Published:Updated:

`பணத்தைப் பார்த்ததும் மனம் மாறிவிட்டது!' -ரூ.52 லட்சம் ஏடிஎம் பணத்துடன் சிக்கிய சென்னை டிரைவர்

காரைப் பின்தொடர்ந்த போலீஸார் கொருக்குப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் அருகே அந்தக் கார் அநாதையாக நின்றுகொண்டிருந்ததைப் பார்த்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்
பறிமுதல் செய்யப்பட்ட பணம்

சென்னை தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்திலிருந்து ஏடிஎம் இயந்திரங்களுக்குப் பணம் நிரப்புவதற்காகக் கடந்த 19-ம் தேதி கார் ஒன்று புறப்பட்டது. அந்தக் காரில் நிறுவனத்தின் சூப்பர்வைஸரான அசோக்நகரைச் சேர்ந்த வினோத் (28), பணம் நிரம்பும் ஊழியரான கே.கே.நகரைச் சேர்ந்த வினோத் (26), துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு ஊழியரான பீகாரைச் சேர்ந்த முகமது (27) ஆகியோர் இருந்தனர். காரை வேளச்சேரியைச் சேர்ந்த அன்புறோஸ் (40) ஓட்டினார்.

ஏடிஎம்
ஏடிஎம்

ரூ.87 லட்சத்துடன் புறப்பட்ட அந்த வாகனம் வரும் வழியில் உள்ள ஏடிஎம்களில் பணத்தை நிரப்பிக்கொண்டே வந்தது. வேளச்சேரி விஜயநகர் 1-வது பிரதான சாலையில் உள்ள வங்கியின் ஏடிஎம் இயந்திரத்துக்குள் பணத்தை நிரப்ப சூப்பர்வைஸர் வினோத், பணம் நிரப்பும் ஊழியர் வினோத் ஆகியோர் பணத்துடன் ஏடிஎம் அறைக்குள் சென்றனர். அவர்களுக்குப் பாதுகாப்பாகத் துப்பாக்கியுடன் முகமது சென்றார்.

ஏடிஎம் முன் நிறுத்தப்பட்டிருந்த காரில் டிரைவர் அன்புறோஸ் இருந்தார். காரில் லட்சக்கணக்கில் பணம் இருந்தது. இந்தச் சமயத்தில் எதிரில் ஒரு லாரி வந்துள்ளது. உடனே லாரிக்கு வழிவிட அன்புறோஸ் காரை ஓரமாக நிறுத்த அங்கிருந்து புறப்பட்டார். ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை வைத்துவிட்டு வெளியில் வந்த மூன்று பேரும் அடுத்த ஏடிஎம்க்குச் செல்ல காரைத் தேடினர். ஆனால், அங்கு கார் இல்லை.

அன்புறோஸ்
அன்புறோஸ்

உடனடியாக அன்புறோஸுக்கு சூப்பர்வைஸர் வினோத், போன் செய்தார். அப்போது அவரின் போன் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் வினோத் உட்பட மற்ற இருவரும் அதிர்ச்சியடைந்தனர். அந்தப் பகுதியில் ஆம்ரோஸைத் தேடி பார்த்துவிட்டு மூன்று பேரும் வேளச்சேரி காவல் நிலையத்துக்குச் சென்று தகவலைத் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கும் வினோத் தகவல் கூறினார்.

`அந்தப் பை முழுவதும் 2000, 500 ரூபாய் கட்டுகள்!' - ஏடிஎம் கொள்ளையனை நள்ளிரவில் பிடித்த ஆட்டோ டிரைவர்

இதையடுத்து வேளச்சேரி போலீஸார், வினோத் உட்பட மூன்று பேரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது காரில் 52 லட்சம் ரூபாய் பணம் இருப்பதாக வினோத் கூறியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த வேளச்சேரி போலீஸார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ஆம்ரோஸ், பணத்துடன் காரில் வேகமாகச் செல்வது தெரியவந்தது.

ஆம்ரோஸ்
ஆம்ரோஸ்

வினோத் மற்றும் அவர் வேலைபார்க்கும் நிறுவனத்திடம் டிரைவர் அன்புறோஸ் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்தனர். அதே நேரத்தில் அன்புறோஸ் காரை சிசிடிவி உதவி மூலம் போலீஸ் டீம் பின்தொடர்ந்தது.

இதற்கிடையில் அன்புறோஸின் மனைவியைத் தங்களின் கஸ்டடியில் எடுத்த போலீஸார் அவர் மூலம் அவரைப் பிடித்துள்ளனர். காரைப் பின்தொடர்ந்த போலீஸார் கொருக்குப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் அருகே அந்தக் கார் அநாதையாக நின்றுகொண்டிருந்ததைப் பார்த்துள்ளனர். பின்னர், காரையும் மீட்டு, அன்புறோஸிடமிருந்து 20 லட்ச ரூபாயையும் அவரின் மனைவியிடமிருந்து 32 லட்ச ரூபாயையும் பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணையில், `பணத்தைப் பார்த்ததும் மனம் மாறிவிட்டது' எனக் கூறியிருக்கிறார் டிரைவர் அன்புறோஸ்.