Published:Updated:

`தனிப்படை காவலர் மொபைலுக்கே வந்த எஸ்.எம்.எஸ்’ - மதுரையில் சிக்கிய பாலியல் கும்பல்!

காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தாலும் பெண்களைக் கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

Representational Image
Representational Image

சமீபகாலமாக மதுரையில் வெளி மாநில, வெளி மாவட்ட பெண்கள், சிறுமிகளைக் கடத்தி வந்து ஆன்லைன் புக்கிங் மூலம் பாலியல் தொழிலை சிலர் செய்து வருகிறார்கள்.

Representational Image
Representational Image

இக்கும்பலைப் பிடித்து அவர்களிடம் சிக்கியுள்ள பெண்களை மீட்க மதுரை மாநகர காவல்துறை ஆணையர் விபசார தடுப்புப் பிரிவையும் ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவையும் வேகப்படுத்தியுள்ளார். கடந்த சில நாள்களாக 50-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி பாலியல் தொழில் கும்பல் அலைபேசி மூலம் அழைப்பு விடுத்து ஹைடெக்காகத் தொழிலை செய்து வருகிறார்கள்.

இது எந்தளவுக்கு என்றால், இவர்களின் ஆள்பிடிக்கும் மெசேஜ், தனிப்பிரிவு காவலர் ஒருவருக்குச் சென்றுள்ளது. அதில், பெண்களுடன் இருக்க வேண்டுமா என்று கேட்டு மொபைல் எண்ணைத் தொடர்புகொள்ளவும் என்று எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. அது பற்றி அதிகாரிகளுக்குத் தெரிவித்துவிட்டு தொடர்ந்து அந்த மொபைல் எண்ணுக்கு வாடிக்கையாளர்போல பேசியுள்ளார்.

கோப்புப் படம்
கோப்புப் படம்

அப்போது போனில் பேசியவர், பெண்களுடன் இருக்க ஒரு மணி நேரத்துக்கு 4,000 எனவும் ஓர் இரவுக்கு 12,000 ரூபாய் எனவும் கட்டணத்தை விளக்கியுள்ளார். அதற்குச் சரி என்றவுடன் கூடல்நகர் பாலத்தின் கீழ் பகுதிக்கு வரச்சொல்லியுள்ளார். அங்கு இரு சக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த நபர், கூடல்நகர் அருகேயுள்ள அசோக் நகர் 1-வது தெருவிலுள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு காவலரை அழைத்துச் சென்று பின்னர் அறைக்குள் கர்நாடகாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரையும் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், பாத்ரூமுக்குள் சென்று தனிப்பிரிவுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

arrest
arrest

தனிப்பிரிவு காவல்துறையினர் அந்த வீட்டைச் சுற்றிவளைத்து பாலியல் தொழிலில் இளம்பெண்களை வலுக்கட்டாயமாக ஈடுபடுத்திய அய்யனார், சேகர், மனோஜ்குமார் ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட இளம்பெண்ணையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தாலும் பெண்களைக் கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது.