Published:Updated:

ரயில்வே ஊழியர் டிக்காராம்: திருவான்மியூர் கொள்ளை வழக்கில் நாடகமாடி மனைவியோடு சிக்கியது எப்படி?

ரயில்வே ஊழியர்
News
ரயில்வே ஊழியர்

ஆன்லைன் கேமில் பணத்தை இழந்ததால், ரயில்வே பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்ட ரயில்வே ஊழியர், மனைவியோடு சிக்கிக்கொண்டார்

சென்னை, திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்ட்டரில் பணியாற்றும் ஊழியர் டிக்காராம் என்பவரைக் கை, கால்களைக் கட்டிப்போட்டு ரூ.1.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக திருவான்மியூர் ரயில்வே போலீஸார், நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரயில்வே எஸ்.பி அதிவீரபாண்டியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் வைரவன், ஷாலினி ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ரயில்வே ஊழியர் டிக்காராமிடம் கொள்ளை எப்படி நடந்தது என போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் மூன்று பேர் உள்ளே வந்ததாகவும், அவர்களில் இரண்டு பேர், துப்பாக்கிகளை வைத்திருந்தாகவும் கூறினார். பின்னர் தன்னுடைய கை கால்களைக் கட்டிப்போட்டுவிட்டு, பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுச் சென்றதாகவும் தெரிவித்தார்.

டிக்காராம்
டிக்காராம்

கொள்ளை நடந்த ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. மேலும் சம்பவம் அதிகாலை நேரத்தில் நடந்ததால் பயணிகளின் நடமாட்டமும் இல்லை. அதனால் ரயில் நிலையத்தின் அருகிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது டிக்காராமின் மனைவி சரஸ்வதி அதிகாலை நேரத்தில் ரயில் நிலையத்துக்கு வரும் காட்சி பதிவாகியிருந்தது. அதை கவனித்த போலீஸார், டிக்காராமிடம் விசாரணை நடத்தினர். முதலில் தன்னுடைய மனைவி ரயில் நிலையத்துக்கே வரவில்லை என்று டிக்காராம் கூறினார். அப்போது அவரிடம் சிசிடிவி கேமரா பதிவை போலீஸார் காண்பித்ததும் அவர் பதற்றமடைந்து உளறத் தொடங்கினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதையடுத்து போலீஸார், தங்கள் பாணியில் விசாரணையைத் தொடங்கினர். அதேநேரத்தில் இன்னொரு டீம், டிக்காராமின் மனைவி சரஸ்வதியிடம் விசாரித்தது. அப்போது அவர் ரயில் நிலையத்துக்கு வந்த தகவலைத் தெரிவித்தார். அதன் பிறகுதான் இந்தக் கொள்ளை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டது. பணத் தேவைக்காக டிக்காராமும், அவரின் மனைவியும் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அவர்கள் இருவரும் நாடகமாடியதைக் கண்டுபிடித்த போலீஸார் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதேசமயத்தில் டிக்காராமின் வீட்டுக்குச் சென்று கொள்ளையடித்த பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சரஸ்வதி
சரஸ்வதி

இந்தக் கொள்ளை வழக்கு துப்பு துலங்கியது எப்படி என ரயில்வே போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``டிக்கெட் கவுன்ட்டர்களில் லட்சக்கணக்கில் பணம் இருக்கும் என்பதால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள், பாதுகாப்பு கருதி அறையை உள்பக்கமாகப் பூட்டுவது வழக்கம். திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டரில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில், கதவு உடைக்கப்படவில்லை. அதுதான் முதலில் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனால் எங்களின் சந்தேகப் பார்வை ஊழியர் டிக்காராம்மீது விழுந்தது. இருப்பினும் அதை வெளிகாட்டிக்கொள்ளவில்லை. மேலும் மூன்று பேர் வந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக டிக்காராம் தெரிவித்தார். ஆனால், ரயில் நிலையம் அருகேயுள்ள சிசிடிவி கேமராக்களில் அப்படி யாரும் வந்து சென்றதற்கான காட்சிகள் இல்லை. இந்தச் சமயத்தில்தான் டிக்காராமின் மனைவி சரஸ்வதி, ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அது தொடர்பாக விசாரித்தபோதுதான் டிக்காராம் சிக்கிக்கொண்டார்.

கொள்ளை நடந்த ரயில் நிலையம்
கொள்ளை நடந்த ரயில் நிலையம்

ஆன்லைன் கேமில் பணத்தை டிக்காராம் இழந்திருக்கிறார். பணத் தேவைக்காக டிக்கெட் விற்ற பணத்தை கொள்ளையடிக்கலாம் என டிக்காராம் முடிவுசெய்திருக்கிறார். சம்பவத்தன்று வேறு ஊழியர்கள் யாரும் டிக்கெட் கவுன்ட்டரில் இல்லை. அதனால் மனைவி சரஸ்வதிக்கு டிக்காராம் தகவலைத் தெரிவித்துள்ளார். அதன்படி அங்கு வந்த சரஸ்வதியிடம் வசூலான பணத்தைக் கொடுத்த டிக்காராம், பின்னர் கொள்ளைச் சம்பவம் நடந்ததைப்போல நாடகமாடி, தன்னைக் கயிற்றால் கட்டிப் போடும்படி மனைவியிடம் கூறியிருக்கிறார். அதைப்போல சரஸ்வதியும் கணவரைக் கட்டிப்போட்டுவிட்டு பணத்துடன் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இதையடுத்து டிக்காராம், அவரின் மனைவி சரஸ்வதி ஆகியோரைக் கைதுசெய்து பணத்தைப் பறிமுதல் செய்திருக்கிறோம். கைதுசெய்யப்பட்டவர்கள் ஊரப்பாக்கத்தில் குடியிருந்துவருகின்றனர். கொள்ளை நடந்த திருவான்மியூர் ரயில் நிலையத்தில் விரைவில் சிசிடிவி கேமரா பொருத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார்.