Published:Updated:

பழவேற்காடு: 180 மூட்டை ரேஷன் அரிசி; கடல் மார்க்கமாகக் கடத்தல்!’ - ரகசிய தகவலால் சிக்கிய தந்தை, மகன்

கடல் மார்க்கமாக ரேஷன் அரிசி கடத்திய தந்தை, மகன் கைது
கடல் மார்க்கமாக ரேஷன் அரிசி கடத்திய தந்தை, மகன் கைது

பழவேற்காட்டிலிருந்து ஆந்திராவுக்கு நாட்டுப் படகுகள் மூலம் ரேஷன் அரிசி கடத்த முயன்ற தந்தை, மகன் இருவரைக் கைதுசெய்த கடலோர காவல் படையினர், அவர்களிடமிருந்து 181 ரேஷன் அரிசி, பருப்பு மூட்டைகளைப் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் ஒன்றான திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லாரிகள், ரயில்கள் மூலம் ரேஷன் அரிசி, மூட்டை மூட்டையாகக் கடத்தப்பட்டுவருகிறது. ஆனால், சமீபகாலமாக வருவாய்த்துறையினரும் காவல்துறையினரும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாகத் தீவிரமாகக் கண்காணித்துவருவதால், அரிசி மாஃபியாக்கள் நூதன முறையில் கடல் மார்க்கமாக ரேஷன் அரிசியை அண்டை மாநிலமான ஆந்திராவுக்குக் கடத்திக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி, கடல் மார்க்கமாக அரிசியை ஆந்திராவுக்குக் கடத்தும் கடத்தல்காரர்கள் பழவேற்காடு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைக் குறிவைத்துச் செயல்பட்டுவருகின்றனர். பழவேற்காடு, கருங்காலி, சாத்தான்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களிலிருந்து பழவேற்காடு ஏரியின் மூலம் படகுகளில் ஆந்திராவுக்குச் சட்டவிரோதமாகக் கடத்திவருகின்றனர். இது தொடர்பாக, பழவேற்காடு கிராம மக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தொடர்ச்சியாகப் புகார்கள் அளித்துவந்தனர். இந்தநிலையில், பழவேற்காட்டை அடுத்த சாத்தான்குப்பம் கிராமத்திலிருந்து நாட்டுப் படகுகள் மூலம் ஆந்திர மாநிலம், நெல்லூருக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொன்னேரி தாசில்தார் மணிகண்டன் பழவேற்காடு கடலோர காவல் படையினரை நேற்றைய தினம் உஷார்ப்படுத்தினார்.

கடத்தப்பட்ட ரேஷன் அரிசி
கடத்தப்பட்ட ரேஷன் அரிசி

அதைத் தொடர்ந்து, நேற்று மாலை முதலே கடலோர காவல் படையினர் பழவேற்காடு ஏரியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர். இன்று காலை பழவேற்காடு ஏரியிலிருந்து இரண்டு நாட்டுப் படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவை நோக்கி விரைந்துகொண்டிருக்கவே, அதைக் கண்டு சந்தேகமடைந்த கடலோர காவல் படையினர், அந்தப் படகுகளை விரட்டிச் சென்று, வழிமறித்து சோதனை செய்ததில் அவற்றில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி, சட்ட விரோதமாகக் கடத்தப்படுவதை உறுதிசெய்தனர். தொடர்ந்து, திருபாலைவனம் போலீஸாருக்கும், பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு, கடத்தலில் ஈடுபட்ட இருவரைக் கைதுசெய்து அரிசி மூட்டைகளுடன் படகுகளைக் கரைக்குக் கொண்டுவந்தனர்.

கைதுசெய்யப்பட்ட தந்தை, மகன்
கைதுசெய்யப்பட்ட தந்தை, மகன்

அதையடுத்து, பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் உமா சங்கரி தலைமையில் படகுகளைச் சோதனை செய்த வருவாய்த்துறையினர் இரண்டு நாட்டுப் படகுகள் மூலம் மொத்தம் 180 மூட்டை ரேஷன் அரிசி, ஒரு பருப்பு மூட்டை உள்ளிட்டவற்றைப் படகிலிருந்து பறிமுதல் செய்து, லாரியில் ஏற்றி பொன்னேரியை அடுத்த பஞ்செட்டி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்குக்கு அனுப்பிவைத்தனர்.

பழவேற்காடு: 180 மூட்டை ரேஷன் அரிசி; கடல் மார்க்கமாகக் கடத்தல்!’  - ரகசிய தகவலால் சிக்கிய தந்தை, மகன்

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைதுசெய்த மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் கைதானவர்கள் ஆந்திர மாநிலம், பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தந்தை, மகன் என்பது தெரியவந்துள்ளது. போலீஸார் தொடர்ந்து ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தப்பட்டது, இந்தக் கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கேரளாவுக்குச் செல்லும் புகையிலை, ரேஷன் அரிசி மூட்டைகள்... கடத்தல் கேந்திரமான குமரி எல்லை?
அடுத்த கட்டுரைக்கு