Published:Updated:

ஐஏஎஸ் ஆபீஸரின் மகன் டீம் லீடர்; சூர்யா பட ஸ்டைலில் நடந்த கொள்ளை - தடம்மாறிய இன்ஜினீயரின் வாழ்க்கை

கொள்ளை வழக்கில் கைதானவர்கள்

நடிகர் சூர்யா பட ஸ்டைலில் வருமானவரித்துறையினர் போல நடித்து நகைகள், பணத்தைக் கொள்ளையடித்த கும்பல் செல்போன் நம்பரால் சிக்கியுள்ளது.

ஐஏஎஸ் ஆபீஸரின் மகன் டீம் லீடர்; சூர்யா பட ஸ்டைலில் நடந்த கொள்ளை - தடம்மாறிய இன்ஜினீயரின் வாழ்க்கை

நடிகர் சூர்யா பட ஸ்டைலில் வருமானவரித்துறையினர் போல நடித்து நகைகள், பணத்தைக் கொள்ளையடித்த கும்பல் செல்போன் நம்பரால் சிக்கியுள்ளது.

Published:Updated:
கொள்ளை வழக்கில் கைதானவர்கள்

திருவள்ளூர் மாவட்டம், கிளாம்பாக்கம், முதுரா வெள்ளகுளம், தொழுவூர், முருகன் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரின் வீட்டுக்கு கடந்த 1-ம் தேதி அதிகாலை நேரத்தில் கவர்மென்ட் ஆப் இந்தியா என்று எழுதப்பட்ட சைரன் வைத்த காரில் ஒரு டீம் வந்திறங்கியது. அப்போது பாலமுருகனின் அம்மா செல்வராணி, வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் பாலமுருகன் எங்கே என்று அந்த டீம் கேட்டது. செல்வராணி பதிலளித்ததை காதில் வாங்கிக் கொள்ளாத அவர்கள், காரை விட்டு இறங்கி, வீட்டுக்குள் நுழைந்தனர். பின்னர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாலமுருகனின் அறைக்கதவை காவல்துறை சீருடையில் இருந்தவர் தட்டினார். கதவை திறந்த பாலமுருகன், நீங்கள் யாரு எக்று கேட்டபோது வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து வருகிறோம் என்று பெண் ஒருவர் பதிலளித்தார். அப்போது பாலமுருகனின் செல்போனையும் ஒருவர் வாங்கி வைத்துக் கொண்டார்.

வருமான வரித்துறை
வருமான வரித்துறை

பிறகு பாலமுருகனிடம், இந்த ஆண்டின் வரவு செலவு கணக்குளை ஒருவர் கேட்டார். அதற்கு பாலமுருகன், நான் எனது ஆடிட்டரிடம் கேட்டு சொல்கிறேன் என்று பதிலளித்தார். அடுத்து இன்னொருவர், நீங்கள் செங்கல் சூளையை எவ்வளவு ரூபாய்க்கு வாங்கினீர்கள், அதற்கான பணம் எப்படி வந்தது என கேட்டனர். இதற்கு பாலமுருகன், அந்த விவரத்தை விசாரணையின்போது சொல்கிறேன் என்று தெரிவித்தார். இதையடுத்து வருமான வரித்துறையிலிருந்து வந்தவர்கள், உங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்று கூறியப்படி ஒவ்வொரு அறைகளுக்கும் சென்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது பாலமுருகனை அழைத்துச் சென்ற ஒருவர், பீரோவைச் திறக்கச் சொல்லி அதிலிருந்த 28 தங்க நாணயங்கள், தங்க நகைகள், ரொக்கப் பணம், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டார். அதன்பிறகு வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்து கீதா என்பவரைப் பாருங்கள், அவரிடம் ஆவணங்களை சமர்பித்துவிட்டு நகை, பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அந்த டீம் வெளியேறியது. இதையடுத்து அவர்கள் காரில் ஏறி சென்று விட்டனர். பின்னர் பாலமுருகன், தன்னுடைய ஆடிட்டரிடம் வருமான வரித்துறை சோதனை குறித்தும் கீதா குறித்தும் தகவல் தெரிவித்தார். உடனடியாக ஆடிட்டர் அதுதொடர்பாக விசாரித்தபோது அப்படியொரு சோதனை நடத்தப்படவில்லை எனத் தெரியவந்தது. அந்தத் தகவலை பாலமுருகனிடம் ஆடிட்டர் கூறியபோதுதான் வருமானவரித்துறை சோதனை என்ற பெயரில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. அதனால் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் பாலமுருகன் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரீனா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்
ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

இதுகுறித்து தகவலறிந்த ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், கொள்ளைக் கும்பலைப் பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் துணை கமிஷனர் மகேஷ் மேற்பார்வையில் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள், செல்போன் சிக்னல்கள் ஆகியவற்றைக் கொண்டு விசாரித்தனர். விசாரணையில் வருமான வரித்துறையினர் போல நடித்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கோவை, பொள்ளாச்சி பகுதியில் பதுங்கியிருக்கும் தகவல் தெரிந்தது. உடனடியாக உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையிலான போலீஸார் கோவைக்குச் சென்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த டேனியல், நந்தகுமார், சிவமுருகன், பிரகாஷ், வினோத், கவிதா, ரென்னிஸ், அஸ்கர் அலி, சாரதி என்கிற பார்த்தசாரதி ஆகிய 9 பேரை பிடித்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி வசந்த், செந்தில்வேலன், வெங்கடேசன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் வசந்த், செந்தில்வேலன் ஆகிய இருவரும் செவ்வாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள். வெங்கடேசன் அரக்கோணத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் மூன்று பேரும் கொடுத்த தகவலின்படி பாலமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் போல நடித்து இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளைக் கும்பலிடமிருந்து நகை, பணம் சொத்து ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைதானவர்கள்
கைதானவர்கள்

இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், ``புகாரளித்த பாலமுருகன். சமீபத்தில் செங்கல் சூளை ஒன்றை வாங்கியுள்ளார். நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்தப்பணிகளை எடுத்து செய்து வருகிறார். அவர் வசதியாக வாழ்ந்து வந்ததைப் பார்த்த செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த வசந்த், செந்தில்வேலன், அரக்கோணத்தைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் கோவையைச் சேர்ந்த பார்த்தசாரதியிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகர் சூர்யா பட ஸ்டைலில் வருமான வரித்துறையினர் போல நடித்து கொள்ளையடிக்க இந்தக் கும்பல் திட்டமிட்டது. இந்த டீமுக்கு தலைவராக கோவையைச் சேர்ந்த டேனியல் செயல்பட்டுள்ளார்.

இவர் இன்ஜினீயரிங் படித்துவிட்டு வெளிநாட்டிலும் தமிழகத்திலும் கைநிறைய சம்பளத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட டேனியல், இந்தக் கும்பலுடன் சேர்ந்திருக்கிறார். அதனால் அவரின் வாழ்க்கை தடமாறியிருக்கிறது. கைது செய்யப்பட்டிருக்கும் டேனியலின் அப்பா, தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். அடுத்து கைது செய்யப்பட்டிருக்கும் நந்தகுமார் என்பவர்தான் போலீஸ் எஸ்.ஐ-யாக நடித்திருக்கிறார். அவருக்கு சம்பளமாக 10,000 ரூபாயை இந்தக் கும்பல் கொடுத்திருக்கிறது. இதுதவிர வருமான வரித்துறையினர் போலவே இந்தக் கும்பல் சோதனை நடத்தியிருக்கிறது. அதற்காக போலியாக வருமான வரித்துறை ஐடி கார்டுகள், ரெய்டுக்குச் செல்லும் போது கொடுக்கப்படும் ரசீதுகள் ஆகியவற்றை பயன்படுத்தியிருக்கிறது. இந்தக் கும்பலிடமிருந்து நகைகள், பணம், கார், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம். கைது செய்யப்பட்ட அஸ்கர் அலி, ரென்னீஸ் ஆகியோர் மீது வழக்கு உள்ளது. இந்தக் கும்பல் தொடர்பாக விசாரித்துவருகிறோம்" என்றனர்.

இந்த வழக்கை திறம்பட விசாரித்து 12 பேரை கைது செய்த போலீஸ் உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி, இன்ஸ்பெக்டர்கள் டில்லிபாபு, ஆனந்த், ராமசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த்குமார், குமரன், பிரதீப், ரமேஷ் ஆகியோரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism