Published:Updated:

சென்னை: மனைவிக்குச் சாப்பாடு வாங்க சென்ற ரௌடி வெட்டிக் கொலை! - மருமகன் கண் எதிரில் நடந்த கொடூரம்

கொலைசெய்யப்பட்ட ரௌடி கருக்கா சுரேஷ்

சென்னையில் மனைவிக்கு சாப்பாடு வாங்க மருமகனுடன் நடந்து சென்ற ரௌடி கருக்கா சுரேஷ் என்பவர் கொடூரமாக கொலைசெய்யப்பட்டார்.

சென்னை: மனைவிக்குச் சாப்பாடு வாங்க சென்ற ரௌடி வெட்டிக் கொலை! - மருமகன் கண் எதிரில் நடந்த கொடூரம்

சென்னையில் மனைவிக்கு சாப்பாடு வாங்க மருமகனுடன் நடந்து சென்ற ரௌடி கருக்கா சுரேஷ் என்பவர் கொடூரமாக கொலைசெய்யப்பட்டார்.

Published:Updated:
கொலைசெய்யப்பட்ட ரௌடி கருக்கா சுரேஷ்

சென்னை புளியந்தோப்பு நரசிம்மன் நகரைச் சேர்ந்தவர் பிரதீப் என்கிற அப்பு. இவர் கொரட்டூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ``என்னுடைய மாமா சுரேஷ். அவருக்கு சிறு வயதில் பல் சொத்தையாக இருந்தததால் என்னுடைய மாமாவை கருக்கா சுரேஷ் என்று அழைப்பார்கள். கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த கமலா என்பவரை என்னுடைய மாமா சுரேஷ், திருமணம் செய்துகொண்டார். என்னுடைய மாமி கமலா, அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள 87-வது வார்டில் மூர்த்தி நகரில் உள்ள அலுவலகத்தில் துப்பரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அதனால் என்னுடைய மாமா சுரேஷ், துப்பரவு பணியில் மனைவிக்கு அடிக்கடி உதவி செய்து வருவார்.

கொலை
கொலை

என் மாமா சுரேஷ் மீது புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ், எம்.கே.பிநகர் ஓட்டேரி, ராயப்பேட்டை மற்றும் சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்கு உட்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. கடந்த 14.12.2022-ம் தேதி காலையில் என்னுடைய மாமி கமலா, வேலைக்குச் சென்றுவிட்டார். நானும் என் மாமா சுரேஷும் மாமி கமலாவைப் பார்க்க பாடியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்றோம். பின்னர் மாமி கமலாவுக்கு மதியம் சாப்பாடு வாங்க நானும் மாமா சுரேஷும் பாடி வன்னியர்தெருவில் உள்ள கடைக்கு நடந்துச் சென்று கொண்டிருந்தோம். அப்போது இரண்டு பைக்குகளில் 6 பேர் வந்தனர். அதில் மூன்று பேர் மாமா சுரேஷை வழிமறித்து தலை, முகம், கழுத்து என மாறி மாறி வெட்டினார்கள். அதனால் நிலை குலைந்து சம்பவ இடத்திலேயே மாமா சுரேஷ் உயிரிழந்துவிட்டார்.

மூன்று பேரில் ஒருவன் ரெட் கலர் முழுக்கை சட்டை அணிந்திருந்தான். லைட் புளுக்கலர் பேன்ட் போட்டவன், கோடரியால் மாமாவை வெட்டினான். என்னை நோக்கி வந்தபோது நான் தப்பி ஓடிவிட்டேன். ஆனால் அவர்களை பார்த்தால் அடையாளம் காட்டுவேன். பின்னர் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். எனவே என்னுடைய மாமாவைக் கொலைசெய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 148, 341, 302 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்தார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் கொலையாளிகளைத் தேடிவந்தனர்.

கொலை
கொலை

இந்த நிலையில் கொலை வழக்கில் தேடப்பட்ட மூன்று பேர் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கின்றனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. அவர்கள் அளித்த தகவல்படி மற்றவர்களைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய கொரட்டூர் போலீஸார், ``கொலைசெய்யப்பட்ட ரௌடி கருக்கா சுரேஷின் சடலத்தை, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம். கொலையாளிகளை நெருங்கிய நிலையில்தான் மூன்று பேர் சரணடைந்திருக்கிறார்கள். மற்றவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். கருக்கா சுரேஷை பின்தொடர்ந்து வந்து இந்தக் கும்பல் கொலைசெய்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது" என்றனர்.

சென்னை, அம்பத்தூர் பாடி பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலை சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.