Published:Updated:

வங்கிக் கணக்கை ஹேக் செய்து ரூ.2 கோடி கொள்ளை; சிசிடிவி கேமராவில் சிக்கிய நைஜீரியர்கள் - நடந்தது என்ன?

சைபர் கொள்ளை

சென்னையிலுள்ள வங்கிக் கிளையின் அக்கவுன்ட்டை ஹேக் செய்து அதிலிருந்த கோடிக் கணக்கான ரூபாயைக் கொள்ளையடித்த நைஜீரியாவைச் சேர்ந்த கொள்ளையர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

வங்கிக் கணக்கை ஹேக் செய்து ரூ.2 கோடி கொள்ளை; சிசிடிவி கேமராவில் சிக்கிய நைஜீரியர்கள் - நடந்தது என்ன?

சென்னையிலுள்ள வங்கிக் கிளையின் அக்கவுன்ட்டை ஹேக் செய்து அதிலிருந்த கோடிக் கணக்கான ரூபாயைக் கொள்ளையடித்த நைஜீரியாவைச் சேர்ந்த கொள்ளையர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

Published:Updated:
சைபர் கொள்ளை

சென்னையைச் சேர்ந்த வங்கி ஒன்றின் கிளையிலிருந்து 2.61 கோடி ரூபாய் ஆன்லைன் மூலம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் புகாரளிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீஸாரை விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி ஆலோசனையில், துணை கமிஷனர் கிரண் ஸ்ருதி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், சம்பந்தப்பட்ட வங்கியில் பணியாற்றியவர்களிடம் விசாரித்தனர். அப்போது, வங்கிக் கணக்கு ஹேக் செய்யப்பட்ட தகவல் தெரியவந்தது. இந்த ஸ்டைல் கொள்ளைச் சம்பவத்தில் பெரும்பாலும் நைஜீரியர்கள்தான் ஈடுபடுவார்கள் என்பதால் அந்தக் கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.

காட்வின்
காட்வின்

அப்போது வங்கிக் கணக்கை ஹேக் செய்த கொள்ளைக் கும்பல் டெல்லியில் இருப்பது தெரியவந்தது. அதனால் தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையிலான போலீஸார் டெல்லிக்குச் சென்று விசாரித்தனர். விசாரணையில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்கேன் காட்வின் (37), அகஸ்டின் (42) ஆகியோர்தான் பணத்தைக் கொள்ளையடித்தார்கள் என்பது தெரியவந்தது. அதனால் அவர்கள் டெல்லியில் தங்கியிருக்கும் இடத்தை போலீஸார் கண்டறிந்து அங்கு சென்று இருவரிடமும் விசாரித்தனர். அப்போது பணத்தைக் கொள்ளையடித்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். பின்னர் இருவரையும் கைதுசெய்த போலீஸார், அவர்களை துவாரகா மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்செய்து, மேல் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனர்.

இது குறித்து போலீஸார் , ``சம்பந்தப்பட்ட வங்கித் தரப்பில் சைபர் க்ரைம் பிரிவிடம் புகாரளிக்கப்பட்டதும், கொள்ளை எப்படி நடந்தது என்று விசாரித்தோம். அப்போது வங்கியின் கிளைக்கு ஒரு மெயில் வந்திருக்கிறது. அந்த மெயிலை ஊழியர்கள் ஓப்பன் செய்திருக்கிறார்கள். அந்த மெயிலில் தகவல்கள் எதுவும் இல்லாததால், அதை ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மெயில் மூலம் வங்கிக் கிளையின் கணக்கை அந்தக் கும்பல் ஹேக் செய்து பணப் பரிவர்த்தனைக்கான லாகின் ஐடி, பாஸ்வேர்டு ஆகியவற்றைத் திருடியிருக்கிறது. அதன் பிறகு அதைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கிலிருந்த பணத்தை 41 பரிவர்த்தனைகள் மூலம் 32 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்திருக்கிறார்கள்.

அகஸ்டின்
அகஸ்டின்

இந்தத் தகவல்கள் தெரிந்ததும் இந்த ஸ்டைலில் கொள்ளையடிக்கும் நைஜீரிய கொள்ளைக் கும்பல்களைக் கண்காணித்தோம். அதற்காக வங்கியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் எந்த வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்ற விவரங்களை, சுமார் 60 நாள்களாகச் சேகரித்தோம். இந்தப் பணிதான் எங்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. மேலும், அந்த அக்கவுன்ட்டிலிருந்து யாராவது பணம் எடுக்கிறார்களா என்பதையும் தொடர்ந்து கண்காணித்தோம். அப்போதுதான் குறிப்பிட்ட சில வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை நைஜீரியைச் சேர்ந்த இருவர் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி எடுத்தது தெரியவந்தது. உடனடியாக அந்த ஏடிஎம் மையத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோதுதான் எக்கேன் காட்வினும், அகஸ்டினும் சிக்கிக்கொண்டனர். இருவரிடமிருந்து சுமார் ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டிருக்கிறது. மேலும் 15 வங்கிகளுக்கு நோட்டீஸ் கொடுத்து மீதிப் பணத்தை திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் வேலை தேடி இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.