குடித்துவிட்டு தாயிடம் ரகளை:
பூந்தமல்லி அருகேயுள்ள கரையான்சாவடிப் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான கணேசன். இவர் பெயின்ட்டராக வேலை பார்த்துவருகிறார். தீவிர குடிப்பழக்கம் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பாக கணேசனின் மனைவி அவரைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தாய், தம்பிகள் மணி (35), குமார் (30) ஆகியோருடன் கணேசன் வசித்துவந்திருக்கிறார்.

கணேசன் தினமும் மது குடித்துவிட்டு வந்து தன் தாயுடன் தகராறு செய்து, தகாத வார்த்தைகளால் திட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால், அவரின் தம்பிகள் இருவரும் தொடர்ந்து அவரைக் கண்டித்துவந்துள்ளனர். இருந்தபோதிலும், அவர் அதைத்தான் தொடர்ந்து செய்துவந்திருக்கிறார். இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று போதையில் அவரின் அம்மாவைத் தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். ஆத்திரமடைந்த அவரின் தம்பிகள் கணேசனின் கழுத்தில் கத்தியாலும், கத்தரிக்கோலாலும் குத்திக் கொலை செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தற்கொலை என்று நாடகம்:
இதனால் சம்பவ இடத்திலேயே கணேசன் உயிரிழந்தார். என்ன செய்வதென்று தெரியாத குடும்பத்தினர் கணேசனின் உடலை இரவு முழுவதும் வீட்டிலேயே வைத்திருந்திருக்கிறார்கள். காலையில் கணேசனின் தாய் கதறி அழும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணேசன் இறந்து கிடந்திருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி பகுதி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர், கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

காவல்துறையினர் அவரின் தாயிடம் நடத்திய விசாரணையில், கணேசன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்த போலீஸார் அவரின் தம்பிகளைத் தேடியுள்ளனர். தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில், மணியும் குமாரும் கொலை செய்தது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த கணேசனின் தம்பிகள் இருவரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தினமும் குடித்துவிட்டு வந்து தாயைத் தவறாகப் பேசியதால் ஆத்திரத்தில் கொலைசெய்துவிட்டதாகக் கூறியுள்ளார்கள்.