சென்னை புனித தோமையார்மலை காவல் மாவட்டத்தில் உமா(32, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் குடியிருந்து வருகிறார். இவரின் கணவர் இறந்துவிட்டார். அதனால் மூன்று குழந்தைகளுடன் உமா வசித்து வருகிறார். இந்தநிலையில் உமாவுக்கும் ராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன் மனைவி போல ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் உமாவின் 14 வயது மகளுக்கு ராஜா பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து உமாவிடம் அவரின் மகள் கூறியுள்ளார். அதன்பிறகும் சிறுமிக்கு பாலியல் தொல்லை தொடர்ந்திருக்கிறது. அதனால் உமாவின் மகள், தன்னுடைய மாமா நாகராஜிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நாகராஜ், மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். சிறுமி அளித்த தகவலின்படி ராஜா (33) மீதும் உடந்தையாக இருந்த சிறுமியின் அம்மா மீதும் வழக்கு பதிவு செய்தனர். ராஜாவின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயிலாகும். விசாரணைக்குப்பிறகு இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இன்னொரு சம்பவம்
சென்னை கண்ணகிநகர் குடிசைமாற்று வாரிய பகுதியில் வசிப்பவர் சித்ரா (பெயர் மாற்றம்). 32 வயதாகும் இவர் நேற்று வீட்டின் அருகே வந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சித்ராவிடம் தகராறு செய்தார். அதனால் சித்ரா, ஏன் இவ்வாறு செய்கிறாய் என்று சதீஷ்குமாரிடம் கேட்டிருக்கிறார்.

அதற்கு சதீஷ்குமார், திடீரென தன்னுடைய ஆடைகளை கழற்றியிருக்கிறார். இதுகுறித்து சித்ரா, கண்ணகிநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு உள்பட சில பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் சதீஷ்குமாரை (25) கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் திருட்டு, அடிதடி வழக்குகள் உள்ளன.