சென்னை கோட்டை ரயில் நிலையம் பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்தில் கடந்த 10.2.2021-ம் தேதி அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக பூக்கடை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்தது யாரென்று போலீஸார் விசாரித்து வந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், இறந்த நபருக்கு 30 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும், கத்தியால் குத்தி அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் கொலை வழக்கு பதிவு செய்த பூக்கடை போலீஸார் கடந்த ஓராண்டாக குற்றவாளியைத் தேடிவந்தனர்.

இறந்தவர் குறித்து போலீஸார் விசாரித்து வந்தனர். CCTNS( Crime and Criminal Tracking Network & Systems) என்பதன் மூலம் போலீஸார் விசாரித்தபோது இறந்தவர் சதீஷ்குமார் (30) என்றும், இவரை காணவில்லை என வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. அதனால் சதீஷ்குமாரின் குடும்பத்தினரிடம், கழிவறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் குறித்த விவரங்களையும் அன்றைய தினம் அவர் அணிந்திருந்த ஆடைகள் குறித்த தகவலையும் போலீஸார் தெரிவித்தனர். மேலும் இறந்தவரின் புகைப்படத்தையும் சதீஷ்குமாரின் உறவினர்களிடம் போலீஸார் காண்பித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கொலை செய்யப்பட்டது சதீஷ்குமார்தான் என்பதை உறுதிப்படுத்த அவரின் பெற்றோர், அவரின் சகோதரியின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராப் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது இறந்த நபருடன் ஒருவர் நடந்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் விசாரித்தபோது அந்த நபர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், பூக்கடைப் பகுதியில் சுற்றித் திரிந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் ஓராண்டுக்கு மேல் தலைமறைவாக இருந்த அந்த நபர், சென்னைக்கு வந்த தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக அந்த நபரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணயில் அவரின் பெயர் பகதூர் (26), அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற தெரியவந்தது. பகதூரிடம் சதீஷ்குமாரை ஏன் கொலை செய்தாய்? என்று விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போலீஸார், ``கடந்த சில ஆண்டுகளாக பாரிமுனை பகுதியில் சிறு, சிறு வேலைகளை பகதூர் செய்து வந்துள்ளார். கடந்த 5.2.2021-ம் தேதி பகதூர், கோட்டை ரயில் நிலையம் பகுதியில் உள்ள பிளாட்பாரத்தில் இருந்தபோது அங்கு சதீஷ்குமார் வந்துள்ளார். பின்னர் பகதூரிடம் 500 ரூபாய் தருவதாகக் கூறிய சதீஷ்குமார், பயன்பாடில்லாத கழிவறைக்கு அழைத்துச் சென்று கத்தி முனையில் தன்பாலின உறவுக்குக் கட்டாயப்படுத்தியுள்ளார். அப்போது பகதூர், சதீஷ்குமாரிடமிருந்த கத்தியைப் பிடுங்கி அவரைக் குத்தியுள்ளார். பின்னர் ரயில் மூலம் பகதூர் அஸ்ஸாம் மாநிலத்துக்குச் சென்றுவிட்டார். கொலை நடந்து ஓராண்டுக்குப்பிறகு சென்னை வந்த பகதூரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்துள்ளோம்" என்றனர்.