Published:Updated:

`லிஃப்ட் கொடுப்பதுபோல நடித்து மூதாட்டியிடம் கொள்ளை!' - சுற்றிவளைத்து கைதுசெய்த போலீஸ்

கைதுசெய்யப்பட்ட நபர்
News
கைதுசெய்யப்பட்ட நபர்

சந்திரா தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தபோது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு அந்த நபர் தனது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்று, மாயமாகியிருக்கிறார்.

பொதுமக்கள் என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும்கூட, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடக்கூடியவர்கள், புதிய யுக்திகளைக் கடைப்பிடித்து, தங்கள் தெஃப்ட் ஆபரேஷன்களை வெற்றிகரமாக நிறைவேற்றிவிடுகிறார்கள். திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லலாம்.

நகை கொள்ளை!
நகை கொள்ளை!
சித்திரிப்புப் படம்

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகிலிருக்கும் சித்தேரி சமுத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் மனைவி சந்திரா. 71 வயதான சந்திரா, மன்னார்குடி அருகிலிருக்கும் சேரன்குளம் கோயில் மண்டபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் டிப்டாப்பான தோற்றத்தில் வந்த நபர் ஒருவர், சந்திராவின் அருகே தனது வண்டியை நிறுத்தி, ``நீங்க எங்க போகணும்’’ என அன்பாக விசாரித்திருக்கிறார். ``சித்தேரி போகணும்’’ என சந்திரா சொன்னதும், ``நான் அந்த வழியாகத்தான் போறேன்... உங்க வீட்லயே கொண்டு போயி விட்டுட்டுப் போறேன்" எனக் கூறி தனது இரு சக்கர வாகனத்தில் சந்திராவை அழைத்துச் சென்றிருக்கிறார்.

சந்திராவின் வீட்டுக்குச் சென்றதும், ``தாகமா இருக்கு. தண்ணீர் கொடுங்க’’ என சந்திராவிடம் அந்த நபர் கேட்டிருக்கிறார். சந்திரா தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தபோது, அவர் கழுத்தில் அணிந்திருந்த ஏழு சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு அந்த நபர் தனது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்று மாயமாகியிருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது தொடர்பாக கோட்டூர் காவல் நிலையத்தில் சந்திரா புகார் அளித்ததைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்தக் கொள்ளையனைத் தேடிக் கண்டுபிடிக்க, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயக்குமாரின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்காக 70-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீஸார் சோதனையிட்டனர். ஆங்காங்கே இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். இந்த நிலையில்தான், பெருகவாழ்ந்தானைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர்தான் மூதாட்டி சந்திராவிடமிருந்து நூதன முறையில் நகையைப் பறித்துச் சென்றதாக காவல்துறையினருக்கு துப்பு கிடைத்திருக்கிறது.

அதையடுத்து, போலீஸார் அவரது வீட்டைச் சுற்றிவளைத்தனர். அப்போது ஆனந்தன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றிருக்கிறார். ஆனாலும் சாதுர்யமாக அவரைச் சுற்றிவளைத்த காவல்துறையினர், அவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சந்திராவி்டம் ஆனந்தன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றது உறுதியானதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகம்
தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகம்

ஏற்கெனவே ஆனந்தன் மீது திருச்சி, திருவெறும்பூர், முத்துப்பேட்டை, பெருகவாழ்ந்தான், களப்பால் நீடாமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பது தெரியவந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். இந்த நூதன திருட்டுச் சம்பவம் குறித்துப் பேசும் திருவாரூர் காவல்துறையினர், ``சமீபகாலமாக திருடர்கள் புதுப் புது யுக்திகளைக் கடைப்பிடிக்கிறார்கள். ஆள்நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் நகையைப் பறித்துச் சென்றால் பிடிபட்டுவிடுவோம் என்பதாலேயே ஆனந்தன், சந்திராவிடம் அன்பாகப் பேசி, அவருக்கு உதவுவதுபோல் நடித்து, அவரது வாகனத்தில் சந்திராவை ஏறவைத்திருக்கிறார்.

கைது
கைது

மன்னார்குடி சேரன்குளம் பகுதியிலிருந்து கோட்டூர் செல்லும் வழியில் போக்குவரத்து அதிகம் என்பதால், இடையில் வாகனத்தை நிறுத்தி நகையைக் கொள்ளையடிக்காமல், மிகவும் தந்திரமாக அவரது வீட்டுக்கே அழைத்துச் சென்று, அங்கு தெருவில் ஆள்கள் நடமாட்டம் அதிகம் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு அதன் பிறகு சந்திராவிடமிருந்து நகையை ஆனந்தன் பறித்து, தப்பிச்சென்றிருக்கிறார். இது ஒரு பாணி. பொதுமக்கள் வெளியிடங்களில் யாரையும் நம்பி, அவர்களோடு செல்லக் கூடாது. இதில் கவனமாக இருக்க வேண்டும்" என எச்சரிக்கிறார்கள்.