Published:Updated:

`ஒரு ரிமாண்ட்டைக்கூட ஒழுங்கா செய்ய முடியல..!' -கால்முறிவிலும் காவலர்களை வசைபாடிய `கஞ்சா' மணி

கஞ்சா மணி
கஞ்சா மணி

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தின் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களைக் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற கஞ்சா மணி உள்ளிட்டவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்திருக்கின்றனர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-15 என்.எல்.சி குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வேந்திரன். மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்) வீரரான இவர், என்.எல்.சி இரண்டாம் நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி வருகிறார். சில தினங்களுக்குமுன் வழக்கம்போல இவர் பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.

அப்போது மந்தாரக்குப்பபம் ஓம்சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த மணி (எ) கஞ்சா மணி தன் நண்பர்களுடன் என்.எல்.சி சுரங்கப் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த செப்புக் கம்பிகளைத் திருடிக்கொண்டு செல்ல முயன்றிருக்கிறார். அப்போது அங்கு ரோந்துப் பணியில் இருந்த செல்வேந்திரன் மணியைப் பிடிக்க முயற்சி செய்திருக்கிறார். இதனால் ஆவேசமடைந்த மணி, கையில் வைத்திருந்த கத்தியால் அவரைக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

சி.எஸ்.ஐ.எப் வீரரை கத்தி முனையில் மிரட்டும் கஞ்சா மணி
சி.எஸ்.ஐ.எப் வீரரை கத்தி முனையில் மிரட்டும் கஞ்சா மணி

உடனே சக பாதுகாப்புப் படை வீரர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த செல்வேந்திரனை மீட்டு என்.எல்.சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தப்பிச் சென்ற மணியை சக வீரர் ஒருவருடன் விரட்டிப் பிடித்த தாஸ் என்ற சி.ஐ.எஸ்.எஃப் வீரர், மணி மீண்டும் தப்பிவிடாமல் இருக்க அவரது இருசக்கர வாகனத்தின் சாவியைப் பிடுங்கிக்கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா மணியும் அவரின் நண்பர்களும் தாஸை சுற்றி வளைத்துக் கடுமையாகத் தாக்கியதுடன், அவரை முட்டிபோட வைத்து கத்தியைக் காட்டி மிரட்டியிருக்கிறார்கள். இதனால் மிரண்டுபோன பாதுகாப்புப்படை வீரர் தாஸ், `ஸாரி தெரியாமல் செய்துவிட்டேன்’ என்று கெஞ்சுகிறார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஒருபுறமிருக்க, நல்ல உடல்கட்டுடன் வலம்வரும் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் மெலிந்த தேகமுடைய கஞ்சா மணியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரவுடிகள்
ரவுடிகள்

இதையடுத்து, கஞ்சா மணி உள்ளிட்ட கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்ட நிலையில், மந்தாரக்குப்பம் காவல்துறையினர் அவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், என்.எல்.சி பேருந்து நிலையத்துக்கு அருகில் பதுங்கியிருந்த மணி (எ) கஞ்சா மணி, அப்பு (எ) சிவக்குமார், வடக்கு வள்ளூரைச் சேர்ந்த பிரேம், ஊத்தாங்கால் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த அன்பு உள்ளிட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர்.

அப்போது கஞ்சா மணியும் அவரின் நண்பர்களும் கத்தியைக் காட்டி தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், அனைவரும் வளைத்துப் பிடிக்கப்பட்ட நிலையில், கஞ்சா மணியின் காலில் மட்டும் இலேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கத்தி முனையில் சி.ஐ.எஸ்.எப்
கத்தி முனையில் சி.ஐ.எஸ்.எப்

ரிமாண்ட் செய்ய முடியாமல் தவித்த காவல்துறை:

சி.ஐ.எஸ்.எஃப் வீரரை கஞ்சா மணி கத்திமுனையில் மிரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதவிர ஏற்கெனவே பலமுறை அவரது சர்ச்சைக்குரிய வீடியோக்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனாலும் கஞ்சா மணி உள்ளிட்ட நால்வரையும் ரிமாண்ட் செய்வதற்கு உத்தரவு கிடைக்காமல் தவித்துள்ளனர் போலீஸார். 4 பேரில் ஒருவர் சிறார் என்பதால் அவரை விடுவித்த நீதிமன்றம், மற்ற 3 பேருக்கும் ரிமாண்ட் உத்தரவை வழங்கியது.

அதன்பிறகு அவர்களைச் சிறையிலடைக்க முயன்றபோது, மருத்துவச் சான்றிதழ் இருந்தால்தான் எடுத்துக்கொள்வோம் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், அந்தச் சான்றிதழைக் கொடுப்பதற்கு மருத்துவமனை நிர்வாகம் இழுத்தடித்ததால் நொந்து போய்விட்டனர் போலீஸார்.

அப்போது, `ஒரு ரிமாண்ட் கூட உங்களால ஒழுங்கா செய்ய முடியல. அப்புறம் என்னை எதுக்கு கைது செய்யறீங்க. எல்லா முக்கிய அதிகாரிகளையும் எனக்குத் தெரியும். என்னை ஒன்னும் பண்ண முடியாது' என்று அங்கிருந்த காவல்துறையினரையும் வசைபாடியிருக்கிறார் கஞ்சா மணி.

கடலூர் மத்தியச் சிறை
கடலூர் மத்தியச் சிறை

``கஞ்சா மணி மீது மந்தாரக்குப்பம், தெர்மல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தின் பரிந்துரையை ஏற்று கடந்த 2019-ம் ஆண்டு கஞ்சா மணியை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார் கடலூர் மாவட்டர் ஆட்சியர்.

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், போதைப் பொருள் குற்றவாளிகள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குண்டர்கள், குடிசைப் பகுதி நிலங்களை அபகரிப்பவர்கள், மணல் திருட்டு குற்றவாளிகள், திருட்டு வீடியோ குற்றவாளிகளின் அபாயகரச் செயல்களுக்கான தடுப்புச் சட்டம்தான் குண்டர் சட்டம் என்று அழைக்கப்படுகிறது.

ஜாமீன் வழங்க முடியாத சட்டமாகப் பார்க்கப்படும் இந்தச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுபவர்களை 12 மாதங்கள் சிறையில் அடைக்க முடியும். இடையில் அவர்கள் ஜாமீனில் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்றாலும் அது அவ்வளவு எளிதானது அல்ல.

கஞ்சா மணியிடம் காவல்துறையினர் விசாரணை
கஞ்சா மணியிடம் காவல்துறையினர் விசாரணை

ஆனால் 12.7.2019 அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கஞ்சா மணி, மூன்றே மாதத்தில் 26.9.2019 அன்று ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இதிலிருந்தே அவர் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்" என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு