கடந்த சில வாரங்களாக கோவை பதற்றத்துடன் காணப்படுகிறது. சி.ஏ.ஏ-வை மையமாக வைத்து இஸ்லாமியர்களும் இந்துக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் அது மோதலாக வெடித்தது. இந்து முன்னணியில் ஆனந்த் மற்றும் சூரியபிரகாஷ் தாக்கப்பட்டனர். அதேபோல, எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த இக்பால் என்பவரும் தாக்கப்பட்டார். ஏராளமான ஆட்டோக்கள் உடைக்கப்பட்டன. பள்ளிவாசல் மீதும் இந்து முன்னணி அலுவலகம் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, எந்தச் சம்பவங்களும் நடைபெறவில்லை என்பது ஆறுதல்.
அப்படியும் பதற்றம் குறைந்தபாடில்லை. கோவையில் முக்கிய வழிபாட்டுத் தலங்கள், அமைப்புகளின் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், கோவையின் எல்லைப் பகுதிகளில் போலீஸார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை முழுவதும் 14 சோதனைச் சாவடிகளில் ஷிப்ட் அடிப்படையில், 168 போலீஸார் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுதவிர, பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கெனவே சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மேலும் சிலர் கைது செய்யப்பட இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் செக்போஸ்ட் அருகில் ராமநாதபுரம் ஆய்வாளர் முருகேசன் மற்றும் உதவி ஆய்வாளர் ஜெசி உதயராஜ் மற்றும் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, காரில் பயங்கர ஆயுதங்களுடன் ஆறு பேர் கொண்ட கும்பல் போலீஸாரிடம் சிக்கினர். பின்பு அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில் மதுரையைச் சேர்ந்த பழைய குற்றவாளிகள் என்று தெரிந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதில் ஐந்து பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள், ஒருவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். இவர்கள் மீது ஏற்கெனவே வழிப்பறி மற்றும் கொலை வழக்கு இருப்பதால் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இந்த ஆறு பேர் கும்பல் கடந்த ஒன்றரை மாதமாக கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள ஒரு கல் குவாரியில் வேலை செய்வதுபோல் நடித்துக்கொண்டு, இரவு நேரங்களில் அந்த வழியே வாகனத்தில் செல்வர்களை வழிமறித்து கொள்ளையடித்து வந்துள்ளது. மேலும், இவர்கள் கோவை மாநகரைச் சுற்றியுள்ள மிகப்பெரிய நகைக்கடைகளை நோட்டம் பார்த்து நகைகளைக் கொள்ளையடிக்கவும் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். தற்போது சிங்காநல்லூர் பேருந்து நிலையத்துக்குச் செல்லும்போது போலீஸாரிடம் மாட்டிக் கொண்டனர்.

இச்சம்பவம் குறித்து விசாரித்த ராமநாதபுரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளார். இச்சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.