சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், கோவிந்தராஜ் நகரைச் சேர்ந்தவர் வினோத் (34), ஆட்டோ டிரைவர். இவர் வீட்டின் அருகே உள்ள புதரில் வினோத், கஞ்சா செடிகளை வளர்ப்பதாக பூந்தமல்லி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு சில கஞ்சா செடிகள் வளர்ந்திருந்தன. அது தொடர்பாக ஆட்டோ டிரைவர் வினோத்திடம் போலீஸார் விசாரித்தனர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, ``ஆட்டோ டிரைவர் வினோத், கஞ்சா போதைக்கு அடிமையானவர். அதனால், கஞ்சா விதைகளை வாங்கி வந்து வீட்டின் எதிரில் உள்ள காலி இடத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்திருக்கிறார். பின்னர் தன்னுடைய தேவைக்காகவும், தனக்கு தெரிந்த நண்பர்களுக்கும் கஞ்சாவை விற்று வந்திருக்கிறார். இந்தத் தகவல் எங்களுக்கு கிடைத்ததும் வினோத்தைப் பிடித்தோம். வினோத்மீது ஏற்கெனவே போக்சோ வழக்கு உள்ளது. தற்போது கஞ்சா வழக்கிலும் வினோத்தை கைதுசெய்திருக்கிறோம். வினோத் வளர்த்து வந்த கஞ்சா செடிகளை அழித்துவிட்டோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது " என்றனர்.
