மின் மீட்டருக்கு ரூ.5,000 லஞ்சம் கேட்ட அதிகாரி - பொறிவைத்துப் பிடித்த விஜிலென்ஸ்!

திருவள்ளூர் அருகே புதிதாகக் கட்டப்பட்ட வீட்டுக்கு மின் மீட்டர் பொருத்தக் கோரி அலுவலகம் வந்த நபரிடம் ரூபாய் 5,000 லஞ்சம் கேட்ட மின்சாரவாரிய வணிக ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கையும் களவுமாகப் பிடித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்த மோவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (35). இவர் மோவூர் கிராமத்தில் புதிதாகக் கட்டியுள்ள வீட்டுக்கு மின் இணைப்பு பெறுவதற்காக பூண்டி, நெய்வேலி கூட்டுச்சாலையில் அமைந்துள்ள மின்வாரிய உதவிப் பொறியாளர் பிரிவு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு சென்னை, திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (49) என்பவர் பணியில் இருந்துள்ளார். அலுவலகத்தில் வணிக ஆய்வாளராகப் பணியாற்றிவரும் லோகநாதன், புதிய மின் மீட்டர் பொருத்தக் கோரி வந்த சுரேஷிடம், ``உங்களுக்கு இணைப்பு மற்றும் மீட்டர் வழங்குவதில் சட்டச் சிக்கல்கள் உள்ளதால், அவ்வளவு எளிதில் மின் மீட்டர் பொருத்த முடியாது. உங்களுக்கு மிகவும் அவசரமென்றால் 5,000 ரூபாய் தாருங்கள். நான் அதிகாரிகளிடத்தில் பேசி உங்களுக்கு உடனடியாக மின் மீட்டர் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்" என்று கூறியுள்ளார்.

அனைத்து ஆவணங்களும் முறையாக இருக்கும்போதும், மின்வாரிய அதிகாரி லோகநாதன் லஞ்சம் கேட்டதால் ஆத்திரமடைந்த சுரேஷ், இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். அதையடுத்து, சுரேஷை விசாரித்த லஞ்சஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி கலைச்செல்வன், சுரேஷிடம் ரசாயனம் தடவிய ரூ.5,000 நோட்டுகளைக் கொடுத்து லோகநாதனிடம் அளிக்குமாறு கூறினார்.
மறுநாள், மின்வாரிய அலுவலகத்துக்கு சுரேஷுடன் சென்ற டி.எஸ்.பி கலைச்செல்வன், ஆய்வாளர்கள் கார்த்திக் மற்றும் தமிழரசி ஆகியோர் மறைவாக நின்று நடப்பதை கவனித்தனர். மின் வணிக ஆய்வாளர் லோகநாதன், சுரேஷிடமிருந்து லஞ்சமாக ரசாயனம் தடவிய 5,000 ரூபாயை வாங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் லோகநாதனை கையும் களவுமாகக் கைதுசெய்தனர்.

தொடர்ந்து, மின்வாரிய அலுவலகத்தில் சோதனையிட்ட போலீஸார் கணக்கில் காட்டப்படாத ரூபாய் 41,000 ரொக்கத்தைக் கைப்பற்றினர். லோகநாதனைக் கைதுசெய்த போலீஸார், திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.