Published:Updated:

`தொழில் பிரச்னை; தொழிலதிபர் மனைவி சிறைவைப்பு!’ - சிக்கலில் சேலம் சமூக ஆர்வலர்

பூமொழி
பூமொழி

ஆள்கடத்தல், கொலை மிரட்டல், சித்ரவதை செய்தல், தனி அறையில் அடைத்தல், பெண்கள் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின்கீழ் பூமொழி மீது வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியைத் தொடங்கி ஊழல், கந்துவட்டி, கட்டப் பஞ்சாயத்து ஆகியவற்றுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தவர் சேலம் பூமொழி. மேலும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் குரல் கொடுத்து வந்தார். இவர் தனது வீட்டில் தொழிலதிபரின் மனைவியை அடைத்து வைத்திருந்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சேலம் கிச்சிப்பாளையம் நாராயண நகரில் பூமொழி வசித்து வந்தார். திருச்சி ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்த பத்ரி சீனிவாசன், இவரது மனைவி ஹரிணி ஆகியோர் பூமொழியுடன் இணைந்து ஈரோட்டில் காடா துணி விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இதில், ஹரிணி 18 லட்ச ரூபாயை, பூமொழிக்குக் கொடுக்க வேண்டி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஹரிணி பணத்தைக் கொடுக்க காலதாமதம் செய்துவந்ததாகவும் அதனால் தனது ஆட்களோடு ஶ்ரீரங்கம் வருவதாகவும் அவரிடம் பூமொழி கூறியதாகச் சொல்கிறார்கள்.

representational image
representational image

அதையடுத்து ஹரிணியின் கணவர் பத்ரி சீனிவாசன் சேலத்துக்கு வந்து பூமொழியைச் சந்தித்துள்ளார். ஆனால், பூமொழியைச் சந்திப்பதற்காக வந்த பத்ரி சீனிவாசன் வீடு திரும்பவில்லை என்றும் அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப் என வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது மனைவி ஹரிணி பூமொழியைச் சந்திப்பதற்காக சேலம் வந்திருக்கிறார்.

சேலம் வந்த ஹரிணியை, சீலநாயக்கன்பட்டி பைபாஸிலிருந்து 13-ம் தேதி மதியம் 1:30 மணிக்கு பூமொழி, தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. வீட்டுக்கு வந்த ஹரிணியிடம் பூமொழி பணம் கேட்டபோது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில், ஆத்திரமடைந்த பூமொழி தன் வீட்டில் உள்ள அறையில் ஹரிணியை அடைத்துப் பூட்டியதாகத் தெரிகிறது. ஹரிணி பணத்துக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்ததையடுத்து, அவரை மொபைலில் பேச பூமொழி அனுமதித்துள்ளார். அதையடுத்து. ஹரிணி தன் தாயார் கீதாவுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்.

அவர், வக்கீல் மூலம் சேலம் மாநகர காவல்துறை கமிஷனர் செந்தில்குமாரைச் சந்தித்து புகார் அளித்தார். பின்னர் டவுன் மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி பூமொழி வீட்டிற்குச் சென்று பார்த்த போது வீட்டில் ஹரிணி அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன்பிறகு கிச்சிபாளையம் போலீஸார் ஹரிணியை மீட்டனர். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆள்கடத்தல், தகாத வார்த்தையில் பேசுதல், கொலை மிரட்டல், சித்ரவதை செய்தல், தனி அறையில் அடைத்தல், பெண்கள் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின்கீழ் பூமொழி மீது வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

அடுத்த கட்டுரைக்கு