Published:Updated:

உசிலம்பட்டி அருகே கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசுக்கொலையா? - பெற்றோர் கைது

பெண் சிசுக் கொலை
பெண் சிசுக் கொலை ( ஈ.ஜெ.நந்தகுமார் )

அப்போது, இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்ததால் பிறந்து 31 நாள்கள் ஆன குழந்தையைக் கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஒரு மாதக் குழந்தையை பெற்றோர்களே கொலை செய்த சம்பவம், மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அரசின் பல்வேறு திட்டங்களால் தடுக்கப்பட்ட சிசுக்கொலை மீண்டும் இப்பகுதியில் தலை தூக்கி வருவதாகச் சொல்லப்படுகிறது.

சிசுக்கொலை
சிசுக்கொலை
ஈ.ஜெ.நந்தகுமார்

செக்காணூரணியை அடுத்துள்ள புள்ளநேரி கிராமத்தைச் சேர்ந்த வைரமுருகன் - சௌமியா தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஜனவரி 31-ம் தேதி செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், கடந்த மார்ச் 2-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாகக் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி வைரமுருகன் குடும்பத்தினர் வீட்டின் முன்பு புதைத்துள்ளனர். இக்குழந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உள்ளூர் மக்கள் சிலர் வி.ஏ.ஓ-வுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

பெண் சிசுக் கொலை
பெண் சிசுக் கொலை

வி.ஏ.ஒ அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த செக்காணூரணி காவல்துறையினர் குழந்தையின் பெற்றோர் வைரமுருகன், சௌமியா, வைரமுருகனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்ததால் பிறந்து 31 நாள்கள் ஆன குழந்தையைக் கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்கள். கள்ளிப்பால் கொடுத்துக் கொன்றதாக அவர்கள் தெரிவித்துள்ளதாகச் சொல்லப்பட்டாலும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்புதான் அது உறுதி செய்யப்படும்.

இதற்கு முன் இதுபோல் மர்மமான சில குழந்தை மரணங்கள் நிகழ்ந்து வந்தநிலையில், இக்குழந்தை கொலை செய்யப்பட்ட தகவல் மதுரை மாவட்ட மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உசிலம்பட்டி தாசில்தார் டி.எஸ்.பி முன்னிலையில், அரசு மருத்துவர்கள் புதைக்கப்பட்ட பெண்சிசுவை தோண்டி எடுத்து உடற்கூறு பரிசோதனை நடத்தினர்.

30 வருடங்களுக்கு முன் உசிலம்பட்டி வட்டாரத்தில் அதிகமான அளவில் பெண் குழந்தைகளைக் கொல்லும் கொடூரச் சம்பவங்கள் தொடர்ந்ததாலும், பெண் குழந்தை பிறக்கும் என்ற பயத்தில் உயிருக்கு ஆபத்தான முறையில் கருக்கலைப்பு நடந்ததாலும் ஏகப்பட்ட உயிர்ப்பலிகள் ஏற்பட்டன.

சிசுக்கொலை
சிசுக்கொலை
ஈ.ஜெ.நந்தகுமார்

இதைத் தடுக்கும் வகையில் தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தார் ஜெயலலிதா. மருத்துவமனைகள், சோதனை நிலையங்கள் கண்காணிக்கப்பட்டன. அதன் விளைவாகப் பெண் சிசுக்கொலை தடுக்கப்பட்டது. ஆனால், சமீபகாலமாக இக்கொடூர பழக்கம் மீண்டும் தலைதூக்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மாவட்ட சுகாதாரத்துறை குழந்தைகள் பிறப்பை மீண்டும் கண்காணிக்க வேண்டும் என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு