Published:Updated:

`காப்பகத்தில் குழந்தை; விற்க முயன்ற பெற்றோருக்குச் சிறை!' - கோவை போலீஸார் நடவடிக்கை

கோவையில் குழந்தையை விற்க முயன்ற தம்பதி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

குழந்தைக் கடத்தல்
குழந்தைக் கடத்தல்

கோவை அருகே உள்ள மதுக்கரையைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவர் மதுக்கரை காவல் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். மேலும், அப்பகுதியில் தி.மு.க துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.

குழந்தைக் கடத்தல்
குழந்தைக் கடத்தல்

இவர், செவ்வாய்க்கிழமை மாலை ஆண் குழந்தையை ஈரோடு சூரம்பட்டியைச் சேர்ந்த ஹசீனா மற்றும் கல்யாணி ஆகியோர் மூலம் விலைக்கு வாங்க எண்ணி கருமத்தம்பட்டி வந்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த கண்ணன் மற்றும் ஜோதி தம்பதியரின், பிறந்து 40 நாள்களே ஆன குழந்தையை ரூ.2.50 லட்சத்துக்கு விலைபேசி, வாங்க முயற்சி செய்துள்ளனர்.

குழந்தைக் கடத்தல்
குழந்தைக் கடத்தல்

குழந்தையை வாங்கும்போது பணம் கொடுக்கல் வாங்கலில் இவர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஹசீனா, கல்யாணி ஆகியோரைத் தனது காரில் ஏற்றிக்கொண்டு ஜாஹிர் உசேன் சூலூர் நோக்கிச் சென்றுள்ளார்.

அப்போது பாப்பம்பட்டி பிரிவு அருகே புரோக்கர் கல்யாணி சத்தம் போட அங்கிருந்த காவலர்கள் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் சந்தேகத்திற்கிடமான மூவரையும் கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

குழந்தைக் கடத்தல்
குழந்தைக் கடத்தல்

இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு நல சமூகப் பணியாளர் புவனேஸ்வரி மற்றும் சாந்தாமணி ஆகியோர் ஹசீனா, கல்யாணி ஜாஹிர் உசேன் ஆகியோரை விசாரித்தனர். அதில் குழந்தையைச் சட்டத்திற்கு விரோதமாக வாங்கியது தெரியவந்தது.

இதையடுத்து ஜாஹிர் உசேன், ஹசீனா, கல்யாணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், கண்ணன் மற்றும் ஜோதி குழந்தையுடன் தப்பித்துவிட்டனர். இதனிடையே, தலைமறைவாக இருந்த ஜோதி மற்றும் கண்ணன் ஆகியோரை ஈரோடு பேருந்து நிலையத்தில் வைத்து குழந்தையுடன் போலீஸார் பிடித்தனர்.

குழந்தைக் கடத்தல்
குழந்தைக் கடத்தல்

விசாரணையில் இந்தத் தம்பதியருக்கு ஏற்கெனவே பிறந்த குழந்தையையும் இதேபோல விற்பனை செய்த விவரம் தெரியவந்தது.

அதாவது, இந்தத் தம்பதிக்குப் பிறந்த முதல் குழந்தை இறந்துவிட, இரண்டாவது குழந்தையை விற்றுள்ளனர். அதில் பணம் பார்த்தவர்கள், மூன்றாவதாக ஒரு குழந்தையைப் பெற்று விற்க முயற்சி செய்துள்ளனர். இப்படி, குழந்தையை விற்பனை செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதால், குழந்தையின் எதிர்காலத்தைக் கருதி அந்தக் குழந்தையை கோவை குழந்தைகள் நலக்குழு மற்றும் குழந்தை நேய நீதிமன்றம் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டது.

குழந்தைக் கடத்தல்
குழந்தைக் கடத்தல்

இதையடுத்து, குழந்தையைக் காப்பகத்தில் ஒப்படைத்தனர். கண்ணன் மற்றும் ஜோதி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.