Published:Updated:

மாமனாரைக் கொலை செய்த மருமகன்; முன்னாள் தி.மு.க எம்.பி பேரன் படுகொலையில் நடந்தது என்ன?

போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இதனால், அவர்மீது போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவரைத் தொடர்ந்து விசாரித்ததில், தனது மாமனாரைக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகேயுள்ள பேளுக்குறிச்சி கல்லிட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், தி.மு.க முன்னாள் எம்.பி., ஜி.பி.சோமசுந்தரத்தின் பேரன். ஜி.பி.சோமசுந்தரம் நாமக்கல் மாவட்டத்தில் பிரபலமானவர். `முதல் தி.மு.க எம்.பி’, 'சேலத்து பெரியார்' என்றெல்லாம் அழைக்கப்படுபவர். இவருக்கு, ராசிபுரத்தில் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. இவரது பேரனான ராஜேந்திரன், தனது மனைவியுடன் கல்லிட்டேரியிலுள்ள தோட்டத்து வீட்டில் வசித்துவந்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.

கொலை செய்யப்பட்ட ராஜேந்திரன்
கொலை செய்யப்பட்ட ராஜேந்திரன்
நாமக்கல்: மனைவி கண்முன்னே படுகொலை செய்யப்பட்ட முன்னாள் எம்.பி-யின் பேரன்! -  நடந்தது என்ன?

மகள் சுபி சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த நவீன் (33) என்பவரைக் கடந்த ஆண்டு காதலித்து, திருமணம் செய்துகொண்டார். தற்போது, அவர் ஆத்தூரில் வசித்துவருகிறார். ராஜேந்திரனின் மகன், பெங்களூருவில் பணியாற்றிவருகிறார். கடந்த 12-ம் தேதி இரவு ராஜேந்திரன், தன் மனைவி சுகுணாவுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, வீட்டுக்குள் நுழைந்த நான்கு பேர்கொண்ட மர்மக் கும்பல் ஒன்று, ராஜேந்திரனைக் கத்தியால் கொடூரமாகக் குத்தியது. இதில், மார்பு உட்பட பல்வேறு இடங்களில் பலத்த காயமடைந்த அவர், அங்கேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இந்தப் படுகொலை குறித்து பேளுக்குறிச்சி காவல் நிலைய போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்தனர். மேலும், அவருடைய மருமகன் நவீனைப் பிடித்து விசாரித்தனர். போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இதனால், அவர்மீது போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவரைத் தொடர்ந்து விசாரித்ததில், தனது மாமனாரைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். கூலிப்படையை ஏற்பாடு செய்து இந்தக் கொலையைச் செய்ததாக அவர் தெரிவித்தார்.

நாமக்கல்
நாமக்கல்

போலீஸார் அவரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தியதில், ``என் மாமனார் ராஜேந்திரனுக்கு கோடிக்கணக்கான மதிப்புடைய சொத்துகள் உள்ளன. ஆனால், அந்தச் சொத்தில் எனக்குப் பங்கு தராமல் இழுத்தடித்துவந்தார். இதனால், நான் தொடர்ந்து அவரிடம், ``இந்தச் சொத்தில் எனக்கு பங்கு தர வேண்டும்" என்று கேட்டு வந்தேன். ஆனால், அவர் எனக்குப் பங்கு தர மறுத்து வந்தார். இதனால், நான் அவர்மீது ஆத்திரத்தில் இருந்தேன். சில நாள்களுக்கு முன்பு, அவர் தனது நிலத்தை பேளுக்குறிச்சியைச் சேர்ந்த ஒருவருக்கு விற்றார். அந்தப் பணத்தைக் கேட்டபோது, எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால், நான் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டேன். அதற்காக, ராதாகிருஷ்ணன், சேலம் ஊத்துமலை அடிவாரத்தை சேர்ந்த மகேந்திரன், ஆத்தூர் மஞ்சினியை சேர்ந்த சுரேஷ், சேலம் எருமாபாளையத்தை சேர்ந்த ஜீவானந்தம் ஆகியோருக்கு இரண்டு லட்சத்துக்கு மேல் பணம் கொடுத்து, என் மாமனாரைக் கொலை செய்ய அனுப்பிவைத்தேன்’’ என்று வாக்குமூலம் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு