Published:Updated:

எல்லை தாண்டா திருடர்கள்... காட்டிக் கொடுத்த கொரோனா!

பூட்டிய வீடுகளில் மட்டுமே திருட வேண்டும்; யாரையும் தாக்கிக் கொள்ளையடிக்கக் கூடாது; உள்ளூரில் கொள்ளையடிக்கக் கூடாது.

பிரீமியம் ஸ்டோரி

‘சூதுகவ்வும்’ திரைப்படத்தில், ஆட்கடத்தல் செய்து பணம் சம்பாதிப்பதற்குச் சில விதிமுறைகளைக் கடைப்பிடிப்பார் நடிகர் விஜய் சேதுபதி. அதுபோல் தங்களுக்கு என்று குறிப்பிட்ட சில விதிமுறைகளை வைத்துக்கொண்டு கொள்ளையடித்துவந்த இரு சகோதரர்கள், கொரோனா ஊரடங்கு காலத்தில் அந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாமல் போகவே போலீஸில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

சத்தமே வராமல் பூட்டை உடைத்து திருடுவதில் கில்லாடியான அந்தச் சகோதரர்களின் பாலிசி இவைதான்... பூட்டிய வீடுகளில் மட்டுமே திருட வேண்டும்; யாரையும் தாக்கிக் கொள்ளையடிக்கக் கூடாது; உள்ளூரில் கொள்ளையடிக்கக் கூடாது.

இவர்கள் தங்கள் பாலிசியை சரிவரக் கடைப்பிடித்துக்கொண்டிருந்தவரை அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல்தான் போய்க்கொண்டிருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக பாலிசியை மீறி, உள்ளூரிலேயே கைவரிசையைக் காட்ட... சிக்கிக்கொண்டனர்.

தமிழ்ச்செல்வன் - ஆதவன்
தமிழ்ச்செல்வன் - ஆதவன்

அண்ணன் தமிழ்ச்செல்வன் மீது முத்தாபுதுப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்ய... தம்பி ஆதவன்மீது ஆவடி டேங்க் ஃபேக்டரி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ‘‘ஒவ்வொரு திருடனுக்கும் ஒரு திருட்டு ஸ்டைல் உண்டு. அதை வைத்துத்தான் அவர்களை அடையாளம் காண்போம். இவர்கள் சிக்கிக்கொண்டது அப்படித்தான்’’ என்று கூறும் போலீஸார், இருவரையும் கைது செய்தது எப்படி என்பதை விவரித்தனர்.

‘‘ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளான மோரை, பங்காருப்பேட்டை, ஆலத்தூர், மிட்டனமல்லி ஆகிய இடங்களில் பூட்டிய வீடுகளில் ஊரடங்கு காலகட்டத்தில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன. அது தொடர்பாக ஆவடி டேங்க் ஃபேக்டரி, முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்தன. திருட்டு நடந்த வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுக் காட்சிகளை ஆய்வு செய்தோம். அப்போது பூட்டை உடைத்து இரண்டு இளைஞர்கள் பொருள்களைத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

விசாரணையில் இறங்கியபோது, திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டது ஆவடி வீராபுரத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனும் அவரின் தம்பி ஆதவனும் எனத் தெரியவந்தது. அவர்கள் மீது தமிழகம் முழுவதும் பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறு வயதிலேயே திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கிய தமிழ்ச்செல்வன், சிறையிலேயே அதிக நாள்கள் இருந்திருக்கிறார். அதனால், அவருக்குச் சிறையில் நிறைய நண்பர்கள் கிடைத்தனர். அவர்கள் மூலம் தமிழகம் முழுவதும் திருடத் தொடங்கினார். எங்கு திருடினாலும் தமிழ்ச்செல்வன் குடியிருக்கும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் திருட மாட்டார். அப்படியொரு பாலிசியைக் கடைப்பிடித்துவந்தார்.

எல்லை தாண்டா திருடர்கள்... காட்டிக் கொடுத்த கொரோனா!

தமிழகத்தின் பிற பகுதிகளில் திருடிவிட்டு சென்னைக்கு வரும் தமிழ்ச்செல்வன், ஆதவன் இருவரும் தங்கள் சொந்த வீட்டில் தங்க மாட்டார்கள். அதற்கு பதிலாக மோரையில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்தோடு தங்கிக் கொள்வார்கள். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் போலீஸார் இவர்களைத் தேடி சென்னை ஆவடிக்கு வரும்போது இருவரின் வீடுகளும் பூட்டியே இருக்கும். இதனால் தமிழ்ச்செல்வன், ஆதவனைப் பிடிக்க முடியாமல் போலீஸார் ஏமாந்து சென்ற சம்பவங்களும் நடந்துள்ளன.

தமிழ்ச்செல்வன், தனக்கு உதவியாக தன் தம்பி ஆதவனைச் சில ஆண்டு களாக அழைத்துச் சென்றுள்ளார். சத்தம் வராமல் பூட்டை உடைப்பது எப்படி என்ற டெக்னிக்கை அவருக்கும் கற்றுக் கொடுத்துள்ளார். திருடிய நகைகளை வீட்டின் அருகிலேயே குழிதோண்டி புதைத்து வைத்துவிடுவார் தமிழ்ச்செல்வன். தேவைப்படும்போது மட்டும் அதை எடுத்து விற்று, செலவழித்து வந்துள்ளார். தமிழ்ச்செல்வன், ஆதவன் இருவர்மீதும் தஞ்சாவூர், காரைக்குடி, திருவாரூர், வாணியம்பாடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, மதுரை. திருப்பூர், கோவை உள்ளிட்ட காவல் நிலையங்களில் 50 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன’’ என்றார்கள்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ‘‘ஊரடங்கு காரணமாக சென்னையிலிருந்து தமிழ்ச்செல்வன், ஆதவனால் வெளியூர் சென்று திருட முடியவில்லை. ஊரை நம்பவைக்க ஆவடி பகுதியில் சின்ன ஹோட்டல் நடத்திவருகிறார் தமிழ்ச்செல்வன். ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாததால் சென்னையில் திருடியுள்ளார். சென்னையிலுள்ள கட்சித் தலைவர் ஒருவரின் வீட்டில் தமிழ்ச்செல்வன் நகை, பணத்தைத் திருடியதாக விசாரணையின்போது தெரிவித்தார். ஆனால், சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர் தரப்பில் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட வில்லை.

தமிழ்ச்செல்வன் திருப்பூரில் இருந்த சமயத்தில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மகளைக் காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது அந்தப் பெண்ணுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. அதனால் தமிழ்ச்செல்வன் திருடன் என்று தெரிந்தும், வேறு வழியின்றி அந்தப் பெண் வாழ்ந்துவருகிறார். திருடிய நகைகளைத் தமிழ்ச்செல்வனும் ஆதவனும் விற்றுவிட்டதால் இவர்களிடமிருந்து சொற்ப அளவிலான நகைகள், எல்.இ.டி டி.வி, லேப்டாப் ஆகியவற்றை மட்டுமே பறிமுதல் செய்ய முடிந்தது’’ என்றார்.

தமிழ்ச்செல்வனிடம், ‘சத்தமே வராமல் பூட்டை உடைப்பது எப்படி?’ என்று போலீஸார் கேட்டதற்கு, அதைச் செயல் முறையாக செய்து காட்டியுள்ளார். பூட்டுக்குள் இரும்புக்கம்பியை நுழைத்த தமிழ்ச்செல்வன், குறிப்பிட்ட ஒரு கருவியைப் பயன்படுத்தி கம்பியை அழுத்தியதும், பூட்டின் லாக் சத்தமே இல்லாமல் உடைந்தது. ‘எவ்வளவு பெரிய பூட்டு என்றாலும் இப்படித்தான் உடைப்பேன்’ என்று தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

தமிழ்ச்செல்வன் பூட்டை உடைத்தபோது சத்தமே வராததை ஆச்சர்யத்துடன் ஆவடி சரக போலீஸார் வேடிக்கை பார்த் துள்ளனர். அதன் பிறகு ஆதவனும் அதே ஸ்டைலில் பூட்டை உடைத்துக் காட்டியுள்ளார். இவர்கள் இருவரும் தற்போது சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

பூட்டு பத்திரம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு