Election bannerElection banner
Published:Updated:

ஆந்திரா: முன்விரோதம், ஆத்திரம் - 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரைக் கொன்ற கொடூரன்

கைதுசெய்யப்பட்ட அப்பளராஜு
கைதுசெய்யப்பட்ட அப்பளராஜு

ரத்தக்கரை படிந்த சட்டையுடன், அருகில் தான் கொலை செய்யப் பயன்படுத்திய அரிவாளை வைத்துவிட்டு சுவரில் சாய்ந்தபடி அப்பளராஜு  உறங்கிக்கொண்டிருந்திருக்கிறார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் அவரைக் கைதுசெய்தனர்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், ஜூட்டாடா கிராமத்தைச் சேர்ந்தவர் ராமாராவ். இவரின் மனைவி உஷா. இந்தத் தம்பதிக்கு உதய் என்ற 2 வயது மகனும், ஊர்நிஷா என்ற இரண்டு மாதப் பச்சிளம் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. உஷாவுக்கு குழந்தை பிறந்திருப்பதால் அவரைப் பார்ப்பதற்காக ஊரிலிருந்து ராமாராவின் உறவினர்களான ரமாதேவி, அருணா ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன் ராமாராவ் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். அன்றைய தினமே ஊருக்குத் திரும்பவிருந்த உறவினர்கள் உஷா கேட்டுக்கொண்டதன் பேரில் சில நாள்கள் அவர்களுடன் தங்கியிருந்திருக்கிறார்கள்.

குடும்பம்
குடும்பம்
Representational Image

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவரும் ராமாராவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அப்பளராஜு என்பவருக்கும் இடையே சில வருடங்களாகத் தகராறு இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த முன்விரோதத்தின் காரணமாக அப்பளராஜு 2018-ல் ராமாராவை மிரட்டித் தாக்கியிருக்கிறார். அப்போது ராமாராவ் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். போலீஸார் அழைத்து அடித்து, கண்டித்து அனுப்பியதால் சில மாதங்கள் தன் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய அப்பளராஜு, ஊருக்குத் திரும்பியதும் மீண்டும் ராமாராவைப் பழிவாங்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

அப்பளராஜு ராமாராவைப் பழிவாங்க நேரம் பார்த்துக் காத்திருந்திருக்கிறார். இந்தநிலையில், நேற்று முன்தினம் ராமாராவ் தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் கடைவீதியில் சந்தோஷமாக நடந்து செல்வதைக் கண்ட அப்பளராஜு ஆத்திரமடைந்துள்ளார். பொதுவெளி என்பதால் ராமாராவை வீடு புகுந்து தாக்கத் திட்டமிட்ட அப்பளராஜு, நேற்று முன்தினம் நள்ளிரவு ஊரில் ஆள் நடமாட்டம் குறைந்தவுடன் அரிவாளுடன் ராமாராவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு ராமாராவ் , அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தார்கள்.

MURDER
MURDER
Representational Image

அப்பளராஜு வெளியிலிருந்து கதவை மெல்லத் தட்ட, ராமாராவ் தூக்கம் தெளிந்து கதவைத் திறந்திருக்கிறார். அப்போது மறைந்திருந்த அப்பளராஜு ராமாராவை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்து வீட்டுக்குள் தள்ளியிருக்கிறார். ராமாராவின் அலறல் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்த குடும்பத்தினர் அப்பளராஜுவைப் பார்த்து பயத்தில் கத்திக் கூச்சலிட்டிருக்கின்றனர். அரிவாளால் வெட்டப்பட்டதில் ராமாராவின் உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்திருக்கிறது.

ராமாராவைக் கொன்றதுடன் அங்கிருந்து தப்பிக்க முயன்ற அப்பளராஜு அவர் குடும்பத்தினர் கூச்சலிட்டு அலறியதால் அவர்களையும் தீர்த்துக்கட்ட முடிவெடுத்து, ராமாராவின் மனைவி உஷாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியிருக்கிறார். அதைக் கண்டு துடிதுடித்துப்போன ராமாராவ் உறவினர்கள் அருணா மற்றும் ரமாதேவி ஆகியோர் பச்சிளம் குழந்தைகளை அப்பளராஜுவிடமிருந்து காப்பாற்ற முயன்றிருக்கிறார்கள். கணவன், மனைவி இருவரையும் வெட்டிச் சாய்த்தும் ஆத்திரம் தணியாத அப்பளராஜு, அருணாவையும் ரமாதேவியையும் வெட்டியிருக்கிறார். அவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்ததை அடுத்து `வீர் வீரெ’ன அலறிக்கொண்டிருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளையும் இரக்கமே இல்லாமல் தூக்கியெறிந்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றிருக்கிறார்.

அதையடுத்து, பகுதி மக்கள் படுகொலை தொடர்பாகக் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த மூன்று பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேரின் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

சம்பவம் தொடர்பாக அக்கம்பக்கத்தில் விசாரித்ததில், அனைவரும் அப்பளராஜு பெயரையே கூற, போலீஸார் அப்பளராஜு வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். அங்கு ரத்தக்கரை படிந்த சட்டையுடன், அருகில் தான் கொலை செய்யப் பயன்படுத்திய அரிவாளை வைத்துவிட்டு சுவரில் சாய்ந்தபடி அப்பளராஜு உறங்கிக்கொண்டிருந்திருக்கிறார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் அவரைக் கைதுசெய்து காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று விசாரித்துவருகின்றனர்.

கோயில் வாசலில் தலை... தண்டவாளத்தில் உடல் - தஞ்சையை அதிரவைத்த இளைஞரின் படுகொலை!

இர்ண்டு பச்சிளம் குழந்தைகள் மற்றும் மூன்று பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு