சேலம், வாழப்பாடி பேளூர் மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் வரதராஜ். இவருடைய மகன் அரவிந்த், தனியார் ஆம்புலன்ஸில் டிரைவராகப் பணியாற்றிவருகிறார். இந்த நிலையில், ஓராண்டுக்கு முன்பு இவருக்கும், வாழப்பாடியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்திருக்கின்றனர். பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்திருக்கின்றனர். அதையடுத்து, சமீபத்தில் இருவருக்கும் நிச்சயம் நடந்திருக்கிறது.
இந்தச் சூழலில், அண்மையில் வெளியான ’லவ் டுடே’ எனும் திரைப்படத்தில் வருவதுபோல், நிச்சயிக்கப்பட்ட ஜோடியான அரவிந்தும், அவருடைய காதலியும் திருமணத்துக்கு முன்பு எந்தவித ரகசியங்களும் இருக்கக் கூடாது என்பதற்காக, தங்களின் செல்போன்களை மாற்றிக்கொண்டிருக்கின்றனர்.
அரவிந்தின் செல்போனைப் பெற்றுச் சென்ற காதலி, அதை அலசி ஆராய்ந்ததில் அதிர்ச்சிகரமான படங்களையும், வீடியோக்களையும் பார்த்திருக்கிறார். அதில், 15 வயது மாணவியின் ஆபாச வீடியோ காட்சி, புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திக்கிறார். அதையடுத்து, அந்த மாணவியைக் காப்பாற்ற வேண்டும் எனும் எண்ணத்தில் சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோரைத் தொடர்புகொண்டு விவரத்தைக் கூறியிருக்கிறார். உடனே மாணவியின் பெற்றோர் அந்த போனை வாங்கிக்கொண்டு வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றிருக்கின்றனர். அதோடு, அரவிந்த் மீது அவரின் காதலி, மாணவியின் பெற்றோர் ஆகியோர் புகாரளித்திருக்கின்றனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, அரவிந்திடம் விசாரணை நடத்தியிருக்கிறார். அதில், அரவிந்த் வாழப்பாடி அரசு மருத்துவமனை அருகே ஆம்புலன்ஸில் நின்று கொண்டிருக்கும்போது, அந்த வழியாக மாணவி ஒருவர் பள்ளிக்குச் சென்றுவந்திருக்கிறார். அரவிந்த் பின்தொடர்ந்து வந்து, மாணவியைக் காதலிப்பதாகக்கூறி, அவரை மூளைச்சலவை செய்திருக்கிறார். அதன் பிறகு மாணவியிடம் செல்போன் வாயிலாகத் தொடர்புகொண்டு ஆபாசமாகப் பேசி வந்திருக்கிறார். ஒரு நாள் அவரிடம் பேசி வற்புறுத்தி ஆடைகளை அகற்றக்கோரி , மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்திருக்கிறார். இந்த நிலையில்தான், நிச்சயமான பெண்ணுடன் போனை மாற்றிக்கொண்டு மாட்டியிருக்கிறார்.

இதையடுத்து, போலீஸார் அரவிந்த் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து, அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண், கைதுசெய்யப்பட்டிருக்கும் அரவிந்தை திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்திருக்கிறார். சேலத்தில் திரைப்பட பாணியில் செல்போனை மாற்றியதால் இளைஞர் சிக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.