சேலம், பொம்முடி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(31). இவர் ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி பகுதியில் தனது நண்பருடன் இணைந்து இரும்பு கடை வைத்து நடத்தி வந்தார். இவரது கடையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்கள் இருவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்திருக்கின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சந்தோஷ் குமார் கடையைவிட்டு வெளியேரும்போது, அந்த வட மாநில சிறுவர்கள் இருவரும் அவரை கத்தியால் சரமாரியாக தாக்கியிருக்கின்றனர். பயத்தில் ஓட முயன்றவரை கல்லால் தாக்கியிருக்கின்றனர். பின்னர் அவரின் அலறல் சத்தம் கேட்டு, கூட்டம் கூடியதால் அங்கிருந்து தப்பியோடியிருக்கின்றனர். அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, சந்தோஷ் குமார் ரத்த வெள்ளத்தில் கழுத்திலும், வயிற்றிலும் காயப்பட்டு கிடந்திருக்கிறார்.

அதையடுத்து அவரை மீட்டு, ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனெவே இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீவட்டிப்பட்டி போலீஸார், அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி சம்பந்தப்பட்ட சிறுவர்கள் இரண்டு பேரையும் பிடித்தனர். அதன்பின் அவர்களிடம் விசாரணை செய்ததில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சந்தோஷ் குமார் கட்டுக்கட்டாகப் பணத்தை கல்லாவில் வைப்பதை பார்த்ததாகவும், அதனால் அதை எடுத்துக்கொண்டு தங்களது ஊருக்கு சென்று செட்டில் ஆகிவிடலாம் என்று எண்ணியதாகவும் கூறியிருக்கின்றனர்.
மேலும் போலீஸார் சம்பந்தப்பட்ட இரண்டு சிறுவர்களையும் வேலைக்கு சேர்த்துவிட்டது யார்? எதுவும் ஏஜென்ட் மூலம் வேலைக்கு சேர்ந்தார்களா? அவர்களது பிண்ணனியில் யார் உள்ளனர் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.