Published:Updated:

சொத்துப் பிரச்னையில் அண்ணன் குத்திக் கொலை! - வீட்டில் டி.வி பார்த்துக்கொண்டிருந்த தம்பி கைது

கொலை

சொத்துப் பிரச்னையில் அண்ணனைக் கொலைசெய்த தம்பியை போலீஸார் கைதுசெய்தனர்.

சொத்துப் பிரச்னையில் அண்ணன் குத்திக் கொலை! - வீட்டில் டி.வி பார்த்துக்கொண்டிருந்த தம்பி கைது

சொத்துப் பிரச்னையில் அண்ணனைக் கொலைசெய்த தம்பியை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கொலை

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள ஓ.மேட்டுப்பட்டி வைரவசுவாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 58). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். பொன்ராஜ், அதே தெருவில் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி பழுதுநீக்கும் கடை வைத்து நடத்தி வந்தார். இவரின் உடன்பிறந்த தம்பி மொட்டையா சாமி (55). இருவரும், அதே தெருவில் அடுத்தடுத்த வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர். கூலி வேலை செய்து வரும் மொட்டையாசாமி, குடித்துவிட்டு சொத்துப் பிரச்னை காரணமாக அண்ணன் பொன்ராஜிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பொன்ராஜ்
பொன்ராஜ்

இதைப்போல் நேற்று இரவும் மதுபோதையிலிருந்த மொட்டையாசாமி, அண்ணன் பொன்ராஜூடன் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்த நிலையில், உறவினர்கள் தலையிட்டு சத்தம் போட்டுள்ளனர். இதனால் சண்டையை கைவிட்டு இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று அதிகாலையில், கடையை திறந்து பொன்ராஜ் வழக்கமான தன் வேலைகளை கவனித்துள்ளார். அப்போது கடைக்குள் நுழைந்த மொட்டையாசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பொன்ராஜை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பொன்ராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது.

இதையடுத்து, எந்தப் பதற்றமும் இல்லாமல் அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பிச் சென்ற மொட்டையாசாமி, கைகளில் உறைந்திருந்த ரத்தக்கறையை கழுவி, பின் எதுவும் நடக்காதது போல் வீட்டிற்குள் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இந்த கொலைச் சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் சாத்தூர் தாலுகா காவல் நிலைய போலீஸூக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சரகக் காவல் துணை கண்காணிப்பாளர் வினோஜ் தலைமையிலான போலீஸார், கொலைசெய்யப்பட்ட பொன்ராஜின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்த சாத்தூர் தாலுகா காவல் நிலைய போலீஸார், மொட்டையாசாமியின் வீட்டிற்குச் சென்று அங்கு டி.வி.பார்த்துக்கொண்டிருந்த மொட்டையசாமியைக் கைதுசெய்தனர். சொத்துப் பிரச்னை தொடர்பாக அண்ணன்-தம்பி இடையே தகராறில் உடன்பிறந்த சகோதரன் என்றும் பாராமல் தம்பியே அண்ணனை கத்தியால் குத்திக் கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.