Published:Updated:

திருப்பத்தூர் பாஜக நிர்வாகியைக் கடத்திக் கொன்ற கும்பல்; பகீர் பின்னணி பகிரும் போலீஸ்!

கொலைசெய்யப்பட்ட பாஜக நிர்வாகி கலிகண்ணன்

பாஜக நிர்வாகியைக் கடத்திச் சென்று கொலைசெய்த கும்பலை போலீஸார் கைதுசெய்தனர்.

திருப்பத்தூர் பாஜக நிர்வாகியைக் கடத்திக் கொன்ற கும்பல்; பகீர் பின்னணி பகிரும் போலீஸ்!

பாஜக நிர்வாகியைக் கடத்திச் சென்று கொலைசெய்த கும்பலை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கொலைசெய்யப்பட்ட பாஜக நிர்வாகி கலிகண்ணன்

திருப்பத்தூர் பாரதிய ஜனதா கட்சியின் நகரத் துணைத் தலைவராக இருந்தவர் கலிகண்ணன். இவர், திருப்பத்தூர் செட்டித்தெருவில் வாட்டர் கேன்களை விநியோகிக்கும் கடை வைத்திருக்கிறார். கடந்த, 23-ம் தேதி இரவு 10 மணியளவில் கடையிலிருந்த கலிகண்ணனை, அங்கு ஸ்கார்பியோ காரில் வந்திறங்கிய மர்ம நபர்கள், கத்திமுனையில் அதே காரில் கடத்திச்சென்றனர்.

இந்த நிலையில், இரவு முழுவதும் வீடு திரும்பாத அவர், 24-ம் தேதி காலை கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வெப்பாலம்பட்டி பகுதியிலுள்ள, கிரஷர் கம்பெனிக்கு அருகில் கழுத்தில் பலத்த வெட்டுக் காயத்துடன் படுகொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.

ஹரிவிக்னேஷ்
ஹரிவிக்னேஷ்

ஊத்தங்கரை போலீஸார், கலிகண்ணனின் சடலத்தை மீட்டு, குற்றவாளிகளைத் தேடிவந்த நிலையில், நேற்று முன்தினம் (24-ம் தேதி), திருப்பத்தூரைச் சேர்ந்த ஹரிவிக்னேஷ் (25), காரப்பனூர் அம்பேத்கர் நகர் அருண்குமார் (25), ஆந்திராவைச் சேர்ந்த ஆனந்த் (22), தக்காளி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (22), கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்த அருண் (22), குப்பத்தைச் சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகிய ஆறு பேரை போலீஸார் கைதுசெய்தனர். நேற்று (25-ம் தேதி) இரவு, அப்துல் அலி உசேன் (வயது 30), நசீர் என்பவரின் மகன் சமீர் (23) ஆகியோரைக் கைதுசெய்தனர். எட்டுப் பேரையும் ஊத்தங்கரை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கலிகண்ணன் செல்போன் டவர் சிக்னலை ட்ராக் செய்த போலீஸார், அவரின் எண்ணுடன், குற்றவாளிகளின் செல்போன் சிக்னலும் நகர்ந்ததைக் கண்டறிந்து அவர்களைக் கைதுசெய்தனர்.

சொத்துத் தகராறு!

இது குறித்து ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபனிடம் பேசினோம். ``ஹரிவிக்னேஷ் பி.எஸ்சி அனிமேஷன் டிகிரி முடித்துவிட்டு ஊரில் ஃபைனான்ஸ் செய்துவருகிறார். அவர் தந்தை சுப்ரமணியம் பல ஆண்டுகளாக திமுக–வில் இருக்கிறார். ஹரிவிக்னேஷ் தி.மு.க இளைஞரணியில் இருப்பதாகக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

தந்தை சுப்ரமணியத்தின் சகோதரிகள் லட்சுமி, லலிதா. இதில், லலிதாவுக்கு வாரிசுகள் கிடையாது, இவர் சிறுவயது முதலே ஹரிவிக்னேஷை வளர்த்துவந்திருக்கிறார். கலிகண்ணன் ஐந்து சென்ட் இடத்தை இவர்களிடம் குத்தகைக்குப் பிடித்திருக்கிறார். லலிதா, லட்சுமி ஆகியோர் இறந்துவிட்ட நிலையில், ‘நிலம் எங்களுக்குத்தான் சொந்தம்’ எனக் கூறி, கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளனர். தீர்ப்பு ஹரிவிக்னேஷ் குடும்பத்தாருக்குச் சாதகமாக அமைந்தது. கலிகண்ணனைக் காலிசெய்ய தொடர்ந்து ஹரிவிக்னேஷ் வலியுறுத்திவந்திருக்கிறார்.

கலிகண்ணன் மறுத்ததால், 2016-ல் அவரைக் கத்தியால் குத்தி கொலைசெய்ய முயன்றார். ஹரிவிக்னேஷ் மீது, கலிகண்ணன் கொடுத்த கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருக்கிறது. தன்மீதுள்ள வழக்கைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், நிலத்தைக் காலிசெய்ய வலியுறுத்தியும் ஹரிவிக்னேஷ் தொடர்ந்து கலிகண்ணனை மிரட்டிவந்ததுடன், கொலைசெய்யவும் திட்டமிட்டார்.

இவருக்கு அருண்குமார் நெருங்கிய நண்பர். தன்னுடைய பிரச்னையை அருண்குமாரிடம் தெரிவித்திருக்கிறார். பிறகு, அருண்குமார் தன் நண்பர்களை அழைத்துவந்திருக்கிறார். எட்டுப் பேரும் சேர்ந்து, ‘ஸ்கார்பியோ’ காரில் சென்று, கலிகண்ணனை அவரது ‘குடோனில்’ கத்திமுனையில் மிரட்டிக் கடத்தி, சம்பவ இடத்தில் வைத்து, அரிவாள், பட்டாகத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி, கழுத்தை அறுத்துக் கொலைசெய்துள்ளனர்" என்றார்.