ராமநாதபுரம் பழைய செக்போஸ்ட் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன், நேற்று சிறப்பு வகுப்பு முடிந்து இரவு 7 மணிக்கு பள்ளியிலிருந்து வீட்டிற்குப் புறப்பட்டுள்ளார். புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் ஏறி சீட்டில் அமர்ந்துள்ளார். அப்போது அதே பேருந்தில் ஏறிய ஜகுபர் ஜலாலுதீன் (65) என்ற முதியவர் மாணவனுக்கு அருகில் அமர்ந்துள்ளார்.
பேருந்து புறப்பட்டதிலிருந்து மாணவனுக்கு அந்த முதியவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. மாணவன் தடுத்தும் நிறுத்தாமல், தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

அதனால், அந்த முதியவரை போலீஸில் சிக்க வைக்க வேண்டும் என்று முடிவுசெய்த மாணவன், தான் இறங்க வேண்டிய நிறுத்தத்துக்கு முந்தைய நிறுத்தமான கேணிக்கரை காவல் நிலையம் அமைந்துள்ள ஆட்சியர் அலுவலக நிறுத்தத்தில் இறங்கினான். அப்போது அருகில் அமர்ந்திருந்த முதியவரிடம் இறங்கி பின்னால் வரும்படி சைகை காட்டிவிட்டு ஆட்சியர் அலுவலகத்திற்குள் மாணவன் சென்றுள்ளார்.
அதன்படி அந்த முதியவரும் மாணவன் பின்னால் சென்றுள்ளார். அப்போது மாணவன் அங்குள்ள கேணிக்கரை காவல் நிலையத்திற்குள் சென்று புகார் கொடுத்ததன்பேரில், மாணவனை பின்தொடர்ந்து வந்த முதியவரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.