Published:Updated:

திண்டுக்கல் இளைஞர் சுட்டுக்கொலை: குற்றவாளிகள் ட்ரிகர் இல்லா துப்பாக்கியை பயன்படுத்தியது எப்படி?

துப்பாக்கி
News
துப்பாக்கி

திண்டுக்கல் அருகே மீன்பிடி குத்தகை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞரை ட்ரிகர் இல்லாத நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் ராகேஷ்குமார்(26). இவர் தனது நண்பர்களுடன் நேற்றுமுன்தினம் இரவு, செட்டிகுளம் அருகே குளக்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த நபர்கள் ராகேஷ் குமார் தரப்பினரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களில் ஒருவர் ராகேஷ் குமாரை துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்த ராகேஷ்குமாரை அவரது நண்பர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடலில் மொத்தம் 6 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. அதிக ரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வு
ஆய்வு

இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக போலீஸார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் துறை வல்லுநர்களும் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதற்கிடையில் குற்றவாளிகளைப் பிடிக்க எஸ்.பி சீனிவாசன் உத்தரவின் பேரில் ஏ.எஸ்.பி அருண் கபிலன் தலைமையில் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கொண்ட 5 தனிப்படைகளை அமைத்தனர். தனிப்படையினர் மரியநாதபுரம் பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து மீன் குத்தகை ஏலத்தில் போட்டியாகச் செயல்பட்ட மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த மரிய ஆரோக்கியதாஸ் மகன் பிரகாஷ்(36), சந்தியாகு மகன் மரியபிரபு(37), பெருமாள் மகன் ஜான்சூர்யா(27), பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி(28) உள்ளிட்டோருக்குக் கொலையில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நால்வரையும் கைது செய்த போலீஸார், கொலைக்குப் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, 2 அரிவாள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஐஜி அன்பு
ஐஜி அன்பு

நாட்டுத் துப்பாக்கியால் இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட செட்டிக்குளம் பகுதியில் ஆய்வு செய்த தென்மண்டல ஐ.ஜி அன்பு, ''திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியில் நள்ளிரவில் ராகேஷ் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த12 மணி நேரத்துக்குள் காவல் துறையினர் விரைந்து குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தொடர்புடைய நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர். குற்றங்களைத் தடுக்க பல்வேறு பிரிவுகளில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

விசாரணை
விசாரணை

திண்டுக்கல் மாவட்டத்தில் நாட்டுத்துப்பாக்கிகள் சர்வசாதரணமாக கிடைக்கும் நிலையில் குற்றவாளிகள் எந்த வகையான துப்பாக்கியை பயன்படுத்தினர் எனப் போலீஸாரிடம் விசாரித்தோம். ''ஒரு இரும்பு பைப், சிறு கட்டைகள், இறுக்கமாக கட்டுவதற்கு சைக்கிள் ட்யூப், கொஞ்சம் வெடி மருந்து, சைக்கிள் வீல்களுக்கு பயன்படுத்தப்படும் பால்ராஸ் உருண்டைகள் இருந்தால் போதும் இந்தத் துப்பாக்கியை செய்துவிடலாம். இது துப்பாக்கி வகையைக் கூட சேராது. பறவைகளை அடிக்க பயன்படுத்தப்படும் கவண் செயல்படும் விதம் போல இது தயாரிக்கப்படும். குறிப்பாக மலைப்பகுதிகளில் வாழக்கூடிய மக்கள் வனவிலங்குகளிடம் தற்காத்துக் கொள்வதற்காக இதைப் பயன்படுத்துவார்கள். ட்ரிகருக்கு பதிலாக பட்டாசுகளில் வைக்கப்படும் திரியை வைத்து அதில் தீ வைத்து வானை நோக்கி சுட்டால் பெரும் சப்தம் ஏற்பட்டு விலங்குகள் ஓடிவிடும். இவ்வாறு பயன்படுத்தப்படும் நாட்டுத் துப்பாக்கியை கொலையாளிகள் மிகஅருகில் வந்து சுட்டதால் தான் 6 குண்டுகளும் உடலில் புகுந்து உயிரிழப்பை ஏற்படுத்திவிட்டது. தூரத்தில் இருந்து சுட்டிருந்தால், சிறுகாயங்கள் மட்டுமே ஏற்பட்டிருக்கும்'' என்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பாரம்பர்யமாக நாட்டுத்துப்பாக்கியை வீட்டிலேயே தயாரித்து வனவிலங்குகளை விரட்டுவதற்காக பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. கடந்த ஆண்டு கூட, மலைகளை ஒட்டி வசிக்கக்கூடிய மக்களிடம் நாட்டுத்துப்பாக்கி வைத்திருபது சட்டப்படி குற்றம். எனவே துப்பாக்கிகளை போலீஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே போலீஸார் ஒப்படைத்திருந்த நிலையில் போலீஸார் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், நாட்டுத்துப்பாக்கியால் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையிலாவது தொடர்ச்சியாக கண்காணித்து நாட்டுத்துப்பாக்கி தயாரிப்பவர்களையும், பயன்பாட்டில் வைத்திருப்பவர்களையும் போலீஸார் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்கும்.