Published:Updated:

கும்பகோணம் :'கார் உரிமையாளர்களுக்கே தெரியாமல் 41 கார்கள் அடமானம்'- போலீஸிடம் வசமாக சிக்கிய கும்பல்

பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்
பறிமுதல் செய்யப்பட்ட கார்கள் ( ம.அரவிந்த் )

மலைச்சாமி, தர்மராஜ் இருவரையும் போலீஸ் கைதுசெய்ததுடன் 28 கார்களையும்  பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகிவிட்ட கோபிநாத், விக்னேஷ் ஆகியோரையும், 13 கார்கள் எங்கே இருக்கின்றன எனவும் தேடிவருகின்றனர்.

கும்பகோணம் அருகே கார்களை வாடகைக்குக் கொடுத்திருந்த உரிமையாளர்களுக்குத் தெரியாமலேயே ஒருவர் கார்களை அடமானம் வைத்திருக்கிறார். காரை அடமானத்துக்கு எடுத்தவர்கள், காரை உள் வாடகைக்குவிட்டு சம்பாதித்துள்ளனர். நூதன முறையில் மோசடி செய்த அந்தக் கும்பலின் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து இருவரைக் கைதுசெய்திருப்பதுடன் 28 கார்களைப் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

போலீஸாரால் கைதுசெய்யப்பட்டவர்
போலீஸாரால் கைதுசெய்யப்பட்டவர்

சென்னைப் பெருங்குடி அம்பேத்கர் நகர், கெனால்புரம் பகுதியைச் சேர்ந்த ராஜாராமன் மகன் மணிகண்டராஜா (33). இவர் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். இவர் தனக்குச் சொந்தமான கார் ஒன்றை கும்பகோணம் அருகேயுள்ள அழகாபுத்தூர் பாதரக்குடியைச் சேர்ந்த மலைச்சாமி (37) என்பவருக்கு மாத வாடகைக்குக் கொடுத்திருக்கிறார். மலைச்சாமி அதை வேறு டிரைவரைவைத்து வாடகைக்குவிட்டுச் சம்பாதித்திருக்கிறார்.

அத்துடன் காரின் மாத வாடகைப் பணத்தை மணிகண்ட ராஜாவிடம் சரியாகக் கொடுத்துவந்திருக்கிறார். இதனால் மலைச்சாமி மீது மணிகண்ட ராஜாவுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மணிகண்டராஜா தன்னுடன் பணிபுரிபவர்கள் மற்றும் தனக்குத் தெரிந்த நண்பர்களிடம் இவரைப் பற்றிக் கூறியுள்ளார்.அவருடைய நண்பர்கள் சிலரும் கூடுதலாக வருமானம் வரும் என்ற எண்ணத்தில் புதிய கார்களை வாங்கி மாத வாடகைக்கு மலைச்சாமி வசம் ஒப்படைத்துள்ளனர். இதுபோல் மொத்தம் 41 கார்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சில மாதங்களுக்குச் சரியாக காருக்குரிய வாடகைப் பணம் கிடைத்திருக்கிறது.

போலீஸாரால் கைதுசெய்யப்பட்டவர்
போலீஸாரால் கைதுசெய்யப்பட்டவர்

பின்னர் மணிகண்ட ராஜாவுக்கும், அவருடைய நண்பர்களுக்கும் கார் வாடகை சரியாகச் சென்று சேரவில்லை. இது தொடர்பாக மலைச்சாமியைத் தொடர்புகொண்டதற்கும் முறையான பதில் சொல்லவில்லை. இதில் கார் உரிமையாளர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.41 கார்களின் நிலை என்ன என்பது தெரியாமல் கொடுத்தவர்கள் அனைவருமே கவலைகொண்டனர். இதையடுத்து மணிகண்டராஜாவும் அவருடைய நண்பர்களும் நாச்சியார்கோவில் போலீஸில் புகார் அளித்தனர்.

நாச்சியார்கோவில் போலீஸார் இது குறித்து வழக்கு பதிந்துடன், தனிப்படை அமைத்து விசாரணையை மேற்கொண்டனர். இதில் மலைச்சாமி கும்பகோணம் கோதண்டபாணி தெருவைச் சேர்ந்த தர்மராஜன், அதே பகுதி காடுவெட்டி தெருவைச் சேர்ந்த கோபிநாத், சாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோரிடம் கார்களை அடமானம்வைத்து பணம் பெற்றிருப்பதும், அடமானத்துக்கு வாங்கிய கார்களை அந்த நபர்கள் உள் வாடகைக்கு வெளி நபர்களிடம் கொடுத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்
பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்

இதையடுத்து போலீஸாரின் அதிரடி நடவடிக்கையில் கோபிநாத்திடம் நான்கு கார்கள், தர்மராஜிடம் 10 கார்கள், விக்னேஷிடம் 13 கார்கள், மலைச்சாமியிடம் 14 கார்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர் மலைச்சாமி, தர்மராஜ் ஆகியோரை போலீஸ் கைதுசெய்ததுடன் 28 கார்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகிவிட்ட கோபிநாத், விக்னேஷ் ஆகியோரைத் தேடிவருகின்றனர். மற்ற 13 கார்கள் எங்கே இருக்கின்றன, மேலும் இந்த வழக்கில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. காரின் உரிமையாளருக்கே தெரியாமல் காரை உள் வாடகைக்கு விட்டும் நூதன மோசடி செய்த சம்பவம் பொதுமக்களை மட்டுமன்றி போலீஸாரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு