மயிலாடுதுறை அருகே கணவனை அரிவாளால் வெட்டிக் கொலைசெய்த மனைவி, மகனுடன் காவல் நிலையத்தில் ஆஜரான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே கொற்கை கிராமத்தைச் சேர்ந்த கண்ணையன் மகன் மகாதேவன் (வயது 53). இவரின் மனைவி அமுதா (வயது 37). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகாதேவன் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல், குடிப்பதற்கு பணம் கேட்டு தகறாறு செய்வதும்... மனைவியை அடித்து துன்புறுத்துவதுமாக இருந்திருக்கிறார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு குடிக்க பணம் தரமறுத்த மனைவியின் வலது கையை கட்டையால் அடித்து உடைத்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், நேற்றிரவு (04.07.2022) மனைவியை மிரட்டி ரூ.500 பணம் வாங்கிக் கொண்டு குடித்துவிட்டு, இரண்டு பீர் பாட்டில்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தகராறில் மூத்த மகன் ராஜராஜசோழன், "அம்மாவை ஏன் அடிக்கிறாய்?" என்று கேட்டதற்கு பீர் பாட்டிலை உடைத்து மகனின் வயிற்றில் குத்தியிருக்கிறார். அதனைத் தடுத்த மனைவியை அரிவாள் எடுத்து வந்து வெட்ட முயன்றதாகக் கூறப்படுகிறது. பதிலுக்கு அமுதாய அந்த அரிவாளைப் பிடுங்கி கணவன் கழுத்தில் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே மகாதேவன் உயிரிழந்தார். பின்னர் தன் மகனுடன் மணல்மேடு காவல் நிலையத்திற்கு வந்து ஆஜரானார் அமுதா.

இது குறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து சடலத்தை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.