Published:Updated:

சென்னையில் ஹூக்கா போதைக் கலாசாரம்... திடீர் ரெய்டு; 14 பேர் கைது! - பின்னணி என்ன?

ஹூக்கா பார்களை நடத்தியவர்கள்
ஹூக்கா பார்களை நடத்தியவர்கள்

சென்னையில் செயல்படும் ஹூக்கா பார்களில் சிறுவர், சிறுமிகள், இளம்பெண்கள், இளைஞர்கள் விடிய விடிய போதையில் சினிமா பாடல்களுக்கு நடனமாடிவருகின்றனர். சட்டவிரோதமாக பார்களை நடத்திய 14 பேரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் பிரபலமான ஹூக்கா பார்கள், சென்னையிலும் சில ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகின்றன. இது போன்ற பாரில் மேஜைமீது வைக்கப்பட்டிருக்கும் உயரமான கண்ணாடிக் குவளைக்குள் போதை பொருள்கள் இருக்கும். அதில் பொருத்தப்பட்டிருக்கும் நீளமான குழாய்களை உறிஞ்சினால் ஒருவிதமான போதை வரும் (சிகரெட் புகைப்பதுபோல). இந்த வகை பார்கள், உணவகங்கள் என்ற பெயரில் செயல்பட்டுவருகின்றன. இந்த ஹூக்கா பார்களில் விடிய விடிய இளைஞர்கள், இளம்பெண்கள் சந்தோஷமாக இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. கூடுதல் கமிஷனர் தினகரன் உத்தரவின்பேரில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையில் நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி பகுதிகளில் செயல்பட்ட எட்டு ஹூக்கா பார்களில் அதிரடியாகச் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் 14 பேரை போலீஸார் கைதுசெய்து, பார்களையும் மூடினர்.

ஹூக்கா பார்
ஹூக்கா பார்

இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``ரெஸ்டாரன்ட் என்ற பெயரில் ஹூக்கா பார்கள் சென்னையில் செயல்பட்டுவருகின்றன. இதில் அனுமதியின்றி ஹூக்கா பார்களை சிலர் நடத்திவருவதாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. மேலும், அந்த பார்களில் 18 வயதுக்குக் குறைவானவர்களையும் அனுமதித்துவந்திருக்கிறார்கள். சிறுவர், சிறுமிகளைத் தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள், இளம்பெண்கள், இளைஞர்கள் இந்த பார்களில் போதையில் மகிழ்ச்சியாக விடிய விடிய சினிமா பாடல்களுக்கு நடனமாடிவந்திருக்கிறார்கள்.

புதுச்சேரி: `30 லட்ச ரூபாய்க்கு மேல விட்டுட்டேன், மது!' - இளைஞரின் உயிரைப் பறித்த ஆன்லைன் ரம்மி

இதற்காக ஒருவரிடமிருந்து 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. தொடக்க காலத்தில் ஹூக்கா பார்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது சில கட்டுப்பாடுகளுடன் இந்த பார்கள் அனுமதி பெற்று செயல்பட்டுவருகின்றன. நுங்கம்பாக்கம் காலேஜ் சாலையில், செயல்பட்டு வந்த ரெஸ்டாரன்ட்டில் சட்ட விரோதமாக ஹூக்கா பார் நடத்திய ஆன்பம் (45) என்பவரைக் கைதுசெய்திருக்கிறோம். அவரிடமிருந்து 15 கோனிக்கல் கப்ஸ்களை (Conical Cups) பறிமுதல் செய்திருக்கிறோம்.

ஹூக்கா பார்
ஹூக்கா பார்

நுங்கம்பாக்கம், திருமூர்த்தி நகர் பகுதியில் ஹூக்கா பார் நடத்திய தஞ்சாவூரைச் சேர்ந்த வீரகுமார் (22), நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த கபாங்சூயி (28), நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பியூஸ் (38) ஆகிய மூன்று பேரைக் கைதுசெய்திருக்கிறோம். அவர்களிடமிருந்து மூன்று கோனிக்கல் கப்ஸ், இரண்டு டியூப், நான்கு ஃப்ளேவர் பாக்கெட்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். நுங்கம்பாக்கம் ஜெகநாதன் தெருவில் ஹூக்கா பார் நடத்தி வந்த நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ் (32), வியாசர்பாடியைச் சேர்ந்த பார்த்திபன் (39) இருவரையும் கைதுசெய்து அவர்களிடமிருந்து நான்கு கோனிக்கல் கப்ஸ்கள், ஒரு டியூப், நான்கு பாக்கெட்ஸ் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம்.

ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோடு பகுதியில் ஹூக்கா பார் நடத்திவந்த வால்டாக்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த முகேஷ் (29), வால்டாக்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த மான்வர் அன்சாரி (19) இருவரையும் கைதுசெய்திருக்கிறோம். ஆயிரம் விளக்கு வேல்ஸ் கார்டன் பகுதியில் ஹூக்கா பார் நடத்திவந்த கடலூரைச் சேர்ந்த திவான் (27), கடலூர் மாவட்டம் பெரியகுப்பத்தைச் சேர்ந்த மனோ (27) ஆகியோரைக் கைதுசெய்திருக்கிறோம். தொடர்ந்து ஹூக்கா பார்களின் செயல்பாடுகளைக் கண்காணித்துவருகிறோம்" என்றார்.

கைது
கைது
Representational Image
‘தடுமாறிய ஓட்டுநர்... காரில் இருந்த ஹூக்கா!’- ஹரியானாவை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

ஹூக்கா பார்களிலிருந்து மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை சில காவல்துறை அதிகாரிகளுக்கு மாமூலாகக் கொடுக்கப்பட்டுவந்திருக்கிறது. அதனால்தான், சில காவல்துறை அதிகாரிகள் ஹூக்கா பார்களைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். இந்தநிலையில், தென் சென்னையில் பணியாற்றிவரும் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், விடுமுறையில் சென்றிருக்கிறார். அந்தச் சமயத்தில் ஹூக்கா பார்களில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். மாமூல் விவகாரம் காவல்துறையின் தலைமையிடம் வரை சென்றிருக்கிறது. மாமூல் வசூலித்த அதிகாரிகள் மீது காவல்துறையில் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு