Published:Updated:

` பெண் கொடுத்த நகை பறிப்புப் புகார்; 6 கொலைகள்..!' -போலீஸுக்கு அதிர்ச்சிகொடுத்த வடசென்னை ரவுடிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கொலை வழக்கில்  சூழ்ச்சி சுரேஷ்
கொலை வழக்கில் சூழ்ச்சி சுரேஷ்

வடசென்னையில், சூழ்ச்சி சுரேஷ் மற்றும் கதிர் என இரண்டு ரவுடிக் கும்பல்களுக்கு இடையே பழிக்குப் பழியாகக் கொலைகள் நடந்துவருகின்றன.

சென்னை எம்.கே.பி நகர் 17- வது மேற்குத் தெருவைச் சேர்ந்த 47 வயது பெண்ணின் வீட்டுக்குள், கடந்த 18-ம் தேதி ஒரு கும்பல் புகுந்தது. அந்தக் கும்பல், அந்தப் பெண் மற்றும் அவரின் மகளிடமிருந்து 3 1/2 சவரன் நகை, 4 மோதிரங்கள், 8 ஆயிரம் ரூபாயைப் பறித்தது. இதுதொடர்பாக எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகாரளித்தார். அதன்பேரில், துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா மேற்பார்வையில் உதவி கமிஷனர் கோ.அரிக்குமார், பாதிக்கப்பட்ட பெண்களிடம் நேரில் சென்று விசாரித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை
பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை

மேலும், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது, நகைகளை இழந்த பெண்கள் தங்கியிருக்கும் வீட்டில், பிரபல ரவுடியின் ஆதரவில் பாலியல் தொழில் நடந்துவருவது தெரியவந்தது. அதை மறைக்க முயன்ற பெண்கள், போலீஸாரிடம் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக் கூறினர். அதனால் சந்தேகமடைந்த போலீஸார், சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணையைத் தொடங்கினர். சம்பவத்தன்று, சிசிடிவியில் 4 பேர் வேகமாக ஓடும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதில் ஒருவர் பிரபல ரவுடி `சூழ்ச்சி' சுரேஷ். அதனால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் போலீஸார் மீண்டும் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``வடசென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி சேராவின் மகன், கதிர் (எ) கதிரவன். இவரின் கூட்டாளி தொப்பை கணேசன். இவர், எம்.கே.பி.நகர் பகுதியில் பாலியல் தொழில் நடக்கும் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். சம்பவத்தன்று, `சூழ்ச்சி' சுரேஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள், தொப்பை கணேஷை கொலை செய்யத் திட்டமிட்டு பாலியல் தொழில் நடக்கும் வீட்டுக்கு வந்துள்ளனர். வீட்டிலிருந்த பெண்களிடம் தொப்பை கணேஷ் குறித்து அந்தக் கும்பல் விசாரித்துள்ளது. பின்னர், நகை, பணத்தை பறித்துச் சென்றுள்ளது. அப்போது அந்தப் பெண்களிடம், தொப்பை கணேஷ் இங்கு வந்தால் இந்த செல் நம்பருக்கு தொடர்புகொள்ளணும் என்றும் மிரட்டிவிட்டுச் சென்றுள்ளது.

பாட்ஷா
பாட்ஷா

இதையடுத்து, அந்த செல் நம்பர் குறித்து போலீஸார் விசாரித்தனர். செல்போனின் சிக்னல் அம்பத்தூர் ஓரகடம், அண்ணா சாலையைக் காட்டியது. அங்கு செல்வதற்குள் சையத் யாமின் பாட்ஷா, எம்.கே.பி. நகருக்கு தப்பிச் சென்றார். இதையடுத்து, சையத் யாமின் பாட்ஷாவைப் பிடித்த போலீஸார் அவரிடம் விசாரித்தனர். விசாரணையில், வியாசர்பாடியில் சையத் யாமின் பாட்ஷா 10-ம் வகுப்பு படித்தபோது சூழ்ச்சி சுரேஷ், அருண்பாண்டியன் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. சூழ்ச்சி சுரேஷ் கும்பலுக்கும் ரவுடி சேராவின் மகன் கதிரவன், அவரின் கூட்டாளியான தொப்பை கணேசன், வடை செல்வம் கும்பலுக்கும் முன்விரோதம் இருப்பதும் தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த இரண்டு கும்பலுக்குக் இடையே, இதுவரை 6 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. சூழ்ச்சி சுரேஷின் சித்தப்பா இடிமுரசு இளங்கோ 2013-ம் ஆண்டும், வடை செல்வத்தின் தம்பி திவாகரை 2014-ம் ஆண்டும், சூழ்ச்சி சுரேஷின் அண்ணன் பழனியை 2016-ம் ஆண்டும் கதிரவன் கும்பல் கொலை செய்துள்ளது. சூழ்ச்சி சுரேஷ் தரப்பில் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதால் பழிக்குப் பழிவாங்க கதிரவனின் கூட்டாளிகளான சாலமோன், ஜப்பான் சரவணன், முத்துபாட்ஷா ஆகியோர் சூழ்ச்சி சுரேஷ் கும்பலால் கொலை செய்யப்பட்டனர்.

உதவி கமிஷனர் அரிக்குமாரின் டீம்
உதவி கமிஷனர் அரிக்குமாரின் டீம்
`எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது' -திருமணமான 11 மாதத்தில் விபரீத முடிவெடுத்த மனைவி

இந்தச் சமயத்தில் சூழ்ச்சி சுரேஷ் கும்பல், தொப்பை கணேசனைக் கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டுள்ளது. அவரைத் தேடித்தான் பாலியல் தொழில் நடக்கும் வீட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து சூழ்ச்சி சுரேஷ், அவரின் கூட்டாளியான சையத் யாமின் பாட்ஷா ஆகியோரைக் கைதுசெய்துள்ளோம். இந்த வழக்கில், சூழ்ச்சி சுரேஷின் கூட்டாளிகள் 2 பேரை தேடிவருகிறோம். ஏற்கெனவே தொப்பை கணேசனை சூழ்ச்சி சுரேஷ் கும்பல் 2018-ல் வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி செய்துள்ளது. ஆனால், அதிலிருந்து தொப்பை கணேஷ் தப்பிவிட்டார். 2-வது முறையாக இந்தத் தடவையும் தொப்பை கணேசன் கொலைத் திட்டத்தை உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையிலான ஸ்பெஷல் டீமைச் சேர்ந்த எஸ்.ஐ. பிரேம்குமார் மற்றும் காவலர்கள் சுகன், கதிர் அந்தோணி ஆகியோர் முறியடித்துள்ளனர்" என்றார்.

இந்த விவகாரம் குறித்து, ஒருங்கிணைந்த குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸார் கூறுகையில், ``அயோத்தி குப்பம் வீரமணி, 'பங்க்' குமார், 'வெள்ளை' ரவி, சேரா, ஆசைத்தம்பி, கபிலன், காட்டான் சுப்ரமணியன், 'கேட்' ராஜேந்திரன் உள்ளிட்ட ரவுடிகள், மாமூல், கொலை, கொள்ளை, ஆள்கடத்தலில் கொடிகட்டிப் பறந்தனர். இதில் வீரமணி, வெள்ளை ரவி, 'பங்க்' குமார். கபிலன் ஆகிய ரவுடிகள் , என்கவுன்டர் மூலம் போலீஸாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகினர். ரவுடிகளுக்குள் நடக்கும் மோதலால் தொடர்ந்து கொலைச் சம்பவங்களும் நடந்தன. தற்போது ஆக்டிவ்வாக செயல்பட்டுவரும் ரவுடிகள், சிறையிலும் ஜாமீனில் வெளியேயும் இருந்துவருகின்றனர்.

உதவி கமிஷனர் கோ.அரிக்குமார் மற்றும் ஸ்பெஷல் டீம்
உதவி கமிஷனர் கோ.அரிக்குமார் மற்றும் ஸ்பெஷல் டீம்

கொரோனா ஊரடங்கையொட்டி, வடசென்னையில் மீண்டும் ரவுடிகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளனர். அதைத் தடுக்கும் வகையில் உதவி கமிஷனர் கோ.அரிக்குமார் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். இவர் பொறுப்பேற்ற ஒரு மாதத்துக்குள் 3 கொலைச் சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளன. left மதன், ராசய்யா, தொப்பை கணேசன் ஆகியோரைக் கொலை செய்ய அவர்களின் எதிர்தரப்பினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால், ரகசியத் தகவலால் அந்தத் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

நகை பறிப்பு என வந்த புகாரை விசாரித்தபோதுதான் கொலை செய்ய போடப்பட்ட ஸ்கெட்ச் வெளியில் தெரிந்தது. கடந்த மாதம் வடசென்னையில், தொடர்ந்து 7 இடங்களில் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுவந்த `left' மதனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகே அவரைக் கொலை செய்ய ஒரு கும்பல் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது" என்றனர்.

சூழ்ச்சி சுரேஷ்
சூழ்ச்சி சுரேஷ்

சூழ்ச்சி சுரேஷ், வடை செல்வா, தொப்பை கணேசன் என ரவுடிகளுக்கு பெயர் வந்தது எப்படி என்று போலீஸாரிடம் கேட்டதற்கு, சூழ்ச்சி செய்வதில் கில்லாடியான சுரேஷுக்கு அதுவே அடைமொழியாகியுள்ளது. வடையை விரும்பி சாப்பிடுவதால் வடை செல்வம் என அவரின் நண்பர்கள் அழைத்துள்ளனர்.

தொப்பை காரணமாக, கணேசன் தொப்பை கணேசன் என அழைக்கப்பட்டுள்ளார். சூழ்ச்சி சுரேஷ், தொப்பை கணேஷ் ஆகியோர் மீது கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு