சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கானா பாடல் இசையமைப்பாளர் சபேஷ் சாலமன் என்பவர்மீது பாலியல் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``நானும் என்னுடைய கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம். கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் சபேஷ் சாலமன் (35) என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் கானா பாடல்களுக்கு இசை அமைப்பாளராக இருப்பதாக என்னிடம் கூறினார். மேலும் ஆசை வார்த்தைகளை கூறி என்னுடைய மனதை மாற்றி என்னுடன் சந்தோஷமாக இருந்தார்.
அப்போது நாங்கள் இருவரும் தனிமையில் இருந்ததை எனக்குத் தெரியாமல் வீடியோ, போட்டோ எடுத்துள்ளார். அதைக் காண்பித்து என்னை மிரட்டி வருகிறார். அவர், என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு துன்புறுத்தினார். அதனால் சபேஷ் சாலமன் குறித்த தகவல்களை அவரின் அப்பா செல்வக்குமாரிடம் கூறினேன். ஆனால் அவரோ தன்னுடய மகனுக்கு ஆதரவாக பேசினார். மேலும் அவரும் எனக்கும் என் குழந்தைக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். என்னுடைய வாட்ஸ்அப்புக்கு கொடூரமாக கொலைசெய்யப்பட்ட ஒருவரின் போட்டோவை அனுப்பி வைத்து மிரட்டினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எனவே செல்வகுமார், அவரின் மகன் சபேஷ் சாலமன் ஆகியோர் இணைந்து என் அந்தரங்க புகைப்படங்களை யூடியூப் ஒன்றில் பதிவு செய்து என்னை மிரட்டி வருகின்றனர். மேலும் இன்னும் சில படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டுகின்றனர். அதனால் சபேஷ் சாலமன் அவரின் தந்தை செல்வகுமார் ஆகியோர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனது மானத்தையும் உயிரையும் காப்பாற்றுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதோடு சில வீடியோக்கள், வாட்ஸ்அப் சாட்டிங் ஆகியவற்றையும் போலீஸாரிடம் அந்தப் பெண் ஆதாரமாக கொடுத்திருந்தார். அதனடிப்படையில் போலீஸார் சபேஷ் சாலமனிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப்பிறகு அவர் மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார் சபேஷ் சாலமனைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இளம்பெண் கொடுத்த ஆதாரங்கள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.