புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவைச் சேர்ந்தவர் மாதவன் (36). இவர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``என் அப்பா விவசாயம் செய்துவருகிறார். அம்மா ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு இரண்டு தம்பிகள். மூத்த தம்பி சிங்கப்பூரில் இருக்கிறான். இரண்டாவது தம்பி தர்மலிங்கம் (30). அவனுக்குத் திருமணமாகிவிட்டது. அதன் பிறகு அவன் வெளிநாட்டில் ஒரு பெண்ணை திருமணம் செய்ததாகத் தெரியவந்தது. அதன் பிறகு இரண்டு பெண்களைத் திருமணம் செய்து அவர்களுடனும் வாழாமல் பிரிந்துவிட்டான்.

என் மனைவியுடன் என்னுடைய தம்பிக்கு ஏற்பட்ட தவறான நட்பால் என் குடும்ப வாழ்க்கை சீர்குலைந்துவிட்டது. அதனால் நான் என்னுடைய மனைவியைப் பிரிந்து தனியாக பள்ளிக்கரணையில் குடிசை வீட்டில் வசித்துவருகிறேன். தற்போது கழிவுநீர் லாரி டிரைவராக வேலை செய்துவருகிறேன். என்னுடைய தம்பி தர்மலிங்கம் கடந்த 2007-ம் ஆண்டு என்னுடைய பள்ளிச் சான்றிதழை எனக்குத் தெரியாமல் எடுத்து, என் பெயரில் பாஸ்போர்ட், லைசென்ஸ் எடுத்து அதன் மூலம் வெளிநாடு சென்று வந்திருக்கிறான். கடந்த 2012-ம் ஆண்டு வண்ணாரப்பேட்டையில் 16 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவனின் பெயரை தருண் என்றும் மாதவன் என்றும் பொய்யாகக் கூறியிருக்கிறான். அந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறைக்குச் சென்ற என்னுடைய தம்பி, ஜாமீனில் வெளியில் வந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியைப் பார்த்த பிறகுதான் என்னுடைய பெயரை தம்பி தர்மலிங்கம் பயன்படுத்திய விவரம் தெரியவந்தது. உடனே நான் என்னுடைய சொந்த ஊரான அரிமழம் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். அப்போது அவன் சிங்கப்பூரில் இருந்ததால் போலீஸார் வழக்கு போட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை. என் பெயரில் வாரன்ட் உள்ளதால் என்னை விசாரித்தபோதுதான் என் தம்பி என்னுடைய சான்றிதழைப் பயன்படுத்தி பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு சென்ற தகவலையும், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த விவரத்தையும் தெரிவித்தேன்.

எனவே என் பெயரைப் பயன்படுத்தி ஆள் மாறாட்டம் செய்துவரும் என்னுடைய தம்பி தர்மலிங்கம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து தர்மலிங்கத்தைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீஸார் கூறுகையில், ``சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மாதவன் என்பவர் நீண்ட காலமாகத் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. அவர் குறித்து விசாரித்தபோது எந்தத் தகவலும் தெரியவில்லை. இந்தச் சூழலில்தான் மாதவன் இருக்கும் இடம் தெரிந்ததும் அங்கு சென்று விசாரித்தபோதுதான் ஆள் மாறாட்டம் தகவல் தெரியவந்தது. இதையடுத்து மாதவன் அளித்த தகவலின்படியும், செல்போன் சிக்னல் அடிப்படையிலும் தர்மலிங்கத்தைக் கைதுசெய்துள்ளோம். தொடர்ந்து அவனிடம் விசாரித்துவருகிறோம்" என்றனர்.