சென்னை தி.நகர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 13 -வயது சிறுமியை கடந்த 6-ம் தேதி முதல் காணவில்லை என அவரின் பெற்றோர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை பம்மல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. அதனால் இருவரையும் போலீஸார் தேடிவந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில், இளைஞரின் வீட்டில் சிறுமி தங்கியிருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். பின்னர் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், சிறுமிக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அதனால் இந்த வழக்கை தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தேனாம்பேட்டை போலீஸார் மாற்றினர். இதையடுத்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார், சிறுமியிடம் முதலில் விசாரித்தனர். சிறுமி அளித்த தகவலின்படி சென்னை பம்மல் பகுதியைச் சேர்ந்த உமாபதி (20) என்பவரைக் கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், உமாபதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார், ``சிறுமியிடம் இன்ஸ்ட்ராகிராம் மூலம் உமாபதி பழகியுள்ளார். பின்னர் சிறுமியைக் காதலிப்பதாக உமாபதி கூறியுள்ளார். அதன்பிறகு இருவரும் செல்போனில் நீண்ட நேரம் பேசியுள்ளனர். இந்த நிலையில் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறிய உமாபதி, அவரை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது சிறுமிக்கு உமாபதி பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். மகளைக் காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். அதன்பிறகுதான் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். செல்போன் சிக்னல், சிசிடிவி கேமராப் பதிவு மூலம் சிறுமி தங்கியிருந்த இடத்தைக் கண்டறிந்து உமாபதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளோம். சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாதவர்களின் நட்பு அழைப்புகளை சிறுமிகள், பெண்கள் ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்" என்றனர்.