Published:Updated:

மது அருந்துவதற்கு பணம் தர மறுத்ததால் பாட்டிக்கு நிகழ்ந்த விபரீதம்; போலீஸ் விசாரணையில் கைதான பேரன்!

வெகு நேரமாகியும் சுசிலா வீட்டைவிட்டு வெளியில் வராததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் தாழிடப்பட்டிருந்த கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்திருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தை அடுத்த பசுவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுசிலா (72). சோழவரம் அரசுப் பள்ளியில் சத்துணவு பணியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சுசிலா, பசுவன்பாளையத்தில் தனியாக வசித்துவந்தார். இந்தநிலையில், சென்னை வானகரத்திலுள்ள சுசிலாவின் மகன் வழிப் பேரன் ஜெகன் (30) நேற்று முன்தினம் தனது குடும்பத்தினரிடம் சண்டை போட்டுவிட்டு, மூதாட்டி சுசிலாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறான். ஏற்கெனவே, மது போதையிலிருந்த ஜெகன் மீண்டும் மது அருந்துவதற்காகப் பணம் கேட்டு தனது பாட்டி சுசிலாவைத் தொந்தரவு செய்திருக்கிறான். ஆனால், சுசிலா தன்னிடம் பணம் இல்லையென்றும், எதற்காகக் குடித்துவிட்டு வந்திருக்கிறாய் என்றும் ஜெகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

கொலை செய்யப்பட்ட சுசிலா
கொலை செய்யப்பட்ட சுசிலா
சென்னை: `சுட்டித்தனம், அளவுக்கு அதிகமான கோபம்' - தம்பி கொலை வழக்கில் அக்கா சிக்கியது எப்படி?

அதில் ஆத்திரமடைந்த ஜெகன், சமையல் அறையில் நின்றுகொண்டு, தன்னை கண்டித்துக்கொண்டிருந்த பாட்டி சுசிலாவை மது போதையில் தோசைக்கல்லை எடுத்து தலையில் பலமாகத் தாக்கியிருக்கிறான். அதில், மண்டை உடைபட்டு மூதாட்டி சுசிலா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். பாட்டி உயிரிழந்ததை அடுத்து பயந்துபோன ஜெகன் தோசைக்கல்லை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பித் தலைமறைவானான்.

வெகு நேரமாகியும் சுசிலா வீட்டைவிட்டு வெளியில் வராததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் தாழிடப்பட்டிருந்த கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்திருக்கின்றனர். அங்கு சுசிலா உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள், இது தொடர்பாக உடனடியாக சோழவரம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், மூதாட்டி சுசிலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதைத் தொடர்ந்து, கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜெகனை தீவிரமாகத் தேடிவந்தனர். இந்தநிலையில், வானகரம் அருகே உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஜெகனை சோழவரம் போலீஸார், தற்போது கைதுசெய்திருக்கின்றனர்.

சம்பவம் குறித்து சோழவரம் போலீஸார் கூறுகையில், ``ஜெகன், நேற்று முன்தினம் இரவு பசுவன்பாளையம் பகுதியிலுள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்று குடிப்பதற்குப் பணம் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறான். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் போதையிலிருந்த ஜெகன் தோசைக்கல்லால் மூதாட்டியை பலமாகத் தாக்கிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பித்துவிட்டான்.

சோழவரம் காவல் நிலையம்
சோழவரம் காவல் நிலையம்

நாங்கள் வானகரம் பகுதிக்குச் சென்று, அவனது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டதில் அருகில் உறவினர் ஒருவரின் வீட்டில் அவன் பதுங்கியிருந்தது தெரியவந்தது. அங்கு சென்று அவனைக் கைதுசெய்து சோழவரம் காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்திருக்கிறோம். விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு