Published:Updated:

ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்யப்பட்ட சிறார் வதை வீடியோ! - ஈரோடு ஹோட்டல் உரிமையாளரை வளைத்த போலீஸ்

கைதான யோகேஷ்வரன்
கைதான யோகேஷ்வரன்

சிறார் வதை வீடியோக்களை இணையதளங்களில் இருந்து டவுன்லோடு செய்து ஃபேஸ்புக்கிலும் பதிவேற்றி, நண்பர்களுக்கும் பகிர்ந்திருக்கிறார்.

தமிழ்நாட்டில்தான் சிறார் வதை வீடியோக்கள், இணையதளங்களில் அதிகமாகப் பதிவேற்றப்படுகின்றன என்ற சமீபத்திய அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இணையதளங்களில் சிறார் வதை வீடியோக்களை பதிவேற்றுபவர்கள், பார்ப்பவர்கள் ஆகியோரின் பட்டியலை போலீஸார் சேகரிக்க ஆரம்பித்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி ரவி மேற்பார்வையில் மாநிலம் முழுவதும் சிறார் வதைப் படங்களை இணையதளங்களில் பதிவேற்றியவர்களைத் தேடித் தேடி கைது செய்தனர். இந்த விவகாரத்தில் தமிழகம் முழுவதும் அவ்வப்போது கைது சம்பவம் நடைபெற்று வரும் நிலையில் ஈரோடு மாவட்டத்தில் முதல் கைது சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

representational image
representational image

ஈரோடு பாப்பாத்திகாடு பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ்வரன் (35). ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த இவர் ஈரோடு - மேட்டூர் சாலையில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய முகநூல் பக்கத்தில் சிறார் வதைப் படங்கள் மற்றும் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வந்திருக்கிறார். ஈரோடு சோஷியல் மீடியா செல் பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர் பிரகாஷின் கவனத்துக்கு இந்தத் தகவல் கிடைத்திருக்கிறது.

அதையடுத்து, யோகேஷ்வரனின் செல்போன் எண்ணை வைத்து, அவருடைய முகநூல் பக்கத்தை ஆராய்ந்து, அவர்தான் ஆபாசப் படங்களைப் பகிர்ந்திருக்கிறார் என்பதை போலீஸார் உறுதி செய்திருக்கின்றனர். இதையடுத்து, ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸார் யோகேஷ்வரன் மீது வழக்கு பதிவுசெய்து கைது செய்தனர்.

ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்யப்பட்ட சிறார் வதை வீடியோ! - ஈரோடு ஹோட்டல் உரிமையாளரை வளைத்த போலீஸ்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சிறார் வதை வீடியோக்களை இணையதளங்களில் இருந்து டவுன்லோடு செய்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றிவிட்டு, அதை நண்பர்களுக்கும் பகிர்ந்திருக்கிறார். விசாரணையில் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். பாலியல் நோக்கங்களுக்காக முகநூலை தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது போக்ஸோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து, ஈரோடு கிளைச்சிறையில் அடைத்திருக்கிறோம். மேலும், இப்படி சிறார் வதைப் படங்களை பரப்புபவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்” என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு