Published:Updated:

ஹெல்மெட்டோடு ரயிலில் பயணம்; மூன்றாண்டுகளில் 45 பைக்குகள் திருட்டு! - `பலே’ கணபதி சிக்கியது எப்படி?

`பலே’ கணபதி சிக்கியது எப்படி?

அரக்கோணத்திலிருந்து மின்சார ரயிலில் வரும் கணபதி என்பவர், மூன்றாண்டுகளாக பைக்குகளைத் திருடி விற்றுவந்திருக்கிறார்.

ஹெல்மெட்டோடு ரயிலில் பயணம்; மூன்றாண்டுகளில் 45 பைக்குகள் திருட்டு! - `பலே’ கணபதி சிக்கியது எப்படி?

அரக்கோணத்திலிருந்து மின்சார ரயிலில் வரும் கணபதி என்பவர், மூன்றாண்டுகளாக பைக்குகளைத் திருடி விற்றுவந்திருக்கிறார்.

Published:Updated:
`பலே’ கணபதி சிக்கியது எப்படி?

சென்னை திருமுல்லைவாயல், செந்தில்நகரைச் சேர்ந்தவர் ரவி. திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் கடந்த 14.12.2022-ம் தேதி கொடுத்த புகாரில், ``என்னுடைய சொந்த ஊர் தெலங்கானா, கரீம் நகர். நான், பி.டெக் வரை படித்திருக்கிறேன். பெரம்பூரிலுள்ள ரயில்வே வொர்க்ஷாப்பில் கடந்த 9 ஆண்டுகளாக பணியாற்றிவருகிறேன். தினமும் காலை 7 மணியளவில் என்னுடைய பைக்கை திமுல்லைவாயல் ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு மின்சார ரயிலில் வேலைக்குச் செல்வது வழக்கம். கடந்த 14-ம் தேதியும் பைக்கை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றேன். பின்னர் என்னுடைய மகளின் பள்ளியில் நடந்த மீட்டிங்கில் கலந்துகொள்ள மதியம் 12 மணிக்கு வந்தேன். அப்போது என்னுடைய பைக்கைக் காணவில்லை. எனவே என்னுடைய பைக்கைக் கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

ரயில்வே ஊழியர் ரவி புகார் கொடுப்பதற்கு முன்பே சென்னை திருமுல்லைவாயல் செந்தில் நகர், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ் என்பவர், கடந்த 26.11.2022-ம் தேதி திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் தன் பைக்கைக் காணவில்லை என்று புகாரளித்திருந்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருமுல்லைவாயல், அண்ணனூர், ஆவடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் பைக்குகள் திருட்டுப்போயிருப்பதாகவும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதனால், பைக் திருட்டுப் புகார்களை விசாரிக்க உதவி கமிஷனர் புருஷோத்தம்மன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் திருட்டுச் சம்பவங்கள் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். அப்போது ஹெல்மெட் அணிந்தபடி இளைஞர் ஒருவர் பைக்குகளைத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன,.

அதனடிப்படையில் போலீஸார் பைக் திருடனைத் தேடிவந்தனர். இந்தச் சூழலில் கடந்த 15-ம் தேதி அயப்பாக்கம், திருவேற்காடு மெயின் ரோட்டில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருட்டு பைக்கில் இளைஞர் ஒருவர் வந்தார். அவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். அதனால் போலீஸார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர், கணபதி என்றும், ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி, கரிவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

இது குறித்து போலீஸார் பேசுகையில், ``பைக் திருட்டு புகாரில் கைதான கணபதி, தினமும் வேலைக்குச் செல்வதைப்போல அரக்கோணத்திலிருந்து மின்சார ரயிலில் சென்னைக்கு வந்திருக்கிறார். வரும் வழியில் ஏதாவது ஒரு ரயில் நிலையத்தில் கீழே இறங்கும் கணபதி, அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் பைக்கை நோட்டமிடுவார். நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் பைக்கை டூப்ளிகேட் சாவி மூலம் திறந்து, திருடிக்கொண்டு சென்றுவிடுவார். இதற்காக வீட்டிலிருந்து வரும்போதே தயாராக ஹெல்மெட்டையும் கணபதி கையோடு எடுத்துவந்துவிடுவார். அவரிடம் விசாரித்தபோது கடந்த மூன்று ஆண்டுகளாக பைக்குகளைத் திருடிவருவதாகக் கூறினார். திருடப்படும் பைக்குகளை, குறைந்த விலைக்குத் தெரிந்தவர்களிடம் விற்று, அந்தப் பணத்தைக்கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார். இவரிடமிருந்து 45 பைக்குகளைப் பறிமுதல் செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``பைக் திருட்டு புகார்கள் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்திவந்தோம். 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி-க்களை ஆய்வு செய்தபோது ஒரே நபர்தான் பைக் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டார் என்பது தெரியவந்தது. அதனடிப்படையில் விசாரித்தபோதுதான் கணபதி சிக்கிக்கொண்டார்" என்றார்.

திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. பைக்கைக் காணவில்லை என்று புகார் கொடுத்தவர்கள், தங்களின் பைக் அங்கு இருக்கிறதா என்று ஆவலோடு பார்த்தனர்.