தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவர், தன் மனைவி விஜயலெட்சுமி, இரண்டு பெண் குழந்தைகளுடன் கோவில்பட்டியில் வசித்துவந்துள்ளார். ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவந்த இவர், அகில பாரத இந்து மகாசபா என்ற அமைப்பின் தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 3-ம் தேதி, தனக்கு வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு, கயத்தாரில் நடந்த கோயில் திருவிழாவுக்கு மனைவி, குழந்தைகளை பேருந்தில் அனுப்பிவைத்துள்ளார்.

இதையடுத்து துரைப்பாண்டி, தன் நண்பர்கள் பழனி, மணிகண்டன், கார்த்திக், கருப்பசாமி என்ற சின்னத்துரை ஆகியோருடன் ஆட்டோவில் கயத்தார் அருகேயுள்ள தளவாய்புரத்துக்குச் சென்றிருக்கிறார். அங்குள்ள டாஸ்மாக்கில் மது வாங்கிவிட்டு, அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்று அனைவரும் மது அருந்தியுள்ளனர். இந்த நிலையில் திடீரென பைக்கில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல், அங்கு வந்து மது அருந்திக்கொண்டிருந்த ஐந்து பேரையும் தாக்கியுள்ளனர். இதில், மற்றவர்கள் தப்பித்துவிட துரைப்பாண்டி மட்டும் மாட்டிக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதப்பித்து ஓடியவர்கள் கயத்தார் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுக்க, போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, துரைப்பாண்டி உடலின் சில பகுதிகளில் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்திருக்கிறார். இதையடுத்து போலீஸார், துரைப்பாண்டியை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.

மேலும் இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து நடத்திய விசாரணையில், ரேஷன் அரிசிக் கடத்தல் முன் விரோதத்தில் இந்தக் கொலைச் சம்பவம் நடந்திருப்பதாகத் தெரியவந்தது. இந்தக் கொலை தொடர்பாக காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த மகாராஜன், ராஜாராம், மனோரஞ்சிக்குமார், சவலாபேரியைச் சேர்ந்த ஜானகிராம், கோவில்பட்டியைச் சேர்ந்த சின்னத்துரை ஆகிய ஐந்து பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். மேலும் இரண்டு பேரைத் தேடிவருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது குறித்து போலீஸாரிடம் பேசினோம். ``தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தார், விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட சில பகுதிகளில் ரேஷன் அரிசியை வீடு வீடாகச் சென்று, ஒரு கிலோ ரூ.2 முதல் ரூ.4 வரை விலைக்கு வாங்கி அதை கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்குக் கடத்தி அதிக விலைக்கு விற்பனை செய்யும் தொழில் நடந்துவருகிறது. பணத்துக்காக பல கும்பலகள் இதைத் தொழிலாகக் கொண்டு செயல்பட்டுவருகின்றன.

அதிலும் குறிப்பாக கோவில்பட்டி மற்றும் கயத்தார் பகுதியில் 13 கும்பல்கள் இவர்களிடமிருந்து 30-க்கும் மேற்பட்டோர் அரிசி வாங்கிச் சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தக் கும்பல்களில் இருப்பவர்களில் பலர் மீது கொலை, கொலை முயற்சி என பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த அரிசியை இட்லி மாவாக அரைத்தும், பட்டை தீட்டி பல்வேறு பிராண்டுகளின் பெயர்களில் உயர்ரக அரிசிபோலவும் வெளிச்சந்தையில் விற்கிறார்கள். இது தவிர, கோழிப் பண்ணைகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட துரைப்பாண்டி மற்றும் அவர் நண்பர்கள் சிலர் ரேஷன் அரிசிக் கடத்தல் தொழில் செய்துவந்துள்ளனர். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள மகாராஜன் மற்றும் அவர் நண்பர்களும் கயத்தார் பகுதியில் ரேஷன் அரிசிக் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் தொழில் போட்டியில் ஒருவரை ஒருவர் அரசு அதிகாரிகளிடம் போட்டுக்கொடுத்து மாட்டிவிட்டு வந்துள்ளனர். சில நாள்களுக்கு முன்பு ஏழாயிரம்பண்ணை சாலையில் ஒரு குடோனில் ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருந்தது குறித்து மகாராஜன் மற்றும் அவர் நண்பர்கள், அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லி மாட்டிவிட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த துரைப்பாண்டி மற்றும் அவர் நண்பர்கள் கயத்தார் பகுதியில் மகாராஜன் ரேஷன் அரிசிக் கடத்தலில் ஈடுபட்டுவருவதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். ஆத்திரமடைந்த மகாராஜன் மற்றும் அவர் நண்பர்கள், துரைப்பாண்டி தளவாய்புரம் பகுதியில் மது அருந்திக்கொண்டிருந்த தகவல் கிடைத்து, அங்கு சென்று தாக்கியுள்ளனர். துரைப்பாண்டியுடன் வந்தவர்கள் தப்பிவிட துரைப்பாண்டியை ஆட்டோவில் கட்டிவைத்து பலமாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். அதனால், துரைப்பாண்டி உயிரிழந்துவிட்டார்” என்றனர்.