Published:Updated:

`கர்நாடகா, தெலங்கானாவில் ஃபேமஸானதால் சென்னைக்கு வந்தேன்!' - அதிர்ச்சி கொடுத்த `இடது கை' கொள்ளையன்

அமோல்பாலசாஹே சிண்டே
அமோல்பாலசாஹே சிண்டே

தெலுங்கு, தமிழ் பேசும் பெண்கள்தாம் அதிகளவில் நகைகளை அணிவார்கள். அதனால்தான் தெலங்கானாவில் கொள்ளையடித்துவிட்டு சென்னை வந்தேன் என்று இடது கையால் திருடும் கொள்ளையன் போலீஸாரிடம் கூறியுள்ளார்.

சென்னையில் தனியாக நடந்து செல்லும் மூதாட்டிகளிடம் செயின்பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. இதுகுறித்து விசாரணை நடத்த திருமங்கலம் உதவி கமிஷனர் சிவக்குமார் தலைமையில் ஸ்பெஷல் டீம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜா, தலைமைக் காவலர்கள் ரவி, ராஜா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதையடுத்து, செயின் பறிப்பு நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தனிப்படை போலீஸார் ஆய்வு செய்தனர்.

மகாராஷ்ட்ரா கொள்ளையன்
மகாராஷ்ட்ரா கொள்ளையன்

போலீஸாரிடம் கிடைத்த அனைத்து சிசிடிவி பதிவுகளிலும் பைக்கில் சென்று செயின்களைப் பறிக்கும் நபரின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் தனிப்படை போலீஸார் சோர்ந்து போகாமல் தொடர்ந்து விசாரணையை விரிவுபடுத்தினர். சுமார் 70-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளைப் பார்த்தனர். அப்போது ஒரே ஒரு சிசிடிவியில் காலில் ஷூ, முழு கைசட்டை, கையில் ஹெல்மெட்டுடன் டீக்கடை முன் அந்தநபர் நின்றுகொண்டிருந்தார். அந்த நபரைப் பார்த்த தனிப்படை போலீஸார், அவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து வாட்ஸ்அப் மூலம் அந்த நபரின் புகைப்படத்தை வட மாநில போலீஸாருக்கு சென்னை போலீஸார் அனுப்பி வைத்தனர். அப்போது சைபராபாத் போலீஸார், சென்னை போலீஸாரைத் தொடர்புகொண்டனர்.

`நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் நபர், தெலங்கானா மாநிலத்தில் குற்றவழக்கில் கைது செய்யப்பட்டவர். அவர் மீது 18 செயின் பறிப்பு வழக்குகள் உள்ளன. அவரிடமிருந்து 15,00,000 ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம். அதோடு அவரின் பெயர் அமோல்பாலசாஹே சிண்டே (29), மகாராஷ்ட்ரா மாநிலம், பர்பானி, கானாபூர்பாட்டா, யஷ்வந்த்நகரைச் சேர்ந்தவர். 10-ம் வகுப்பு வரைப் படித்த சிண்டே டிரைவராகப் பணியாற்றியவர்.

`காலையில் டிபன் கடை; மதியம் செயின் பறிப்பு!' -சென்னையில் கணவரின் தம்பியுடன் சிக்கிய இளம்பெண்
சிசிடிவியில் பதிவான கொள்ளையன்
சிசிடிவியில் பதிவான கொள்ளையன்

இவருக்கு மூன்று சகோதரிகள். அவர்களுக்குத் திருமணமாகிவிட்டது. பர்பானியில் பெற்றோருடன் வாழ்ந்துவரும் மோல்பாலசாஹே சிண்டேவுக்கு சில கெட்டப் பழக்க வழக்கங்கள் உள்ளன. மேலும், ஆடம்பரமாக வாழ குறுக்குவழியில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டு 2013-ம் ஆண்டு முதல் செயின்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுவருகிறார். செயின்பறிப்பு வழக்கில் பர்பானி போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சிறையிலிருந்து வெளியில் வந்த சிண்டே, மீண்டும் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டார். 2014-ம் ஆண்டு அவுராங்கபாத் போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். 2016-ல் மகாராஷ்ட்ரா மாநிலம் லாத்பூர் போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். அப்போதுதான் சிண்டேவுக்கு சிறையிலிருந்த சஞ்சய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சஞ்சய், தெலுங்கு பேசும் மக்கள், அதிகளவில் நகைகளை அணிவார்கள் என்ற தகவலை சிண்டேவிடம் கூறியுள்ளார். சிறையிலிருந்து வெளியில் வந்த சிண்டே, நண்பர் ஒருவரின் பெயரில் ரேஸ் பைக் ஒன்றை வாங்கினார். அந்தப் பைக் மூலம் தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதால் அந்தமாநில போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிசிடிவியில் சிக்கிய மகாராஷ்ட்ரா கொள்ளையன்
சிசிடிவியில் சிக்கிய மகாராஷ்ட்ரா கொள்ளையன்

சிண்டே, தன்னுடன் யாரையும் பைக்கில் அழைத்துச் செல்லமாட்டார். தனியொருவனாகவே செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவார். செயினை பறிப்பதற்குமுன் அந்த இடம் குறித்த விவரங்களை சேகரித்துக் கொள்வார். பின்னர், கழுத்தில் நகைகளை அணிந்து செல்லும் பெண்களை பைக்கில் சென்றபடி நோட்டமிடுவார். இதையடுத்து அந்தப் பெண்களுக்கு எதிர்த்திசையில் பைக்கில் வரும் சிண்டே, தனது இடது கையால் செயின்களைப் பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் சென்றுவிடுவார். சிண்டேவின் டார்கெட் மூதாட்டிகள்தாம். இவர் மீது கர்நாடகா, மகாராஷ்ட்ரா, தெலங்கானா என 3 மாநில காவல்துறையில் 28-க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு வழக்குகள் உள்ளன' என்று சிண்டேவின் முழு ஹிஸ்டரியை சென்னை போலீஸாரிடம் சைபராபாத் போலீஸார் தெரிவித்தனர்.

`காலையில் டிபன் கடை; மதியம் செயின் பறிப்பு!' -சென்னையில் கணவரின் தம்பியுடன் சிக்கிய இளம்பெண்

இதையடுத்து சிண்டேவின் இருப்பிடத்தை சென்னை போலீஸார் ரகசியமாகக் கண்காணித்தனர். அப்போதுதான் சிண்டே, பிப்ரவரி 7-ம் தேதி ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு விமானத்தில் வருவது குறித்த தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. அந்தத் துருப்பு சீட்டைக் கொண்டு சென்னையில் சிண்டே தங்கியிருக்கும் இடத்தை போலீஸார் விசாரித்தனர். பிப்ரவரியில் சென்னை வந்த சிண்டே, பைக்கில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட பிறகு மீண்டும் விமானத்தில் சென்ற விவரம் கிடைத்தது.

செயின் பறிப்பில் ஈடுபட்ட பைக்
செயின் பறிப்பில் ஈடுபட்ட பைக்

இந்தச் சமயத்தில் திருமங்கலம் பகுதியில் சிண்டே, பைக்கில் வரும் தகவல் ஸ்பெஷல் டீம் போலீஸாருக்குக் கிடைத்தது. உடனடியாக வாகனச் சோதனையில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது தலையில் ஹெல்மெட் அணிந்தபடி, காலில் ஷூ, டிப்டாப்பாக டிரஸ் அணிந்துகொண்டு பைக்கில் வந்தார். அவரை வழிமறித்து சோதனை நடத்திய போலீஸார் சிண்டேவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிண்டே மீது சென்னையில் 7 செயின்பறிப்பு வழக்குகள் உள்ளன. தெலங்கானா, கர்நாடகா மாநில போலீஸார், சிண்டேவைத் தேடிக்கொண்டிருந்த சமயத்தில் சென்னை திருமங்கலம் உதவி கமிஷனர் சிவக்குமாரின் ஸ்பெஷல் டீம் போலீஸிடம் சிக்கியுள்ளார்.

சிண்டேவிடம் போலீஸார் விசாரித்தபோது, ``தெலுங்கு, தமிழ் பேசும் பெண்கள், கழுத்தில் அதிக தங்கச் செயின்களை அணிவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கர்நாடகா, மகாராஷ்ட்ரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் செயின் பறிப்பில் நான் ஃபேமஸாகிவிட்டதால் சென்னைக்கு வந்தேன்" என்று இந்தியில் கூறியதாகப் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு