Published:Updated:

`டூவீலரை பார்க்கிங் ஏரியாவுலதான் நிறுத்தணுமா?'- தியேட்டர் ஊழியரை இரும்பு பைப்பால் தாக்கிய அமமுக ஒ.செ

சிதம்பரத்தில் சினிமா தியேட்டரில் மோட்டார் சைக்கிள் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தியேட்டரை சேதப்படுத்தி, மேலாளரைத் தாக்கிய அ.ம.மு.க ஒன்றியச் செயலாளர் உட்பட 5 பேரை கைது செய்தது போலீஸ்.

தாக்குதல்
தாக்குதல்

சிதம்பரம் எஸ்.ஆர் நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் மில்லர் (50), இவர் அ.ம.மு.க. குமராட்சி ஒன்றியச் செயலாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் சினிமா பார்ப்பதற்காகச் சிதம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ள தியேட்டருக்குச் சென்றுள்ளார். அப்போது டூ வீலரை நிறுத்துவது தொடர்பாக, தியேட்டர் ஊழியர் ராஜாராம் என்பவருக்கும் மில்லருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த தியேட்டர் மேலாளர் மரிய அலெக்சாண்டர், `டூவீலரை அதற்குரிய பார்க்கிங் ஏரியாவில் நிறுத்துங்கள்' என வற்புறுத்தியுள்ளார். பின்னர், மில்லர் தனது டூவீலரை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு சினிமா காட்சி முடிந்து வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

தாக்குதல் காட்சிகள்
தாக்குதல் காட்சிகள்
Vikatan

பின்னர் இரவு 10.30 மணிக்கு மில்லர், அ.ம.மு.க வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் வழக்கறிஞர் பிரபு, அரவிந்த்(32), சந்தோஷ்குமார், கிருபாகரன், நிவேஷ்(22) உள்ளிட்ட 15 பேர் இருப்பு பைப் போன்ற ஆயுதங்களுடன் தியேட்டருக்குச் சென்றுள்ளனர். அங்கு மேலாளர் மரிய அலெக்சாண்டரிடம் தகராறு செய்துள்ளனர். மேலும், தியேட்டரில் இருந்த பொருள்களையும் அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர். இதைத் தடுத்த மேலாளர் மரிய அலெக்சாண்டைரையும் சரமாரியாகத் தாக்கினார்கள். இதில் பலத்த காயமடைந்த மரிய அலெக்சாண்டர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாக்குதல்
தாக்குதல்

இதுகுறித்துத் தகவலறிந்த சிதம்பரம் நகர போலீஸார் தியேட்டருக்குச் சென்று, அங்கிருந்த சிலரை மட்டும் காவல்நிலையம் அழைத்துவந்தனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

தாக்குதல்
தாக்குதல்

இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸார் 11 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து அ.ம.மு.க குமராட்சி ஒன்றியச் செயலாளர் மில்லர், நிவேஷ், அரவிந்தன், கிருபாகரன், சந்தோஷ்குமார் ஆகிய 5 பேரைக் கைது செய்தனர். வழக்கறிஞர் பிரபு உட்பட 10 பேரைத் தேடிவருகின்றனர்.