விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூரைச் சேர்ந்தவர் குட்டி மாடசாமி. இவர் மீது, விருதுநகர் மாவட்ட காவல்நிலையங்களில் பல்வேறு கொலை, கொலை முயற்சி என 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு திருமணமாகி, சுப்புலட்சுமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் குடிப்பழக்கம் கொண்ட குட்டிமாடசாமி, போதையில் தன் மனைவி சுப்புலட்சுமியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சுமார் 5 வருடங்களுக்கு முன்பு இதேபோல் அவர், குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. தகராறு முற்றிய நிலையில் மாடசாமி வீட்டில் கிடந்த அரிவாளால் மனைவி சுப்புலட்சுமியை தாக்கியதாகத் தெரிகிறது. இது குறித்து தகவலறிந்த சுப்புலட்சுமியின் சகோதரர் விஜயகுமார், மாடசாமியை தட்டிக்கேட்டுள்ளார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅப்போது அவர்கள் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார், தன் சகோதரியின் கணவர் என்றும் பாராமல் மாடசாமியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, மாடசாமியின் உடலை யாருக்கும் தெரியாமல் எடுத்துச்சென்று, அந்தப் பகுதியில் உள்ள புத்தூர்மலை அடிவாரத்தில் குழித்தோண்டி புதைத்துள்ளார் விஜயகுமார். தொடர்ந்து கொலை செய்ததற்கான ஆதாரங்களையும் களைந்து தூக்கி வீசியெறிந்துள்ளார்.
கணவர் குறித்து அக்கம் பக்கத்தினர் கேட்டால், வெளியூரில் பணியாற்றி வருவதாக சமாளிக்கும்படி சுப்புலட்சுமியை அறிவுறுத்தியுள்ளார் விஜயகுமார். இதற்கு உடன்பட்ட சுப்புலட்சுமியும், தன் கணவர் கொலைசெய்யப்பட்டதை மறைத்து அக்கம்பக்கத்தினரை சமாளித்து வந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பாக மாடசாமியின் சகோதரி ராஜேஸ்வரி என்பவர், தன் சகோதரன் மாடசாமிக்கு கடனாக கொடுத்த ரொக்கப்பணத்தையும், பொருள்களையும் திருப்பித் தருமாறு சுப்புலட்சுமியிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்குள்ளும் வாய் தகராறு ஏற்பட்டு சண்டை முற்றியது. இதில் மனவேதனையடைந்த ராஜேஸ்வரி, சேத்தூர் காவல் நிலையத்தில் சுப்புலட்சுமி மீது புகார் அளித்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினர் சுப்புலட்சுமியிடம் நடத்திய விசாரணையில், மாடசாமி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியது. இதனையடுத்து கொலையாளி விஜயகுமார், கொலைக்கு உடந்தையாக இருந்த சுப்புலட்சுமியை சேத்தூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து விஜயகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் அளித்த வாக்குமுலத்தின்படி, புத்தூர் மலையடிவாரத்தில் மாடசாமி கொன்று புதைக்கப்பட்ட இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். அங்கு விஜயகுமார் அடையாளம் காட்டிய இடத்தில், வட்டாட்சியர் ராமச்சந்திரன், காவல் துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் மாடசாமியின் உடல் தோண்டப்பட்டு எலும்புக்கூடாக மீட்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திலேயே அரசு மருத்துவர் அருண் தலைமையில் உடற்பாகங்கள் கூறாய்வு செய்யப்பட்டன. பின்னர், முக்கியப் பாகங்கள் சேகரிக்கப்பட்டு தடய அறிவியல் சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து சேத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.