Published:Updated:

`நாளை சாம்பிள்ஸ் கொடுக்கிறேன்; இன்று சந்திக்கவும்!' -நோயாளிக்கு அதிர்ச்சிகொடுத்த சென்னை டாக்டர்

டாக்டர்
டாக்டர் ( மாதிரிப் படம் )

`இருமல், தலைவலிக்கு சிகிச்சை பெற கிளினிக்கிற்கு சென்றேன். அங்கிருந்த டாக்டர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்' என்று பாதிக்கப்பட்ட இளைஞர் கண்ணீர்மல்க புகார் தெரிவித்துள்ளார்.

தென்மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதான நபர் ஒருவர், சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்த்துவருகிறார். நண்பர்களுடன் சென்னை மந்தைவெளியில் தங்கியுள்ளார். இவர், அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் தீயணைப்பு தொடர்பான படிப்பை படித்துள்ளேன். என் குடும்பச் சூழல் மற்றும் தம்பியின் படிப்பு காரணமாக வேலைக்காக சென்னை வந்தேன்.

டாக்டர்
டாக்டர்
மாதிரிப் படம்

சென்னை மந்தைவெளியில் நண்பர்களுடன் தங்கியுள்ளேன். கடந்த 10 நாள்களுக்கு முன், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஃபயர் சேஃப்டி உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தேன். 6.3.2020ல் எனக்கு உடல்நலம் சரியில்லாததால் வேலைக்குச் செல்லாமல் விடுப்பில் இருந்தேன். சுமார் 8 மணியளவில், நான் தங்கியிருக்கும் பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு என் நண்பனுடன் சென்றேன். அப்போது, என் நண்பன் போனில் பேசிக்கொண்டு வெளியில் நின்றுவிட்டான். நான் மட்டும் மருத்துவமனைக்குள் சென்றேன்.

மருத்துவமனையிலிருந்த டாக்டர் கார்த்திக்கிடம், எனக்கு இருமல், தலைவலி அதிகமாக இருப்பதாகக் கூறினேன். அவர் என்னைப் பரிசோதித்தார். மேலும், உங்களைப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி வீட்டுக்கு அழைத்துச்சென்றார். அவருடைய செயலால் அச்சப்பட்ட நான், வீட்டுக்குப் போக வேண்டும் எனக் கூறினேன்.

எப்.ஐ.ஆர்.
எப்.ஐ.ஆர்.

அவரிடமிருந்து என்னால் தப்பிக்க முடியவில்லை. என்னிடம் அவர் தவறாக நடந்துகொண்டார். பின்னர், உன் ரிப்போர்ட்டை நாளைக்கு வந்து வாங்கிக்கொள் என்று கூறினார். நானும் எனது நண்பனும் வீட்டுக்கு வந்தோம். எனக்கு நேர்ந்த இந்தச் சம்பவத்தால் மிகுந்த மனவேதனையில் இருந்தேன்.

என்னிடம் தவறாக நடந்துகொண்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் குறித்து காவல் நிலையத்தில் 8-ம் தேதி புகார் கொடுத்ததன் பேரில், அபிராமபுரம் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், இந்திய தண்டனைச் சட்டம் 406, 341, 377 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தார். பின்னர் டாக்டர் கார்த்திக்கிடம் விசாரணை நடத்திவிட்டு, அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

பாதிக்கப்பட்டவரிடம் போனில் பேசினோம். ``நான், சென்னைக்கு வேலைக்கு வந்து 10 நாள்களாகின்றன. திடீரென காய்ச்சல், இருமல் ஏற்பட்டதால், நான் தங்கியிருக்கும் இடத்தின் அருகில் உள்ள கிளினிக்கிற்குச் சென்றேன். 5-ம் தேதி சென்றபோது டாக்டர் எனக்கு மருந்து, மாத்திரை, ஊசி போட்டார். அப்போது என்னுடைய செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டார். பின்னர், டாக்டர் எனக்கு போனில் பேசினார். அப்போது, 6-ம் தேதி மருத்துவமனைக்கு வரும்படி கூறினார். அதைத் தொடர்ந்து, வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில், நாளை சாம்பிள்ஸை கொடுக்கிறேன். இன்று மாலை என்னைச் சந்திக்கவும் என்று அனுப்பியிருந்தார். இதையடுத்து 6-ம் தேதி மாலை டாக்டரை சந்தித்தேன்.

கிளினிக்கில் டாக்டரைத் தவிர வேறு யாருமில்லை. என்னைப் பார்த்ததும் சிரித்தார். அப்போது, டாக்டரின் சிரிப்பின் அர்த்தம் எனக்கு புரியவில்லை. பின்னர், என்னிடம் உடல் முழுவதும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கிளினிக்கிலிருந்து அருகில் உள்ள ஒரு இடத்துக்கு அழைத்துச்சென்றார். அங்கு சென்றதும் கதவு, ஜன்னல்களைப் பூட்டினார். அந்த அறையில் நானும் டாக்டரும் மட்டுமே இருந்தோம்.

டாக்டரின் மருந்துச் சீட்டு
டாக்டரின் மருந்துச் சீட்டு

பின்னர், அவர் எனக்கு ஊசி போட்டார். அதன்பிறகு நான் அரைமயக்கத்தில் இருந்தேன். பின்னர் அவர், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மயக்கத்தில் இருந்தால் அதை என்னால் தடுக்க முடியவில்லை. மயக்கம் தெளிந்த பிறகு அவரிடம் நான் சண்டை போட்டேன். பின்னர், என்னை வலுக்கட்டாயமாக வெளியில் அனுப்பிவிட்டார். அறையில் நடந்த அந்தச் சம்பவம் எனக்கு மனவேதனையை அளித்தது. உடனே நான் தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்தேன். பின்னர்தான் எனக்குள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, டாக்டர் கார்த்திக் மீது புகாரளித்தேன். என்னைப் போல மற்ற யாரும் டாக்டரால் பாதிக்கப்படக்கூடாது. அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது எனக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் வேறு மருத்துவரை சந்திக்க திட்டமிட்டுள்ளேன்" என்றார்.

டாக்டர் தரப்பில் விளக்கம் கேட்க கிளினிக்கிற்குச் சென்றபோது பூட்டப்பட்டிருந்தது. அபிராமபுரம் போலீஸாரிடம் கேட்டபோது, `புகாரின் பேரில் டாக்டர் கார்த்திக்கை கைதுசெய்துள்ளோம்' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு