Published:Updated:

`மோடி பெயரில் சேவை உணவகம்; விவசாயிகளுக்குக் கொலை மிரட்டல்!’- பா.ஜ.க பிரமுகர், மனைவி கைது

மோடி மக்கள் உணவகம்
மோடி மக்கள் உணவகம்

விவசாயிகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த பா.ஜ.க பிரமுகரையும், அவரது மனைவியையும் அதிரடியாகக் கைது செய்திருக்கிறது கடலூர் போலீஸ்.

புதுச்சேரி, தவளக்குப்பத்தைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் செல்வகுமார் வயது 37. இவரது மனைவி சுதா. இவர்களும், பைத்தம்பாடியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரும் இணைந்து 2016-ம் ஆண்டு புதுச்சேரியில் பால் குளிரூட்டும் நிலையத்தைத் தொடங்கினார்கள். அதையடுத்து பன்னீர்செல்வம் கூறியதன் அடிப்படையில் தங்கள் நிறுவனத்துக்குப் பால் சப்ளை செய்யும்படி, கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்திருக்கும் காவனூர் பைத்தம்பாடியைச் சேர்ந்த 67 வயதான விவசாயி பாவாடையை அணுகியிருக்கின்றனர். அப்போது கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு 10 நாள்களுக்கு ஒருமுறை பணம் கொடுத்துவிடுவதாகவும் வாக்குறுதி கொடுத்திருக்கின்றனர்.

பா.ஜ.க பிரமுகர் செல்வகுமார்
பா.ஜ.க பிரமுகர் செல்வகுமார்

அதை நம்பிய விவசாயி பாவாடை முகவராகச் செயல்பட்டு, தனது பகுதியைச் சேர்ந்த 30 விவசாயிகளிடம் பாலை கொள்முதல் செய்து செல்வகுமாரின் நிறுவனத்திற்குக் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து மூன்று மாதங்கள் பணத்தைச் சரியாகக் கொடுத்த செல்வகுமார், அதற்குப் பிறகு பணம் கொடுப்பதை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதற்கு பண மதிப்பிழப்பைக் காரணமாகக் கூறியதால் பாவாடையும், மற்ற விவசாயிகளும் அமைதியாக இருந்தனர். பல மாதங்கள் கழித்து மீண்டும் பணம் கேட்டுச் சென்ற பாவாடை உள்ளிட்ட விவசாயிகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததுடன், நிறுவனத்தையும் மூடிவிட்டு தம்பதியர் தலைமறைவாகினர். அதையடுத்து செல்வகுமார், அவரது மனைவி சுதா, அவர்களது நண்பர் பன்னீர்செல்வம் மீது விழுப்புரம் சரக டி.ஐ.ஜி அசோக் குமாரிடம் புகார் அளித்தனர்.

அந்தப் புகார் மீது விசாரணை நடத்தும்படி கடலூர் மாவட்ட எஸ்.பி அபிநவ்வுக்கு உத்தரவிட்டார் டி.ஐ.ஜி. அதையடுத்து கடலூர் குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், விவசாயி பாவாடையைப் போன்று 70 விவசாயிகளை செல்வகுமார் – சுதா தம்பதியர் ஏமாற்றி சுமார் 40 லட்ச ரூபாய் வரை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. அதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து ரூ.11 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். மேலும், தற்போது தலைமறைவாகியிருக்கும் பன்னீர்செல்வத்தையும் தேடிவருகின்றனர்.

விவசாயி பெருமாள்
விவசாயி பெருமாள்

பாதிக்கப்பட்ட விவசாயி பாவாடையிடம் பேசினோம். ``கிராமத்துல மாடுகளை வைச்சிப் பிழைக்கறவங்க எல்லாரும் அன்னாடம் காய்ச்சிங்கதான். அதனாலதான் ஆரா பால் கம்பெனில இருந்து வர்றோம்னு அவங்க நம்பிக்கை தர்ற மாதிரி பேசுனதும், நாங்களும் நம்பி பாலை கொடுத்தோம். மூணு மாசம் எல்லாமே சரியா போச்சு. அப்புறம் பணம் குடுக்கறத நிறுத்திட்டாங்க. அதப்பத்தி கேக்கும்போது பண மதிப்பிழப்பு நடவடிக்கையால குடுக்க முடியலனு சொன்னாங்க. நாங்களும் அத நம்பி எப்போதும் போல பாலை குடுத்துக்கிட்டிருந்தோம். அதுக்கப்புறம் எனக்கு வர வேண்டிய ரெண்டு மாச பணம் 24,000 ரூபாயையும், என்னைப்போல மற்றவர்களுக்கு வர வேண்டிய பணத்தைக் கேட்டும் கம்பெனிக்குப் போய் மூணு பேரையும் பாத்தேன்.

அப்போது, `பணம் குடுக்கும்போது குடுப்போம். அதுக்குள்ள எதாச்சும் தொல்லை கொடுத்தீங்கன்னா காரை ஏத்தி கொலை பண்ணிடுவேன்’னு அடியாளுங்களை வச்சி மிரட்டினாரு. அதுக்கப்புறம் புதுப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெயின்ட் குடுத்தோம். அவங்க நடவடிக்கை எடுக்காததால வட்டாட்சியர்கிட்ட மனு குடுத்தோம். அதுக்கப்புறம் அவர் தலைமையில ரெண்டு தடவை நடந்த சமாதானக் கூட்டத்துல கலந்துகிட்ட செல்வகுமாரு பணத்தைக் குடுத்துடறதா சொல்லிட்டுப் போனாரு. ஆனால் அதுக்கப்புறம் கம்பெனியை மூடிட்டு தலைமறைவாயிட்டாரு.

மோடி உணவகம் திறப்பு விழாவில் செல்வகுமாருடன் பா.ஜ.கவின் முன்னணி நிர்வாகிகள்
மோடி உணவகம் திறப்பு விழாவில் செல்வகுமாருடன் பா.ஜ.கவின் முன்னணி நிர்வாகிகள்

அப்புறம் அங்க செல்வகுமார் உடனே எங்களுக்கு ரூ.20 லட்சம் குடுக்கணும்னு உத்தரவு போட்டுச்சு. அப்படியும் ஒண்ணும் நடக்கல. வீட்டுல இருக்கற பொருளுங்களை எல்லாம் ஒவ்வொண்ணா வித்து என்னை நம்பி பால் குடுத்தவங்களுக்குக் கொஞ்ச கொஞ்சமா குடுத்துட்டு வர்றேன்” என்கிறார் பரிதாபமாக. கைது செய்யப்பட்டிருக்கும் செல்வகுமார் கடந்த வாரம் புதுச்சேரி விநோபா நகரில் `மோடி மக்கள் உணவகம்’ என்ற பெயரில் மலிவு விலை உணவகம் ஒன்றைத் திறந்தார்.

அந்தத் திறப்பு விழாவுக்காக செல்வகுமார் மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் புதுச்சேரி முழுவதும் வீதிவீதியாக ஒட்டப்பட்டன. அந்தத் திறப்பு விழாவில் புதுச்சேரி பா.ஜ.க மாநிலத் தலைவர் சாமிநாதன் உட்பட அனைத்து முன்னணி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். விழாவுக்குச் சென்ற செய்தியாளர்களிடம் தட்டாஞ்சாவடி தொகுதியின் பொறுப்பாளர் என்றே செல்வகுமார் அறிமுகப்படுத்தபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்வகுமார், ``ஏழை மக்களின் பசியைப் போக்குவதற்காக லாப நோக்கமின்றி இந்த மோடி மக்கள் உணவகம் திறக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.

`விரைவில் குறி வைக்கப்படுவீர்கள்!’- ஸ்டேண்ட்அப் காமெடியனுக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ.க பிரமுகர்

இதுகுறித்துப் பேச புதுச்சேரி பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் சாமிநாதனைத் தொடர்புகொண்டபோது, ``அவர் கட்சியில் சேர்ந்தே ஒரு மாதம்தான் ஆகிறது. அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்தானே தவிர, எந்தப் பதவியிலும் இல்லை. மோடி மக்கள் உணவகத்துக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கான இடத்தை மட்டுமே அவர் வழங்கினார்” என்று முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு