Published:Updated:

திண்டுக்கல்: காதலனுக்கு நேர்ந்த கொடூரம்; காதலியின் கண்முன்னே உறவினர்கள் வெறிச்செயல்!

நத்தம்
நத்தம்

திண்டுக்கல்லில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலியின் அண்ணனே காதலியின் கண்முன் காதலனைக் கல்லால் தாக்கிக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும், ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள புதுப்பட்டி கைபைபுரத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா. இவர் கேட்டரிங் படித்துவிட்டு, சிறுமலையிலுள்ள தனியார் தோட்டத்தில் வேலை செய்துவருகிறார். இவர், மூங்கில்பட்டி முல்லைநகரைச் சேர்ந்த அகிலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை, கடந்த ஐந்து ஆண்டுகளாகக் காதலித்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. இருவரும் காதலித்தது பெண்ணின் வீட்டாருக்குத் தெரியவந்ததுள்ளது. இதையடுத்து, பெண்ணை அவரது பெற்றோர்கள் வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்ததாகச் சொல்லப்படுகிறது.

உயிரிழந்த பாரதிராஜா
உயிரிழந்த பாரதிராஜா

இந்த விவகாரத்தை, தனது காதலன் பாரதிராஜாவிடம் அந்தப் பெண் கூறியிருக்கிறார். தன் காதலியின் ஊரான மூங்கில்பட்டி முல்லை நகர் பகுதிக்கு, பைக்கில் நண்பர்களுடன் சென்றிருக்கிறார் பாரதிராஜா. அங்கு போனில் தொடர்புகொண்டு காதலியை வரச்சொல்லி இருவரும் அங்கிருந்து பைக்கில் ஊரைவிட்டுச் சென்றுள்ளனர். இதையறிந்த பெண்ணின் பெற்றோர், அண்ணன் மலைச்சாமி, உறவினர்கள் ஆகியோர் இருவரையும் தேடிச் சென்றுள்ளனர்.

பாரதிராஜாவின் வீட்டின் அருகே இரண்டு பேரையும் மடக்கிப் பிடித்துள்ளனர். அப்போது பாரதிராஜாவுக்கும் மலைச்சாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மலைச்சாமி, அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து பாரதிராஜாவின் தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

உயிரிழந்த பாரதிராஜாவின் உறவினரகள்
உயிரிழந்த பாரதிராஜாவின் உறவினரகள்

இதில், மண்டை உடைந்து அதிக ரத்தக்கசிவில் துடித்த பாரதிராஜாவை, 108 ஆம்புலன்ஸில் நத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், பாதி வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக நத்தம் போலீஸார், பெண்ணின் தந்தை ராசு, தாய் அழகு நாச்சி, அண்ணன்கள் மலைச்சாமி, பாலக்குமார் ஆகிய நான்கு பேரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். காதலியின் கண்முன்னே காதலன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு