Published:Updated:

`பணத்தை டீக்கடையில் கொடுத்துடுங்க!’ - மின்வாரிய ஊழியரைப் பொறிவைத்துப் பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை

கைது
கைது ( representational image )

கும்மிடிப்பூண்டி அருகே ஆழ்துளைக் கிணற்றுக்கு மின் இணைப்பு வழங்க 5,000 ரூபாய் லஞ்சம் கேட்ட மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாகக் கைதுசெய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, தபால் தெருவைச் சேர்ந்தவர் வேலு (50). இவரின் மனைவி வள்ளியம்மாள் (46). கும்மிடிப்பூண்டியில் விவசாயம் செய்துவரும் வள்ளியம்மாள், தனது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஆழ்துளைக் கிணற்றில் மின் மோட்டார் பொருத்துவதற்காக, மின் இணைப்பு வேண்டி, கடந்த மாதம் 11-ம் தேதி கும்மிடிப்பூண்டி மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் மனு அளித்திருக்கிறார்.

அப்போது, வள்ளியம்மாளை அழைத்து தனியாகப் பேசிய மின்வாரிய போர்மேன் சீனு (53), விளைநிலத்தில் மின் இணைப்பு வழங்குவதற்கு மூன்று மின் கம்பங்கள் நட வேண்டும் என்று கூறி 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார். அதற்கு, வள்ளியம்மாள் எல்லா ஆவணங்களும் முறையாக இருக்கும்போது லஞ்சம் எதற்குத் தர வேண்டும் என்று வாதிட்டிருக்கிறார். வள்ளியம்மாள் குரல் உயர்த்தவே, போர்மேன் சீனு `கேட்டதைக் கொடுத்தால்தான் வேலை நடக்கும், முரண்டு பிடித்தால் மின் இணைப்பே வழங்க மாட்டேன்’ என்று மிரட்டியிருக்கிறார்.

லஞ்சம்
லஞ்சம்
Representational Image

மின்வாரிய ஊழியருக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத வள்ளியம்மாள் சீனு லஞ்சம் கேட்டது தொடர்பாகச் சென்னை ஆலந்தூரிலுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் சென்று புகாரளித்தார். அவரின் புகாரைப் பெற்றுக்கொண்டு அவரிடம் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி லட்சுமிகாந்தன், அவரது தலைமையில் மூன்று போலீஸார் கொண்ட குழு ஒன்றை அமைத்தார். அதைத் தொடர்ந்து, வள்ளியம்மாளிடம் ரசாயனம் தடவிய ரூபாய்த் தாள்களைக் கொடுத்து அதை மின்வாரிய ஊழியர் சீனுவிடம் லஞ்சமாகக் கொடுக்குமாறு கூறினார்கள்.

வள்ளியம்மாளும் போலீஸார் கூறியது போன்றே சீனுவுக்கு போன் செய்து, ``பணம் தருகிறேன். மின் இணைப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். அலுவலகத்துக்கு வந்து தரவா..." என்று கேட்டிருக்கிறார். அதற்கு சீனு, ``மின்வாரிய அலுவலகம் வேண்டாம். கும்மிடிப்பூண்டி பஜாரிலுள்ள பவானி டீ கடையில் உரிமையாளர் விஜயகுமாரிடம் கொடுத்துவிடுங்கள். நான் வாங்கிக்கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

பொன்னேரி சிறை: `காசு கொடுத்தால் கைதியைப் பார்க்கலாம்!’ - வைரல் வீடியோவும் சர்ச்சையும்

வள்ளியம்மாளும் போலீஸாரின் வழிகாட்டுதலின்படி ரசாயனம் தடவிய 5,000 ரூபாயை சீனு சொன்ன டீக்கடையில் கொடுத்திருக்கிறார். அதை அறிந்துகொண்ட சீனு, சிறிது நேரத்திலேயே டீக்கடைக்கு வந்திருக்கிறார். வள்ளியம்மாள் கொடுத்த லஞ்சப் பணத்தை வாங்கிக்கொண்டு மின்வாரிய அலுவலகம் சென்றுவிட்டு, அங்கிருந்து வீட்டுக்குக் கிளம்ப காரில் ஏறியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவரைக் கையும் களவுமாகப் பிடித்து ரசாயனம் தடவிய ரூபாய்த் தாள்களைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைதுசெய்யப்பட்ட போர்மேன் சீனுவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மின் இணைப்புக்கு 5,000 ரூபாய் லஞ்சம் கேட்ட மின்வாரிய ஊழியர் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த கட்டுரைக்கு