுடன் தான் சில மாதங்களாகப் பழகிவந்ததாகவும், அவர் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறித் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

மாணவியின் பதிலைக் கேட்டு அதிர்ந்துபோன அவரின் பெற்றோர் உடனடியாக திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தங்கள் மகளை அழைத்துச் சென்று புகார் அளித்திருக்கின்றனர். மாணவியின் புகாரைப் பெற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்த திருத்தணி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சத்தியவாணி, போக்சோ சட்டத்தின் கீழ் பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குற்றத்துக்காக வெங்கடசேனைக் கைதுசெய்து மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார். நீதிமன்றத்தில் வெங்கடேசன் மாணவிக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிபதி வெங்கடேசனுக்குச் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். அதையடுத்து, போலீஸார் வெங்கடேசனை திருத்தணி கிளைச் சிறையில் அடைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு